சிரியா போர்: இட்லிப் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், AFP
சிரியா போர்: இட்லிப் போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா மறுப்பு
சிரியாவின் இடலிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இட்லிப் மாகாணத்தின் தென் மேற்கில் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இது கூறியுள்ளது,
சிரியாவின் வட பகுதியில், மக்கள் ரத்தம் சிந்துவதை தடுக்க துருக்கி விடுத்த போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னதாக நிராகரித்துவிட்ட நிலையில் இந்த புதிய தாக்குதல் நடத்தப்படுகிறது.
இரான் மற்றும் துருக்கியோடு நடத்திய முத்தரப்பு கூட்டத்தில், இட்லிப் மாகாணத்திலுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதை ரஷ்யா தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 30 லட்சம் பேர் வாழுகின்ற இட்லிப் மாகாணம் சிரிய அரசு எதிர்ப்பாளர்களின் கடைசி முக்கிய வலுவிடமாகும்.
ரஷ்யா மற்றும் இரானால் ஆதரவு அளிக்கப்படும் சிரிய ராணுவம் இங்கு மிக பெரிய தாக்குதலை விரைவில் நடத்தவுள்ளது.
அமெரிக்க ராப் இசை பாடகர் மேக் மில்லர் 26 வயதில் மரணம்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க ராப் இசைப்பாடகர் மேக் முல்லர் அவரது கலிஃபோர்னிய இல்லத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதை மருந்துகள் உட்கொள்வதை வெளிப்படையாக ஒப்புகொண்டிருந்த 26 வயதான மில்லர், போதைப்பொருள் அதிக அளவு உட்கொண்டதால் இறந்ததாக தோன்றுகிறது.
பட மூலாதாரம், Getty Images
2011ம் ஆண்டு தன்னுடைய முதல் இசை தொகுப்பை வெளியிட்டபோது மல்கால்ம் ஜேம்ஸ் மெக்கோர்மிக் என்ற இயற்பெயருடைய இவர் பெரும் புகழ் அடைந்தார்.
'சுவிம்ங்' என்ற தன்னுடைய சமீபத்திய இசைத்தொகுப்பை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட இவர், இசைப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் பெருங்கடலை சுத்த செய்யும் ராட்சத பிளாஸ்டிக் சேகரிப்பு அமைப்பு
பட மூலாதாரம், THE OCEAN CLEANUP
ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்க கடலில் நீந்தி சென்ற நெதர்லாந்தை சேர்ந்த பதின்ம வயதினர் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் மிகுந்திருப்பதை கண்டார்.
இந்த மாசுபாட்டால் அதிர்ச்சியடைந்த பாயன் ஸ்லாட் பெருங்கடல்களை சுத்தம் செய்வது பற்றி பரப்புரை மேற்கொள்ள தொடங்கினார்.
நீண்டகாலமாக அவரது பரப்புரையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த வார இறுதியில், பெரியதொரு நிதி ஆதரவாலும், பொறியியல் பின்புலத்தோடும் பெரிய பிளாஸ்டிக் கேசரிப்பு அமைப்பு ஒன்று சன் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் பிளாஸ்டிக் சேகரிக்கவுள்ளது.
இதுவரை பிளாஸ்டிக் குப்பை பற்றிய பரப்புரை கடற்கரையோரங்களில் காணப்படும் குப்பைகளை சுத்தப்படுத்துவதை பற்றியே இருந்து வந்துள்ளது.
இரான் துணை தூதரகத்திற்கு தீ வைத்த இராக் போராட்டக்காரர்கள்
பட மூலாதாரம், Reuters
ஊழல் மற்றும் அடிப்படை சேவைகள் கிடைக்காததை கண்டித்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு மத்தியில், இராக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா நகரிலுள்ள இரானின் துணை துதரகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
இராக் அரசியலில் இரானின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நகரத்தின் தெருக்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, பாதுகாப்பு படைப்பிரிவுகளோடு நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 11 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5ம் நாள் போராட்டத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு இப்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தேர்தல் தலையீடு விசாரணையில் முன்னாள் டிரம்ப் உதவியாளருக்கு சிறை
பட மூலாதாரம், Getty Images
லண்டன் பப் ஒன்றில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து கருத்து தெரிவித்து அதுகுறித்த விசாரணைக்கு வித்திட்ட டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 14 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
31 வயதாகும் ஜார்ஜ் பாபுடோபுலஸ் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தான் ஒரு "தேசப்பற்றுள்ள அமெரிக்கர்" என்று தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம், ரஷ்யாவுக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுப்படுகிறது பாபுடோபுலஸ் அந்த சந்திப்புகளின் நேரங்கள் குறித்து எஃப்பிஐ-யிடம் பொய் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2016அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தது குறித்த விசாரணையில் கைது செய்யப்படும் டிரம்பின் முதல் உதவியாளர் இவரே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்