எல்.ஜி.பி.டி: ஒருபாலுறவில் ஈடுபட்ட மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை

கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

ஒருபாலுறவு - பெண்களுக்கு பிரம்படி தண்டனை

காரில் ஒருபாலுறவில் ஈடுபட்ட இரண்டு மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கி அந்நாட்டில் உள்ள ஷரியா (மத கோட்பாடுகள் தொடர்புடைய) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெரன்காணு மாகாணத்தில் உள்ள ஷரியா உயர் நீதிமன்றத்தில்  22 மற்றும் 32 வயதுடைய இந்த இரண்டு முஸ்லிம் பெண்களுக்கும் தலா 6 பிரம்படிகள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த மாகாணத்தில் ஒருபால் உறவு தொடர்பாக பொதுவெளியில் வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுதான் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய இணையதளம் முடக்கம்

ஆஸ்திரேலிய அரசு ஒளிபரப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இணையதளத்தை சீனா முடக்கி சீனா உள்ளது. ஆஸ்திரேலிய ஒளிபரப்பு கார்ப்பரேஷன் 'திடீரென' தங்கள் இணையதளம் சீனாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு முடக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனம் தங்கள் நாட்டு சட்டத்தை மீறிவிட்டதாக சீனா கூறி உள்ளது. ஆனால், அது எந்த சட்டம் என்று குறிப்பிடவில்லை.

புகைக்க தடை

இஸ்ரேல் அரசு பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்துள்ளது. முன்பே அந்த நாட்டில் பொது இடங்களில் புகைப்பதற்கு எதிரான சட்டம் இருந்தாலும், இப்போது அவை எந்தெந்த இடங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்லது. அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், மத சபை, மருத்துவமனை என நீளும் அந்த பட்டியல், 50 பேருக்கு மேல் கூடும் ஓர் இடத்தில் புகைப்பிடிப்பதையும் தடை செய்கிறது.

மே மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த இடங்களில் புகைப்பிடித்தால் 1385 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

வெடி விபத்து

தென் ஆப்ரிக்காவில் உள்ள ஆயுத கிடங்கொன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது எட்டு பேர் மரணித்து இருக்கலாம் என்கின்றன தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள். கேப் டவுன் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. கிடங்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.

யானைகளின் பிரேதங்கள்

ஏறத்தாழ 90 யானைகளின் பிரேதங்கள் பிரபலமான போட்ஸ்வானா விலங்குகள் சரணாலயத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். போட்ஸ்வானாவில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன.

ஆனால், வேட்டையாடிகள், தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடி வருகின்றனர். அண்மையில் வேட்டையாடிகளுக்கு எதுராக அமைக்கப்பட்ட குழு ஒன்று கலைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :