'மாபெரும் மனிதாபிமான தவறு நடந்துள்ளது” - சிரியா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

சிரியா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம், Reuters

சிரியாவில் போராளிகள் வசமுள்ள இட்லிப் பிராந்தியத்தில் சிரியா அரசு மற்றும் அதன் கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் இரான் ஆகியோர் பொறுப்பற்ற முறையில் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இட்லிப் பிராந்தியத்தில் நடந்திருப்பது 'ஒரு 'மாபெரும் மனிதாபிமான தவறு' என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், இந்த தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவில் போராளிகள் வசமுள்ள கடைசி பகுதியான இந்த பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சிரியா அரசுப்படைகள் திட்டமிட்டு வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

சிரியா அரசுப்படைகளின் இந்த பதில் நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கைநிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகும் என்று ஐ.நா. அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இட்லிப் பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலில் சிரியா அரசுப்படைகளோ அல்லது அதன் கூட்டாளிகளோ ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அதற்கு எதிராக அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று திங்கள்கிழமையன்று அமெரிக்க அரசுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனது டிவிட்டர் செய்தியில், ''இட்லிப் பிராந்தியத்தில் எல்லோரின் பார்வையும் சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத், ரஷ்யா மற்றும் இரான் மீது உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற பொருளில் #NoChemicalWeapons என்ற ஹேஷ்டாக்-கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, கடந்த மே மாதத்தில், ஏழு வருட போருக்கு பிறகு, ரஷ்ய மற்றும் இரானிய ராணுவப் படை ஆதரவுடன் ஆசாத் அரசு அலெப்போ உட்பட மத்திய சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கிளர்ச்சிப் படைகள் மற்றும் சிரியா அரசு ஆகிய இரண்டும் இட்லிப் மீது கவனம் செலுத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் முன்னதாக இருந்த கிழக்கு கூட்டா பகுதியிருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இட்லிப்பிற்கு வருகை தந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :