ரோஹிஞ்சா : ''மியான்மரில் நடந்தது மிகக்கடுமையான குற்றங்கள்'' -ஐ.நா

  • ரோலண்ட் ஹியூக்ஸ்
  • பிபிசி நியூஸ்

கண்மூடித்தனமான படுகொலைகள்; எரிக்கப்பட்ட கிராமங்கள்; கடுமையான தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள்; கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் - இவைதான் ஐநாவின் புலன் விசாரணையின் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள்.

மியான்மரில் நடந்தது ''சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மிகக்கடுமையான குற்றங்கள்'' என ஐநா குற்றம் சாட்டியிருக்கிறது.

மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிஞ்சாக்கள்

பட மூலாதாரம், Getty Images

மேற்கு ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லீம்கள் மீது நடந்த இனப்படுகொலை குறித்து ராணுவம் கட்டாயம் விசாரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மருக்குள் நுழைந்து விசாரிக்க ஐநாவின் விசாரணை அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்காத நிலையில் இந்த அறிக்கையின் முடிவுகள் வந்துள்ளது. ஆனால் மியன்மர் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.

எப்படி விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்தார்கள்?

கட்டமைத்தல்

மியான்மரில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால் மனித உரிமை மீறல் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கடந்த வருடம் மார்ச் 24-ம் தேதி சுதந்திரமான உண்மை கண்டறியும் ஓர் குழுவை ஏற்படுத்த ஐ நா மனித உரிமைகள் மன்றம் ஒப்புக்கொண்டது.

இந்த குழு அமைக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்கு பின்னர், காவல்சாவடிகள் மீது ரோஹிஞ்சா தீவிரவாதிகள் நடத்திய ஒரு கொடிய தாக்குதலையடுத்து, ரக்கைன் மாகாணத்தில் மியான்மர் ராணுவம் ஒரு மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது.

மியான்மர் ராணுவ நடவடிக்கைகள் தான் தற்போது விசாரணையின் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. மியான்மருக்குள் செல்ல முயன்று முறை அனுமதி கேட்டு இக்குழு அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், எந்த பதிலும் அக்குழுவுக்கு கிடைக்கவில்லை.

Short presentational grey line

பேட்டி - விசாரணை

இவ்விசாரணை குழுவுக்கு தலைமை வகித்த மூவரில் ஒருவரான கிறிஸ்டோபர் சிடோட்டி, ''இவ்விசாரணையின் முதல் விதியே 'தீங்கு விழைவிக்காமல் நடத்த வேண்டும்' என்பதே'' என்றார்.

'' மக்களில் சிலரிடம் நாங்கள் பேசியபோது அவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருந்தனர் . ஒருவேளை எங்களது ஊழியர்கள் இவ்வாறு பேட்டி எடுப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் காயம் ஏற்படுத்தக்கூடும் என கருதியிருந்தால் அவை நடத்தப்பட்டிருக்காது. கடுமையானதொரு காலகட்டத்தை அனுபவித்து வந்திருக்கும் ஒருவரை மீண்டும் காயப்படுத்தும் விதமான எந்தவொரு விசாரணையின் மூலம் சேகரிக்கப்படும் ஆவணங்களும் தேவையற்றது'' என்றார்.

குறைந்தது 7,25,000 பேர் கடந்த 12 மாதங்களில் ரக்கைன் மாகாணத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் விளைவாக, மியான்மருக்குள் நுழைய அனுமதி கிடைக்காதபோதிலும் ரக்கைன் மாகாணத்தை விட்டு தப்பிச்செல்வதற்கு முன்னதாக அங்கே வன்முறையை நேரில் அனுபவித்த மக்கள் திரளிடம் இருந்து பெருமளவு சாட்சியங்களை விசாரணையாளர்களால் சேகரிக்க முடிந்தது.

மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிஞ்சாக்கள்

பட மூலாதாரம், Reuters

வங்கதேசம், மலேஷியா, தாய்லாந்து, இந்தோனீஷியா மற்றும் இங்கிலாந்துக்குச் சென்ற 875 பேரிடம் விசாரணையாளர்கள் பேசினார். இதுவரை தங்களது கதைகளை யாரிடமும் பகிராத நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பெருமதிப்புமிக்க சாட்சியங்கள் அடிபப்டையில் அவர்கள் அறிக்கை தயாரித்துள்ளனர்.

'' நாங்கள் ஏற்கனவே மற்ற நிறுவனங்களிடம் பேட்டியளித்த மக்களிடம், தற்போது பேட்டியெடுக்க வேண்டாம் என முடிவு செய்தோம்'' என்கிறார் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட நிபுணர் சிடோட்டி.

'' வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த மக்களை விசாரிக்க முயற்சித்தோம். இம்முடிவில் நாங்கள் மிகவும் கவனம் செலுத்தியதன் காரணம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு விரிவான தெளிவான பார்வை கிடைக்க வேண்டும் என்பதே'' என்றார் சிடோட்டி.

Short presentational grey line

ஆதாரம்

நாங்கள் ஒரு கணக்கை மட்டும் ஆதாரமாக பயன்படுத்தவில்லை. எப்போதும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்கள் மூலம் அவற்றை உறுதிப்படுத்தவே முயன்றோம்.

Interactive How the village of Thit Tone Nar Gwa Son was erased

13 February 2018

Thit Tone Nar Gwa Son in February 2018

25 May 2017

Thit Tone Nar Gwa Son village in May 2017

அந்த ஆதாரங்களில் 2017-ல் பல மாதங்களாக ரோஹிஞ்சாக்கள் வசிக்கும் கிராமங்கள் அழிக்கப்பட்டதை காட்டும் காணொளிகள், புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் செயற்கைகோள் புகைப்படங்கள் அடங்கும்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிராமம் அழிக்கப்பட்டதாக வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகளிடம் இருந்து தகவல் வந்தது. அவை உண்மை என்பதை உறுதிப்படுத்தும் செயற்கைகோள் புகைப்படங்களை விசாரணை அதிகாரிகளால் ஆதாரமாகச் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டியது என்ன?

1. வடக்கு ரக்கைன் மாகாணத்தில் கிட்டத்தட்ட 392 கிராமங்கள் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ அழிக்கப்பட்டது.

2. அப்பகுதியில் கிட்டத்தட்ட 40% வீடுகள் அதாவது 37,700 கட்டடங்கள் பாதிக்கப்பட்டன .

3. அவற்றில் ராணுவம் தாக்குதல் நடத்திய முதல் மூன்று வாரங்களில் 80% வீடுகள் எரிக்கப்பட்டன.

களத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகச் சேர்ப்பது மிகவும் சவாலானதாக இருந்தது.

மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிஞ்சாக்கள்

பட மூலாதாரம், AFP

''மக்கள் ரக்கைன் மாகாணத்தை விட்டு வெளியேறும்போது, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், பணம், தங்கம், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை இழந்தனர். இதன் மூலம், அம்மக்கள் வைத்திருந்த காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது'' என சிடோட்டி தெரிவித்தார்.

''பெரிய அளவில் காணொளி, புகைப்படங்கள் போன்றவை மிஞ்சவில்லை. எனினும் கிடைத்தவற்றை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்'' என்றார்.

Short presentational grey line

குற்றம் சாட்டப்பட்டவர்கள்

ராணுவ தலைமை தளபதி மின் ஆங் லைங் மற்றும் துணைத் தளபதி உட்பட மூத்த ராணுவத் தலைவர்கள் ஆறு பேரின் மீது விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

விசாரணை அதிகாரிகள் இவர்களை எப்படி நேரடியாக சுட்டிக்காட்டுகின்றனர்?

ஆவணங்களின் அடிப்படையிலோ அல்லது பதிவுகளில் அடிப்படையிலோ இந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை, ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி பிறரின் விரிவான புரிதலையே ஆய்வாளர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். கடந்த காலங்களில் போர் குற்றங்களுக்கான தீர்ப்பாயங்களுடன் இணைந்து செயல்பட்ட ராணுவ ஆலோசகர் ஒருவரும் அவர்களில் ஒருவர்.

கிறிஸ்டோபர் சிடோட்டி

பட மூலாதாரம், EPA

"மியன்மர் ராணுவத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான சர்வதேச ஆலோசனைகள் எங்களுக்கு கிடைத்தது" என்று கூறும் சிடோட்டி, "மியான்மர் ராணுவத்தின் கடுமையான கட்டுப்பாட்டில் இருப்பதை நாங்கள் அறிந்தோம். அங்கு, ராணுவத் தலைவர் மற்றும் அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தெரியாமல் எதுவுமே நடக்கமுடியாது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்"

கட்டளைகளை வழங்கிய அதிகாரிகளின் பெயர்களும் கிடைத்திருப்பதாக நம்பப்படும் நிலையில், கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.

"கொடுமைகளுக்கான தளத்தை அமைத்துக் கொடுத்தவர்களின் பட்டியல் எங்களிடம் இருக்கிறது, இப்போதைக்கு அவை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது" என்று சிடோட்டி கூறுகிறார்.

Short presentational grey line

சட்டங்கள்

இனப்படுகொலையாக தோன்றுவது எது என்பதையும், இனப்படுகொலைக்கான சட்ட வரையறைக்குள் அது பொருந்துகிறதா என்பதை நிரூபிப்பதும் இருவேறு விஷயங்கள்.

"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் கிடைப்பது எளிதாகவே இருந்தது, போதுமான அளவு சான்றுகள் கிடைத்துள்ளது" என்று சிடோட்டி கூறுகிறார். "இனப்படுகொலை என்பது மிகவும் சிக்கலான பிரச்சனை."

"ஒரு நபர், ஒரு தேசிய, இன, மத குழுவை பூண்டோடு அழிக்கும் நோக்கில், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடைசெய்யப்பட்ட செயல்களை செய்வது" இனப்படுகொலை என்று கூறலாம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

A woman reacts as Rohingya refugees wait to receive aid

பட மூலாதாரம், Reuters

இதில் "நோக்கம்" என்ற முக்கியமான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மியன்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கான நோக்கத்திற்கான சான்றுகள் தெளிவாக இருப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

ராணுவத் தளபதிகள் மற்றும் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டும் விசாரணை அதிகாரிகள், இதுபோன்ற நடவடிக்கையை முன்னெடுக்கும் திட்டங்களை உருவாக்கத் தேவைப்படும் கால அளவு பற்றியும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இனப்படுகொலை நடைபெற்றதை சட்டபூர்வமான கோணத்தில் நிரூபிக்க தேவையான சட்ட ரீதியான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"விசாரணை தொடங்கும்போது இருந்த மனநிலைக்கு எதிரான முடிவுக்கு நாங்கள் வந்தோம், அதுதான் எங்களுக்கு வியப்பளித்தது" என்று சிடோட்டி கூறுகிறார். "இனப்படுகொலைக்கான வலுவான ஆதாரம் இருக்கும் என நாங்கள் மூவருமே நினைக்கவில்லை."

Short presentational grey line

அடுத்தகட்ட நடவடிக்கை

ஆறு ராணுவ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. மியான்மர் ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளுக்காக, அந்நாட்டின் நடைமுறைத் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி, பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை நிறைவு செய்கிற ஸைத் ரத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய தீர்ப்பாயம் ஒன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்றும், மியான்மருக்கு ஆயுதத் தடை விதிப்பது உட்பட பல நடவடிக்கைகளை இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இருந்தாலும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் வீட்டோ அதிகாரம் கொண்ட உறுப்பினரும், மியான்மரின் நட்பு நாடுமான சீனா, மியான்மர் மீதான கடும் நடவடிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகளை மியான்மரில் உள்ள அதிகாரிகள் தாங்களே விசாரிக்க முடியாது என்பதை சிடோட்டி ஒப்புக்கொள்கிறார். கடந்த ஆண்டு ரோஹிஞ்சா நெருக்கடியில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டு ராணுவம் உள் விசாரணை நட்த்தியது. மேலும், பிபிசியிடம் பேசிய ஐ.நா.விற்கான மியான்மரின் நிரந்தர பிரதிநிதி, இந்த அறிக்கை "தங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுக்களை" வைப்பதாக தெரிவித்தார்.

"நாங்கள் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். அதைச் செயல்படுத்துவது மற்றவர்களின் பொறுப்பு" என்று சிடோடி கூறுகிறார். "பாதுகாப்பு சபை தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நான் அப்பாவி அல்ல" என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :