செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும்

  • 29 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை Reuters
Image caption அரசர் அப்துல்லா

செளதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கத்திற்கு காரணம் என்ன? ஒரு சர்வாதிகாரி அரசருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியமானது?

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி உலகம் முழுவதும் நீட்டி முழங்கி பிரசாரம் செய்யும் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவில் மட்டும் அதை ஏன் முன்னெடுப்பதில்லை?

சதாம் ஹுசைன் சர்வாதிகாரி என்று கூறி இராக் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. ஆனால், செளதி அரேபியாவின் சர்வாதிகார ஆட்சி அமெரிக்காவிற்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்லையா? செளதி, ஜனநாயக நாடு கிடையாது, அங்கு மனித உரிமைகள் பெரிய அளவில் மதிக்கப்படுவதில்லை. இன்றைய காலகட்டத்தில்கூட பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை. ஆனால் இதை அமெரிக்கா கண்டும்காணாமல் மௌனமாக இருக்கிறது.

செளதி அரேபியாவின் சர்வாதிகாரத்தை மட்டும் அமெரிக்காவின் நவீனத்துவ கொள்கைகள் புறக்கணிப்பது ஏன்?

2015 ஜனவரி மாதத்தில் செளதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா நுரையீரல் தொற்றுநோயால் மரணமடைந்தபோது, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அமெரிக்கத் தலைவர்கள் பலர் வந்தார்கள். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதில் செளதி அரசர் அப்துல்லாவின் பங்களிப்பு பிரதானமானது என்று அவரை பாராட்டினார் அப்போது அமெரிக்க அதிபராக பதவி வகித்த பாரக் ஒபாமா.

செளதி அரசர் அப்துல்லா தொலைநோக்கு பார்வை கொண்டவர், விவேகி என்று அன்றைய வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டு தெரிவித்தார். அரசர் அப்துல்லாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செளதி அரேபியாவுக்கு செல்லும் அமெரிக்க குழுவிற்கு தலைமை தாங்குவதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் அறிவித்தார்.

அமெரிக்காவின் அன்பிற்கு காரணம் என்ன?

அரசர் அப்துல்லாவின் மரணத்திற்கு அமெரிக்கா இவ்வளவு முக்கியத்துவம் அளித்தது வியப்பூட்டவில்லை. செளதி அரேபியாவும் அமெரிக்காவும் பல தசாப்தங்களாக நட்பு நாடுகள். ஆனால், இரு நாடுகளின் செயல்பாடும் கொள்கைகளும் வேறு என்பதால், அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவிற்கும் இடையேயான முரண்பாடுகளுக்கும் பஞ்சமில்லை.

செளாதி அரேபியாவில் மனித உரிமைகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது, பிராந்திய அமைதியில் செளதியின் பங்கு போதுமானதா என்ற கேள்வியும் இருக்கிறது. செளதி அரேபியாவுடன்அமெரிக்கா, நட்பு பாராட்ட வேண்டிய கட்டாயம், முன்பு எப்போதையும்விட தற்போது மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அரசர் அப்துல்லாவிற்குப் பிறகு, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான் ஆட்சிப்பொறுப்பேற்றார். அவர், அமெரிக்கா தொடர்பான அப்துல்லாவின் கொள்கைகளையே பின்தொடர்ந்தார். செளதி அரேபியா மன்னராட்சியின் கீழ் இயங்கும் நாடு என்பதும், அங்கு எதிர்கட்சியே கிடையாது என்பதும் அனைவரும் அறிந்ததே.

படத்தின் காப்புரிமை Getty Images

பல மதங்கள், மத சகிப்புத்தன்மை போன்றவற்றை செளதியில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அந்நாட்டு மக்கள் தொகையில் 42.5 சதவிகிதத்தினர் பெண்கள். ஆரம்பக் காலங்களில் செளதியில், பெண்களும், குழந்தைகளைப்போல் நடத்தப்பட்டனர். செளதி அரேபியாவில் 'பாதுகாவலர்' அமைப்பு ('Guardianship' system) பின்பற்றப்படுகிறது. இந்த அமைப்பின்படி, பெண்கள் வேலை அல்லது பயணத்திற்காக வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு ஆண்களின் அனுமதியைப் பெற வேண்டும்.

செளதி அரசர் அப்துல்லாவின் 15 மகள்களில், நான்கு பெண்கள் 13 ஆண்டுகள்வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா? இவர்கள் நால்வரும், பெண்கள் தொடர்பான அரசின் கொள்கைகளை விமர்சித்ததுதான். இவர்களில் இருவருக்கு சரியான உணவுகூட கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இளவரசிகளின் நிலையே இதுவென்றால், சாதாரண குடிமகளின் நிலையை கணிப்பது கடினமானதல்ல.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு அப்துல்லா குறிப்பிடத்தக்க பங்காற்றியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது உண்மைதான். எகிப்தில், ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக, ஜனநாயக ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடியபோது, அரசர் அப்துல்லா அதை எதிர்த்தார்.

ஹோஸ்னி முபாரக்கின் அதிகாரத்தை காப்பாற்ற வேண்டும் என அப்துல்லா, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் ஒருபுறம் கேட்டுக் கொள்ள, மறுபுறம், ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை அமெரிக்கா ஆதரித்தது.

எண்ணெய் விளையாட்டு

எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவ கட்சிக்கு நீண்ட காலமாக தொடர் ஆதரவு வழங்கிவந்த செளதி அரசர் அப்துல்லா, செளதி அரேபிய பிராந்தியத்தில் ஷியா இயக்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டார். இவை இரானுக்கு பாதிப்புகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று அப்துல்லா கருதினார். ஷியா எதிர்ப்பாளர்கள் அண்டை நாடான பஹ்ரைனில் சர்வாதிகாரத்திற்கு சவால்விட்டபோது, செளதி அரேபிய ராணுவத்தை அங்கு அனுப்பினார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு செளதி அரேபியா உதவியது, ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு செளதி நிதியுதவி கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இப்படி பல விவகாரங்கள் இருந்தாலும், செளதி அரேபியாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா காட்டிக்கொள்ள விரும்புவது ஏன்? வாஷிங்டனில் உள்ள, வளைகுடா விவகாரங்களுக்கான நிறுவனம் (Institute for Gulf Affairs) என்ற நிறுவனத்தில் பணிபுரியும் செளதி அரேபியா விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற அலி அல்-அஹ்மத், ஒற்றை வார்த்தையில் அளிக்கும் பதில் - 'எண்ணெய்'.

"செளதியும் அமெரிக்காவும் இயல்பான நண்பர்களல்ல, ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பதில் தயக்கம் காட்டாது. இரு தரப்பும் பரஸ்பர நலனுக்காக மற்றொன்றை பயன்படுத்திக் கொள்கின்றன. 1940களுக்குப் பிறகு, செளதி அரேபியாவிலிருந்து அமெரிக்காவிற்கு மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கிறது. இதுதான் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் ரகசியம். வேறு பல விஷயங்கள் இருந்தாலும், எண்ணெய் மிகவும் முக்கியமானது."

படத்தின் காப்புரிமை Getty Images

"கம்யூனிசத்திற்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக செளதி அரேபியாவும் கடுமையாக போராடியது. ஆப்கானிஸ்தானின் 'ஜிகாத்'-இல், செளதியின் பங்கு முக்கியமானது என்பதையும், அதனால் ரஷ்யா அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது என்பதையும் உதாரணமாக கூறலாம்.

இருந்தாலும், மூன்று தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் கடுமையான போர்ச்சூழல் நிலவுகிறது. அதன் விளைவு? தலிபன் மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாகின. அது மட்டுமா? அதன் தொடர்ச்சியாக 9/11 தாக்குதல்கள் நடைபெற்றன. இன்றும்கூட ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போர் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதா என்பது கேள்விக்குறியே!

"செளதி அரேபியா, நிதியுதவி அளித்து, தங்கள் நாட்டு ராணுவத்துக்கு எதிராகவே ஆப்கானிஸ்தான் மக்களை சண்டையிட வைத்தது. இந்த விஷயத்தில், தான் சொன்னதை நிறைவேற்றிய செளதி அரேபியாவின் செயல்கள் அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியளித்தது. பனிப்போர் முடிந்தபின், செளதிக்கு அமெரிக்காவிடம் இருந்து பல நன்மைகள் கிடைத்தன'' என்கிறார் அலி அல்-அஹ்மத்.

இரானால் இந்த நாடுகளுக்கு எதிராக எதையும் செய்யமுடியவில்லை. தற்போது, இரான் செளதிக்கு வெளிப்படையான எதிரியாகிவிட்டது. இரான் தொடர்பான விவகாரத்தில் செளதி மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் ஒன்றே. 1979 ல் இரான் புரட்சியின்போது, புரட்சிக்கு ஆதரவாக செளதி அரேபியாவிற்கு தேவையான ஊக்கங்களை அளித்தது அமெரிக்கா. பெர்சியா வளைகுடாவில் அமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா 200 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. நிச்சயமாக, செளதிக்கு இந்த இந்த ராணுவத் தளம் வலுவூட்டுகிறது."

படத்தின் காப்புரிமை Getty Images

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு ஒபெக் (OPEC). உலக எண்ணெய் உற்பத்தியில் 40% எண்ணையை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள்தான் உற்பத்தி செய்கின்றன. செளதி அரேபியா, இந்த கூட்டமைப்பின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர். அண்மை ஆண்டுகளில் அமெரிக்கா மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்து வருகிறது, எனவே இதுவும், அமெரிக்கா-செளதி நட்புக்கு முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா தனது நிலத்திலிருந்தே எண்ணெய் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில், செளதி அரேபியாவின் உதவி அமெரிக்காவிற்கு தேவையானதாக இருக்காது என்று கூறப்படுகிறது. அமெரிக்கா நாள்தோறும் 90 மில்லியன் பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் உற்பத்தி செய்கிறது, இது கிட்டத்தட்ட செளதியின் எண்ணெய் உற்பத்திக்கு சமம் என்பது, நட்பின் அஸ்திவாரத்தில் விரிசல்கள் எழலாம் என்பதை சூசகமாக சுட்டிக்காட்டுகிறது.

வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து 80 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கும் என்பதோடு, 2035ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் எண்ணெய்த் தேவைகள் பூர்த்தியாகிவிடும். வட அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தியின் இந்த அதிகரிப்பு உலக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

செளதி மற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகத்தில் இடம் பெறும் முக்கியப் பொருட்கள், எண்ணெய் மற்றும் ஆயுதங்கள். ஒபாமா நிர்வாகம் செளதி அரேபியாவிற்கு 95 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்தது. செளதி அரேபியாவுடனான அமெரிக்காவிற்கு கருத்து வேறுபாடுகளே இல்லையா? ஏன் இல்லாமல்? அதற்கும் பஞ்சம் இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியா, இரான், இஸ்ரேல்-பாலத்தீன மோதல்கள் மற்றும் எகிப்தில் ஜனநாயகம் மலர்ந்தது போன்ற பல விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவது செளதிக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா நிர்வாகம் அதை முன்னெடுத்தது. இருந்தாலும் தற்போதைய அதிபர் டிரம்ப், இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விலக்கிக்கொண்டார்.

செளதி அரேபியாவின் எதிர்கால நிலைமை மோசமாகலாம்; நிலைத்தன்மை இழக்கலாம் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள். செளதி அரேபியா முன்னெப்போதும் இல்லாத அளவு பல கடுமையான சிக்கல்களை எதிர் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

செளதி அரேபியாவின் அதிகாரம் இப்போது பட்டத்து இளவரசர் சல்மானின் கைகளுக்கு முழுமையாக வந்துவிட்டது. அவரது முடிவுகள் மீது கேள்வி எழுப்பப்படுகிறது. அனுபவமற்றவர் என அவர் விமர்சிக்கப்படுகிறார். ஆட்சி அதிகாரம் தொடர்பாக அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடும், எதிர் கருத்துகளும் அதிகரித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

செளதி பட்டத்து இளவரசர், தனது பல ஒன்றுவிட்ட சகோதரர்களை சிறையில் அடைத்துவிட்டார். எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தால், அது செளதியின் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏமனில் நடைபெறும் சண்டையில் இருந்து செளதி அரேபியாவால் வெளியேற முடியவில்லை, அது சிக்கல்களை அதிகரித்துள்ளது.

அண்டை நாடான இரானுடன், பட்டத்து இளவரசருக்கு சுமூகமான உறவுகள் இல்லை. எண்ணெய் தேவைக்காக அமெரிக்கா, செளதி அரேபியாவை சார்ந்து இருக்கவில்லை என்றால், செளதி அரேபியாவின் நிலைத்தன்மை பற்றிய அச்சம் கணிசமாக அதிகரிக்கிறது. இந்த உறுதியற்ற தன்மை, செளதி அரச குடும்பத்தை மட்டுமல்ல, அதன் நட்பு நாடுகளையும் பாதிக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :