'சிரியா ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது'

இட்லிப் மாகாணம்

பட மூலாதாரம், Reuters

இட்லிப் மாகாணத்தின் மீது ரசாயன தாக்குதல்கள் நடத்த சிரியா அரசு படைகள் தயாராகிக் கொண்டிருப்பதற்கான "நிறைய ஆதாரங்கள்" இருப்பதாக அந்நாட்டிற்கான புதிய அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பெரிய நகரமான இட்லிப் மீது நடக்கக்கூடிய தாக்குதல் கொடுமையானதாக இருக்கும் என்று ஜிம் ஜெஃபரி கூறியதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று ரஷ்யா மற்றும் இரான் நாட்டு தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

பட மூலாதாரம், AFP

"நான் இந்த எச்சரிக்கை அளிப்பதற்கான அனைத்து முகாந்திரங்களும் உள்ளது. ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருவதற்கான நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன" என்று தனது முதல் பேட்டியில் ஜிம் ஜெஃபரி கூறினார்.

ராஜதந்திர நடவடிக்கைக்கு அழைப்பு

சிரியா அரசாங்கம் அல்லது அதன் கூட்டாளிகளால் நடத்தப்படும் எந்த ஒரு ரசாயன தாக்குதல்களுக்கும் அமெரிக்கா தக்க பதிலளிக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரியாபோரினை முடிவுக்கு கொண்டுவர, "மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை" தேவை என்று ஜெஃபரி தெரிவித்தார்.

ஐ.எஸ் குழுவை வீழ்த்தும் வரை, சிரியாவுடன் தொடர்பில் இருக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஒரு புதிய அர்ப்பணிப்புடன்" செயல்படுவார் என்று கூறிய ஜிம், போரில் சிரியாஅதிகாரிகளுக்கு ஆதரவளிக்க இரானிய போராளிகள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஆட்சியாளராக இருக்க சிரியா அதிபர் அசாத்துக்கு எதிர்காலம் இல்லை என்றும் ஆனால், அவரை வெளியேற்றுவது அமெரிக்காவின் வேலையல்ல என்றும் ஜிம் தெரிவித்தார். எனினும், அரசியல் மாற்றத்திற்காக ரஷ்யாவுடன் அமெரிக்கா சேர்ந்து பணியாற்றும் என்று அவர் கூறினார்.

இட்லிப் மாகாணத்தில் 30,000 போராளிகள் மற்றும் ஜிகாதிய சண்டைக்காரர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

படக்குறிப்பு,

இட்லிப் மாகாணம்

10 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 2.9 மில்லியன் மக்களுக்கு இடமாக இருப்பதாக ஐ.நா கூறுகிறது. பாதிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒருமுறையாவது அங்கு இடம்பெயர்ந்து, எங்கும் போக வழியில்லாமல் உள்ளனர்.

8,00,000 மக்கள் இடம்பெயரக்கூடும் என்றும் உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகளவில் உயரும் என்றும் ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :