சிரியா அதிபரை கொல்ல உத்தரவிட்டாரா டிரம்ப்? - புத்தகத்தால் எழுந்த சர்ச்சை
கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
'இல்லவே இல்லை'
பட மூலாதாரம், Getty Images
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் பாப் வுட்வேர்ட் தன் புதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதை டிரம்ப் மறுத்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கக்கூட இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸும் அவர் குறித்து புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை மறுத்துள்ளார்.
குண்டுவெடிப்பு 20 பேர் பலி
பட மூலாதாரம், EPA
ஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள மல்யுத்த கிளப் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி ஆகியுள்ளனர் மற்றும் 70 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
முதலில் ஒரு தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க செய்ததில் நான்கு பேர் பலியாகினர். காரில் இருந்த இரண்டாவது குண்டுதாரி அவசர சேவையகத்தை இலக்கு வைத்து தாக்கினார்.
டொலோ தொலைக்காட்சியை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களும் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள்.
"நான் எதிர்ப்பின் ஒரு பகுதி"
பட மூலாதாரம், Getty Images
அதிபர் டிரம்பின் மோசமாக நாட்டங்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிபரின் திட்டத்தில் இருக்கும் சில பகுதிகளை முடக்குவதற்கு நிர்வாக உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாக டிரம்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் "இரக்கமற்ற தன்மை" மற்றும் "தொலைநோக்கில்லாத செயல்பாடு" ஆகியவை தவறான தகவல்களுக்கும், பொறுப்பற்ற முடிவுகளுக்கும் வழிவகுத்தன என்று நியூ யார்க் டைம்ஸ் தலையங்கத்தில் கட்டுரையாசிரியர் எழுதியிருந்தார்,
பெயர் குறிப்பிடாமல் இந்த கட்டுரையை எழுதியிருந்தவரை தைரியமில்லாதவர் என்றும், இந்த செய்தித்தாளை போலியானது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தில் பயணித்தவர்களுக்கு காய்ச்சல்
பட மூலாதாரம், CBS
நியூயார்க்கில் தரையிறங்கிய எமிரேடஸ் விமானத்தில் பயணித்த 19 பேருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏன் இத்தனை பேருக்கு ஒரு விமானத்தில் நோய் ஏற்பட்டுள்ளது என்று தெரியாத காரணத்தினால் அந்த விமானம் ஜெ.எஃப்.கே விமான நிலையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த 100 பேர் உடல் நிலை மோசமடைந்ததாக முதலில் கூறினர் என்கிறது அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுபாடு பிரிவு.
தூதுரக சர்ச்சை
பட மூலாதாரம், AFP/Getty Images
புதிதாக பொறுப்பேற்றுள்ள பராகுவே அரசு, இஸ்ரேலில் உள்ள தமது தூதரகத்தை மீண்டும் டெல் அவிவ் பகுதிக்கே மாற்ற போவதாக கூறி உள்ளது.
அண்மையில் தூதரகம் ஜெருசேலத்திற்கு மாற்றப்பட்டது. ஜெருசேலம் தொடர்பான சர்ச்சை நிலவி வருவதால் இந்த முடிவை பராகுவே எடுத்ததாக தெரிகிறது.
இந்த முடிவினை இஸ்ரேல் எதிர்த்துள்ளது. பராகுவேவில் உள்ள தம் நாட்டு தூதரகம் மூடப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்