இந்திய பெண்கள் சீன ஆண்களை ஏன் திருமணம் செய்வதில்லை?

படத்தின் காப்புரிமை Getty Images

(ஆகஸ்ட் 2018பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் மீள்பகிர்வு இது)

"இந்திய பெண்கள் ஏன் சீன ஆண்களை திருமணம் செய்வதில்லை? என்ற கேள்விக்கு சீனாவின் இணையதள பயன்பாட்டாளர்கள் பதில் தேடி கொண்டிருப்பது வைரலாகியுள்ளது.

மேற்கண்ட கேள்வி கடந்த ஆண்டே சீனாவின் கோராவாக (Quora) அறியப்படும் ஜிஹிஹு என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டாலும், தற்போது அந்த கேள்விக்கான பதில்கள் மீண்டும் வைரலாகி வருகிறது. இதுவரை 1.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அதை பார்த்துள்ளனர்.

சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே திருமணம் என்பது பாலின விகிதாச்சார வேறுபாட்டின் காரணமாக பிரச்சனையில் உள்ளது. 140 கோடி மக்கள் தொகையுள்ள சீனாவில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை 3.4 கோடி அதிகமாக உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் காரணமாக இந்த பிரச்சனை பூதாகரமானதாக கருதப்படுகிறது.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, நாட்டில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை 3.7 கோடி அதிகமாக உள்ளது.

'இது அரிதானது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது'

இந்தியாவில் வரதட்சணை சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும், மணப்பெண்ணின் வீட்டார் மணமகனுக்கு பணம், நகைகள், மற்ற விலையுயர்ந்த பொருட்களை கொடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், சீனாவை பொறுத்தவரை தலைகீழாக, அதாவது மணமகளுக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை திருமண நிச்சயதார்த்த பரிசின் தொகை 100,000 யுவான்களாக உள்ளது. ஒரு யுவான் 10 ரூபாய் மதிப்புடையது.

"இது ஒரு இந்திய விவசாயியின் பத்தாண்டுகால சராசரி வருமானத்திற்கு சமமானது. எனவே, இந்திய பெற்றோர் தங்களது மகளை இந்தியாவிலே திருமணம் செய்து வைப்பதற்கு பதில், அவர்களை சீன ஆண்களுக்கு மணம் முடிக்க வைத்து செல்வதை பெறலாம்" என்று அந்த கேள்விக்கான தொடர் பதில்களில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்தியாவிலுள்ள கிராமங்களை காட்டிலும், சீனாவிலுள்ள கிராமங்கள் சிறப்பாக உள்ளன. எனவே, சீன நகரம் ஒன்றை சேர்ந்தவரை இந்தியாவை சேர்ந்த பெண் திருமணம் செய்துகொண்டால் அவரது வாழ்கை தரமும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்தியாவை காட்டிலும் சீன சமூகத்தில் பெண்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சீன ஆண்களை வியட்நாம், மியான்மர், லாவோஸ், உக்ரைனை சேர்ந்த பெண்கள் கூட திருமணம் செய்யும்போது இந்திய பெண்கள் திருமணம் செய்வது கொள்வது என்பது மட்டும் மிகவும் அரிதாக உள்ளது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது" என்று அந்த நீண்ட பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறுபட்ட கலாச்சாரத்தை கொண்டவர்களை திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வரும் நிலையில், இந்திய பெண்கள் மற்றும் சீன ஆண்கள் இடையிலான திருமணம் என்பது இன்னும் அரிதான ஒன்றாகவே உள்ளது.

'திருமணத்திற்கும் பணத்திற்கும் தொடர்பு இல்லை"

வரதட்சணை குறித்த விடயங்களும் ஜிஹிஹு இணையதளத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்தியாவில் மணமகள் வீட்டார் சார்பாக கொடுக்கப்படும் வரதட்சணை தொகையை முதலாக கொண்டே அவர் தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வரதட்சணை கொடுமை என்பது படிப்படியாக மோசமடைந்து, உயிரிழப்பு வரை செல்வதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இந்தியாவில் நேர்மையாக நடப்பதில்லை என்று மற்றொரு பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. தங்களது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்வதற்காகவும் அல்லது பணத்தை செலவழிப்பதன் மூலம் தங்களது மகள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த இந்திய பெற்றோர் முயல்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு 27ஆம் தேதி பதிவிடப்பட்ட பதிலில், "இந்தியாவில் திருமணம் என்பது பணத்தை மட்டும் பொறுத்து அமைவதில்லை" என்று பெய்ஜிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹி வெய் என்பவர் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவில் வெற்றிகரமாக ஓடிய பாலிவுட் திரைப்படமான டங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களை இந்தியாவிலுள்ள பெரும்பாலான பெண்களை ஒப்பிட்ட அவரது பதிவில், "இந்திய நகரங்களிலுள்ள மத்தியதர வர்க்க குடும்பத்தை சேர்ந்த ஆங்கிலம் பேசும் பெண்களும், அவர்களை போன்ற சீன பெண்களும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்கு விரும்புகின்றனர்" என்று கூறியிருந்தார்.

மேலும், இந்திய பெண்களை திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள், "அவர்களுக்கு உயர்க்கல்வியை அளிக்க வேண்டும், அவர்கள் விரும்பும் பணியை செய்வதற்கும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்; அவர்கள் உங்களது 100,000 யுவான்களை சிறிதும் மதிப்பதில்லை" என்று அறிவுரை கூறியுள்ளார்.

"திருமணம், குறிப்பாக வேறுநாட்டை சேர்ந்தவர்களிடையேயான திருமணங்கள் மிகவும் சிக்கலானவை" என்ற பதிலுக்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்புகள் 'குடும்ப மதிப்புகள்'

சீனாவை காட்டிலும் இந்தியாவில் பாலின இடைவெளி என்பது அதிகமாக உள்ளதாக மற்றொரு பயன்பாட்டாளர் சுட்டிக்காட்டினார்.

"இந்திய பெண்கள் சீன ஆண்களை நிஜ வாழ்வில் சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமென்று" பெங் கியன்லி என்ற பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

"ஹாங்காங் போன்ற சீனாவின் பல்வேறு மிகப் பெரிய நகரங்களில் இந்திய ஆண்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு கூட இந்திய பெண்கள் சீனாவில் பணிபுரிவதில்லை" என்றும், "அதிகளவிலான சீன ஆண்கள் இந்தியாவை விட ஆஃப்ரிக்காவில் பணிபுரிவதன் காரணமாக அவர்கள் ஆஃப்ரிக்க பெண்களை திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது" என்றும் தனது பதிலில் பெங் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"குடும்பத்தின் மதிப்புகளை காக்கும் சுமை இந்திய ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு அடுத்து மற்றொரு பெண்ணை நோக்கி செல்லும் இந்திய ஆண்களின் மனப்பான்மை சீன ஆண்களிடம் இல்லவே இல்லை" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கலாச்சாரம் மிகவும் பழமைவாத கருத்துக்களை கொண்டது என்றும் இந்தியாவின் ஊரக பகுதிகளில் தங்களது மகள்களை மற்றொரு சாதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதே அரிதான ஒன்றாக இருக்கும்போது, மற்றொரு இனக்குழுவை சேர்ந்த வெளிநாட்டவருக்கு திருமணம் செய்து வைப்பது என்பது மிகவும் கடினமான விடயம் என்றும் பதிவிட்டுள்ளார்.

'சகிப்புத்தன்மை'

கிழக்காசியாவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்து எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்கியதாக மேற்குலக ஊடகங்களை சிலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும், "தனது நாட்டை சேர்ந்த பெண்ணை வெளிநாட்டவருக்கு திருமணம் செய்ய எந்த நாடு அனுமதிக்கிறதோ, அது அதன் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது" என்று பெண்ணொருவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்