இந்தியக் குழந்தைகளுக்காக காத்திருக்கும் ஆஸ்திரேலிய தம்பதிகள்

  • நீனா பண்டாரி
  • பிபிசி, சிட்னி

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதாகும் எலிசபெத் புரூக் மற்றும் அவரது கணவர் 32 வயதாகும் ஆடம் புரூக் ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை அந்நாடு இந்தியாவுடன் மீண்டும் தொடங்கவுள்ளது.

படக்குறிப்பு,

எலிசபெத் புரூக் மற்றும் அவரது கணவர் ஆடம் புரூக்

எலிசபெத்தின் 14ஆம் வயதில் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ரோம் (polycystic ovarian syndrome) எனும் கருப்பை கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனும் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் 'ராஜா ஹிந்துஸ்தானி' இந்தி திரைப்படத்தை அவர் தொலைக்காட்சியில் பார்த்தார்.

"அந்தப் படம் இந்திய உணவு, உடை என அனைத்து குறித்தும் என் மனதில் தாக்கத்தை விதைத்தது. என் சகோதரி மற்றும் தோழியுடன் நான் இந்தியாவுக்கு பயணித்தேன். பின்னர் இரு முறை ஆடமுடன் இந்தியா சென்றேன்," என்கிறார் எலிசபெத்.

இந்தியாவில் இருந்த சில அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுப்புக்கான நிறுவனங்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடும் குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன், அக்டோபர் 2010இல் வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்து கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் சிறார்கள் மீதான விசாரணையை முறைப்படுத்தும் ஜுவெனைல் ஜஸ்டிஸ் சட்டம் 2015ஆம் ஆண்டும், 2017இல் வெளியிடப்பட்ட தத்தெடுப்பதற்கான நெறிமுறைகளும் இந்தியக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுப்பதை கடினமாக்கியது.

வெளியுலக அறிவு மற்றும் மதம் குறித்த தாராளவாத சிந்தனை உள்ள ஒரு முற்போக்கான குடும்ப சூழலில் வளர்ந்த எலிசபெத், "எல்லாம் சரியாக நடந்தால் இன்னும் மூன்று ஆண்டுகளில் எங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருக்கும். நாங்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்," என்கிறார்.

ஆஸ்திரலியாவின் சுகாதர மற்றும் நல அமைப்பின் 2016-17ஆம் ஆண்டுன் அறிக்கையிபடி ஒரு குடும்பம் குழந்தையைத் தத்தெடுப்பதற்காக விண்ணப்பிப்பது முதல் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்படும் வரை உண்டாகும் காலம் இரண்டே முக்கால் ஆண்டுகள்.

படக்குறிப்பு,

தோழியுடன் இந்திய பயணத்தின்போது எலிசபெத் (இடது)

இரண்டு அல்லது மூன்று இந்தியக் குழந்தைகளை தத்து எடுக்க விரும்பும் இந்த தம்பதி உடனடியாக தத்துக்கு கிடைக்கும் குழந்தைகளுக்காக இந்தியாவின் மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளனர்.

"இந்தியாவிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கான விண்ணப்பங்கள் இன்னும் தயாராகவில்லை. இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்து எடுக்கும் திட்டத்தில் கலந்துகொள்ளலாமா என்பது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள மாகாண அரசுகள் இன்னும் முடிவு செய்யவில்லை," என்கிறார் ஆஸ்திரேலியாவின் சமூகநலத் திட்டங்களுக்கான துறையின் செய்தித் தொடர்பாளர்.

"விண்ணப்பங்களை இந்தியாவுக்கு அனுப்பும் முன்னர் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நெறிமுறைகளை உண்டாக்க இன்னும் காலம் தேவை. இத்திட்டம் கவனமாகவும் மெதுவாகவும்தான் அமல்படுத்தப்படும். அப்போதுதான் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் தத்து எடுக்கும் நடைமுறைகளை கண்காணித்து, குழந்தைகளை பாதுகாப்பாக தத்து எடுப்பதை உறுதி செய்ய முடியும்," என்கிறார்.

இத்திட்டம் அமலுக்கு வந்தால், இந்தியக் குழந்தைகளை வளர்க்க விரும்பும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் ஆசையும் நிறைவேறும்.

படக்குறிப்பு,

ஜாய்லட்சுமி சைனி மற்றும் அவரது கணவர் மஞ்சித் சிங் சைனி

வடக்கு மெல்போர்னில் வசிக்கும் 42 வயதாகும் ஜாய்லட்சுமி சைனி மற்றும் அவரது கணவர் மஞ்சித் சிங் சைனி ஆகியோர் இந்தியாவில் இருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க எட்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டுள்ளனர்.

ஐந்து முறை செயற்கைக் கருத்தரிப்புக்கு முயற்சி செய்தும் அது இந்த தம்பதிக்கு தோல்வியிலேயே முடிந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற இரு முறை அவர்களை அணுக முயன்றும் இவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

"ஒரே சமயத்தில் இந்தச் செய்தி எங்களுக்கு இனிப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. ஆஸ்திரேலியக் குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பதற்கான செயல்முறை இறுதிபெறும் தருவாயில் உள்ளது. அதை தத்தெடுப்பதா இல்லை ரத்து செய்துவிட்டு இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விண்ணப்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்," என்கிறார் ஜாய்லட்சுமி.

"இரட்டைக் குழந்தைகள் அல்லது சகோதர - சகோதரியாகப் பிறந்த இரு குழந்தைகளை தத்தெடுக்க 2010இல் நாங்கள் முயன்றபோதுதான் தத்து கொடுப்பது இடைநிறுத்தி வைக்கப்பட்டது. நாங்கள் இந்தியாவிலுள்ள பல குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்றோம்," என்கிறார் அவர்.

படக்குறிப்பு,

ஜாய்லட்சுமி சைனி மற்றும் மஞ்சித் சிங் சைனி

கணவரைப் பிரிந்து தன் ஒன்பது வயது மகனுடன் குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள மௌன்ட் இசா நகரில் வாழ்கிறார் 33 வயதாகும் மேரி ஜோன்ஸ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

"இது நல்ல முன்னேற்றம்தான். ஆனால், நான் இதை முழுமையாக நம்பவில்லை. இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்கிறார் நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் மேரி.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு தன் கணவருடன் குடிபெயர்ந்தார் மேரி. அவர்களுக்குள் உண்டான சிக்கலால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கணவரைப் பிரிந்து ஆஸ்திரேலியாவில் அவர் குடியேறினார்.

செவிலியராகப் பணியாற்றும் மேரி பெங்களூரில் பணியாற்றியபோது ஆதரவற்ற குழந்தைகள் அனுபவிக்கும் இன்னலைக் கண்டுள்ளார். அப்போது முதல் ஒரு ஆதரவற்ற குழந்தையையாவது தத்தெடுத்து அக்குழந்தைக்கு அன்பான குடும்பச்சூழலை அளிக்க வேண்டும் என்று அவர் உறுதியாக உள்ளார்.

"ஆதரவற்ற குழந்தைகள் தங்கள் சொந்த நாட்டிலேயே தத்து கொடுக்கப்படவேண்டும் என்று சரியான முறையில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அது சாத்தியமில்லாதபோது வேறு நாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டு குடும்பச் சூழலில் அவர்கள் வளர வாய்ப்பளிக்கப்படுகிறது. வேறு நாடுகளுக்கு குழந்தைகளை தத்து கொடுக்கும்போது அவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். தத்து கொடுப்பதற்கான நடைமுறையில் வெளிப்படைத்தன்மையும், விழுமியங்களும் இருக்க வேண்டும்," என்கிறார் அடாப்ட் சேஞ் (Adopt Change) எனும் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரெனீ கார்ட்டர்.

2016-17இல் தைவான், தென்கொரியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து 69 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :