செயற்பாட்டாளர்கள் அதிரடியாக கைது: போலீசார் கூறும் காரணம் என்ன?

  • 28 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா எங்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) பல சமூக மற்றும் சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் போலீசார்சோதனைகள் நடத்தினர். முக்கிய செயற்பாட்டாளரான வரவர ராவ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரவர ராவின் வீடுகள் மற்றும் அவரது மகள்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

வரவர ராவை தவிர போலீசார் அருண் ஃபெரேரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரை மும்பையில் கைது செய்துள்ளனர், சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியனை (பியூடிஆர்) சேர்ந்த சுதா பரத்வாஜை ஹரியானாவிலும், டெல்லியில் பியூடிஆரை சேர்ந்த கெளதம் நவ்லாகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை BBC / ALOK PUTUL

ஹைதராபாத், மும்பை, டெல்லி, ராஞ்சி ஆகிய பல இடங்களில் இந்த சோதனைகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

குறிப்பாக செயற்பாட்டாளர் ரோனா வில்சனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் தொடர்பாக இந்த கைதுகள் நடந்துள்ளன. ஆனால், சிவில் உரிமைகள் அமைப்பு மற்றும் இடதுசாரி அமைப்புகள், இந்த நடவடிக்கைகள் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை குற்றவாளிகளாக்க மற்றும் ஒடுக்க செய்யப்படும் ஒன்றே தவிர வேறொன்றுமில்லை என்று கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகள் குறித்து புனே போலீசின் சட்டம் ஒழுங்கு பிரிவின் இணை ஆணையரான சிவாஜி போடாக்கே பிபிசியின் வினீத் கரேயிடம் கூறுகையில், ''இவர்கள் மாவோயிஸ்ட் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு முக்கிய பின்புலம் இவர்கள்தான். இது தொடர்பான குற்றப்பத்திரிகை எப்போது பதிவு செய்யப்படும் என்பது நாளை முடிவு செய்யப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரத்தை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்பிப்போம். பொதுவெளியில் அதனை பகிர முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக கொலை சதி செய்யப்படுவதாக கூறப்படும் கடிதம் குறித்து கடிதம் பற்றி கேட்டதற்கு, 'கருத்து கூற விரும்பவில்லை' என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 'பஞ்சநாமா (போலீஸ் ஆவணம்) அறிக்கையை உள்ளூர் மொழியில்தான் அளித்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு அதனை மராத்தியில் தந்துள்ளார்கள்' என்று வரவர ராவின் நெருங்கிய உறவினரும், மூத்த பத்திரிகையாளருமான என். வேணு கோபால் குறிப்பிட்டார்.

செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன் இந்த சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். போலீசார் பதிவு செய்த ஆவணத்தில், வரவர ராவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் பற்றிய விவரம் வேறு எதுவும் இல்லை.

மஹாராஷ்டிராவின் பீமா கோரேகான் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியிடப்பட்ட புனே காவல்துறை ஆணையரின் அறிக்கையை தவிர , இந்த சோதனை நடவடிக்கைகள் எந்த காரணத்தினால் நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்களை போலீஸ் வெளியிடவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த கைது? எல்கார் பரிஷத் செய்தது என்ன?

இந்த ஆண்டு ( 2018) ஜூன் மாதத்தில் மஹாராஷ்டிராவின் பீமா கோரேகான் பகுதியில் சில ஆர்ப்பாட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

எல்கார் பரிஷத் அமைப்பின் பெயரில் தலித் அறிவுஜீவிகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டி போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

ரோனா வில்சன் உள்பட 5 பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீமா கோரகான் சண்டையின் 200வது ஆண்டை நினைவுகூர்வதற்கு புனே நகரில் தலித் குழுக்கள் கூடியிருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் சண்டையாக பிரிட்டிஷ் காலனியாதிக்க படைப்பிரிவுகேளோடு சேர்ந்து உயர் சாதி ஆட்சியாளருக்கு எதிராக தலித்துக்கள் சண்டையிட்டதுதான் கோரகான் மோதல்.

பிரதமர் நரேந்திர மோதியை கொல்ல சதி?

டெல்லியை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான ரோனா வில்சனிடம் இருந்து மாவோயிஸ்டுகள் எழுதிய ஒரு கடிதத்தை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல தற்போதைய பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சதித்திட்டத்துக்கு வரவர ராவ் நிதியுதவி அளிப்பதாகவும் சில தகவல்கள் இந்த கடிதத்தில் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள வரவர ராவ், இவை பொய்யான தகவல்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் நிருபம் உள்பட சில தலைவர்கள் மற்றும் பல ஆர்வலர்கள், அமைப்புகள் இந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து தங்களின் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறைந்து வரும் தங்கள் செல்வாக்கினை நிலைநிறுத்தவும், மக்களிடம் அனுதாபத்தை சம்பாதிக்கவும் மோதி அரசு இது போன்ற நாடகங்களை நடத்துவதாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நகர்ப்புற மாவோயிஸ்ட்கள்

அண்மைய காலமாக 'நகர்ப்புற மாவோயிஸ்ட்கள்' என்ற சொற்றொடரை மத்திய அரசு பயன்படுத்துகிறது.

பீமா கோரேகான் கலவரத்தின்போதும், அதற்குப்பிறகு குறிப்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாய்பாபாவின் கைதின் போதும் சில நகர்ப்புற நக்சல் அமைப்பினர் பெருநகரங்களில் தங்கள் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் அவர்கள் முக்கியத்துவம் பெற முயல்வதாக மத்திய அரசு கூறுகிறது. அதன் பிறகு பல விவாதங்களில் இந்த வார்த்தை அடிக்கடி இடம்பெறுகிறது.

படத்தின் காப்புரிமை GONZALVIS

'தங்களின் இருப்பை தெரியப்படுத்தவும், முக்கியத்துவம் பெறவும் முயன்று வரும் மாவோயிஸ்டுகளுக்கு பலர் பல்வேறு விதங்களில் உதவி வருகின்றனர்' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரோனா வில்சனின் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதம் தொடர்பாக நடத்தப்பட்ட கைது நடவடிக்கைகள் இதையொட்டியே நடைபெற்றுள்ளது.

நக்சல் அமைப்பினர் முன்பு போல் அல்லாமல் தங்கள் செயல்பாடுகளில் தீவிரமாக இல்லை என அரசு கூறி வருகிறது. இதே கருத்தை ஊடகங்களிடம் பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தலித் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் போராடிவரும் சில வழக்கறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களின் நடவடிக்கைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

இன்றைய நடவடிக்கையின் மூலம் தனது எண்ணத்தை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தீவிர இடதுசாரி அனுதாபிகளாக கருதப்படும் நகர்ப்புற அறிவுஜீவிகள் மீது தற்போது அரசின் கவனம் திரும்பியுள்ளது தெரியவருகிறது.

இந்த நாடு எங்கே செல்கிறது?

'பட்டப்பகலில் மக்களை கொல்லும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் வீடுகளில் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. நாடு எங்கே செல்கிறது என்பதை இது காட்டுகிறது. இதற்கு நியாயம் கேட்டோ அல்லது பெருமபான்மை இந்து சமூகத்திற்கு எதிராக ஏதாவது குரல் கொடுத்தாலோ அவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுகின்றனர். வரவிருக்கும் தேர்தல்களுக்காக இவை செய்யப்படுகின்றனவா?' என்று எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் பிபிசியிடம் தெரிவித்தார்.

செயற்பாட்டாளர்கள் மீது குற்றம்சாட்டி அவர்களை தண்டிப்பதன் மூலம் பிரதமர் மோதி அனுதாபம் பெற விரும்புகிறார் என்று மனித உரிமை ஆர்வலர் வி.எஸ். கிருஷ்ணா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பிணை கிடைக்க சிரமமாக உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குகளை பதிவுசெய்து, எதிர்ப்பு குரல்களை அடக்க நினைக்கிறது என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :