நான்கு வழிச் சாலையால் பொருளாதாரம் சிதையும் - இது ஆப்ரிக்க அச்சம்

கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

ஆப்ரிக்கா அச்சம்

சீனா வழங்கும் கடன்களுக்கு ஆப்ரிக்க நாடுகள் இசைவு தெரிவித்து வரும் நிலையில், சீன கடன்களால் ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் என அஞ்சுகிறார்கள் நிபுணர்கள். உகாண்டா நாட்டு தலைநகரையும் இண்டெப் தர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கும் நான்கு வழிச்சாலை பணியை 476 மில்லியன் டாலர் மதிப்பில் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டது.

இதற்கு சீனா எக்ஸிம் வங்கி கடன் வழங்கியது. இந்த 51 கி.மீ சாலையால் இரண்டு மணி நேரம் வரை பயண நேரம் குறையும். ஆனால், கடன் பெற்று மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு பணிகளால் ஆப்ரிக்க பொருளாதாரம் சிதையும் என அஞ்சுகிறார்கள் நிபுணர்கள்.

இது சீனா லாபமடைய மட்டுமே வழிவகுக்கும் என்பது அவர்கள் அச்சம். இந்த பகுதிகளில் 40 சதவீத குறைந்த வருமானம் உடைய நாடுகள் கடன் சிக்கலில் சிக்கி உள்ளதாக கூறுகிறது சர்வதேச நாணய நிதியம்.

'தீயில் கருகிய நூற்றாண்டுகால பொக்கிஷம்'

பட மூலாதாரம், Reuters

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இருநூறு ஆண்டுகால பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்நாட்டின் பழமையான அறிவியல் நிலையமான இந்த அருங்காட்சியகயத்தில் 2 கோடிக்கு அதிகமான பொக்கிஷ பொருட்கள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்க போராடி வருகின்றனர். யாருகேனும் காயமடைந்து இருக்கிறதா என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

'இல்லை... எங்களை யாரும் தாக்கவில்லை'

பட மூலாதாரம், Reuters

டமாஸ்கஸ் அருகே உள்ள சிரியா வான்படை தளத்தில் இஸ்ரேல் வான் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என சிரியா கூறி உள்ளது. இஸ்ரேல் சிரிய வான்படை தளத்தை தாக்கியது என தகவல் பரவிய நிலையில், அந்த தகவலை சிரியா மறுத்துள்ளது. சிரிய ஆயுத கிடங்கில் மின்சார கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்துதான் குண்டு சத்தம் எழுந்ததற்கு காரணம் என்று சிரியா விளக்கி உள்ளது.

லிபியா: சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

பட மூலாதாரம், Reuters

லிபியாவின்  தலைநகரான  திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின்  அருகே உள்ள ஒரு சிறைக்கூடத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை. 

இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சில்  வீழ்ந்தது  இந்தியா 

பட மூலாதாரம், Reuters

சவுதாம்ப்டனில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த நான்காவது கிரிக்கெட் டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

தனது  முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களை குவிக்க, அதற்கு பதிலாக இந்தியா  273 ரன்களை எடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 271 ரன்களை எடுத்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

வெற்றி இலக்கான 245 ரன்களை நோக்கி களத்தில்  இறங்கிய இந்தியா ஒருகட்டத்தில் 3 விக்கெட்டுகளுக்கு 22 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் கோலி மற்றும் ரஹானே ஆகிய இருவரும் 100 ரன்களுக்கு மேல் ஜோடி சேர்த்தனர். ஆனால், கோலி ஆட்டமிழந்த பின்னர், இந்திய அணியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழக்க போட்டியையும், தொடரையும் இங்கிலாந்து வென்றது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :