அமெரிக்காவின் எதிரி, தாலிபனின் நண்பர் - உயிரிழந்த ஹக்கானி யார்?

தாலிபன் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான ஹக்கானி நெட்வொர்க் எனும் தீவிரவாதக் குழுவின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி 'நோயுடன் நீண்டநாள் போராடியபின் உயிரிழந்துள்ளார்' என்று ஆப்கானிஸ்தான் தாலிபன் அறிவித்துள்ளது.

அவர் 2014ஆம் ஆண்டே இறந்ததாக சில ஊடகச் செய்திகள் வெளியானபோதும் அதை உறுதிசெய்ய முடியவில்லை.

மே 31,2017இல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஜான்பாக் சதுக்கத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 150க்கும் மேலானவர்கள் இறந்தனர். இந்த குண்டுவெடிப்பு மற்றும் பல மோசமான தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஹக்கானி நெட்வொர்க் இருந்ததாக நம்பப்படுகிறது.

காபூலில் உள்ள அமெரிக்க மற்றும் பிற மேற்கத்திய அமைப்புகளின் அலுவலங்களை ஹக்கானி அமைப்பு இலக்கு வைத்து தாக்கியதாக அமெரிக்க மற்றும் ஆஃப்கன் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

யார் இந்த ஹக்கானி?

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பக்டிகா மாகாணத்தில் ஜலாலுதீன் ஹக்கானி பிறந்தார். பாஷ்த்துன் இனக்குழுவைச் சேர்ந்த ஜாத்ரான் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த குடும்பம் இவருடையது.

1980களில் சோவியத்துக்கு எதிரான போர் நடந்தபோது முக்கியமான முஜாகுதீன் தளபதியாக இவர் இருந்தார். முஜாகுதீன் குழுக்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளுக்கு இவர் மத்தியஸ்தம் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

1990களின் மத்தியில் இவர் தாலிபனுக்கு அணி மாறினார். ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரில் தாலிபன் அப்போது கணிசமான வெற்றிகளைப் பெறத்தொடங்கியிருந்தது.

படக்குறிப்பு,

1991இல் எடுக்கப்பட்ட படத்தில் ஜலாலுதீன் ஹக்கானி (நடுவில்)

தாலிபன் அமைப்பு ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது 1996 முதல் 2001 வரை இவர் எல்லைகளுக்கான அமைச்சராக இருந்தார்.

அவருக்கு ஏழு மகன்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒருவரான அனாஸ் ஹக்கானி 2014ல் ஆஃப்கன் படைகளால் கைது செய்யப்பட்டார். மரண தண்டனையை எதிர்கொண்டு, இப்போது அனாஸ் சிறையில் உள்ளார்.

பத்ருதீன் ஹக்கானி, ஒமர் ஹக்கானி, முகமது ஹக்கானி ஆகிய மூன்று மகன்கள் அமெரிக்க படைகளின் தாக்குதலில் பல்வேறு காலகட்டங்களில் கொல்லப்பட்டனர்.

நாஸிருத்தீன் ஹக்கானி எனும் இன்னொரு மகனை பாகிஸ்தானில் சுட்டுக்கொன்றவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

சிராஜுதீன் ஹக்கானி எனும் மகன் 2008 முதல் ஹக்கானி நெட்வொர்க் அமைப்பை தலைமையேற்று நடத்துவதாக கூறப்படுகிறது. ஆசிஸ் ஹக்கானி எனும் இன்னொரு மகனும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

ஹக்கானி நெட்வொர்க் தாலிபன் மற்றும் அல்-கய்தா அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பக்டிகா மாகாணங்களிலும் பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளிலும் இந்த அமைப்பு இயங்குகிறது.

படக்குறிப்பு,

ஜலாலுதீன் ஹக்கானி (வலது) தலைமையிலான அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

செப்டெம்பர் 11 தாக்குதலின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று 80 அமெரிக்க படையினரையும் நான்கு ஆப்கானிஸ்தான் குடிமக்களையும் 2011இல் கொன்ற காபூல் குண்டுவெடிப்புக்கு ஹக்கானி நெட்வொர்க்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

அவரது மரணத்தையொட்டி செப்டெம்பர் 4 அன்று தாலிபன் வெளியிட்டுள்ள செய்தியில் இஸ்லாமிய எமிரேட் (தாலிபன் ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தான்) மீதான அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக ஹக்கானி 'சஹாப்' செய்த செயல்கள் வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அத்தியாயங்கள் என்றும் அதை எண்ணி வருக்கால இஸ்லாமியத் தலைமுறை பெருமைகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மரணத்தின் தாக்கம்?

ஹக்கானியின் மரணம் அவரது அமைப்பின் கொடூரமான செயல்களைப் பாதிக்காது என்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் அவருக்குப் பின் தலைமையேற்று நடத்துபவர்களை ஏற்கனவே பயிற்றுவித்துவிட்டது என்றும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் உளவுப் பிரிவுத் தலைவர் ரஹ்மத்துல்லா நபில் கூறியுள்ளார்.

அமெரிக்காவும் இத்தகைய குற்றச்சாட்டை முன்னர் வைத்தபோது பாகிஸ்தான் அதிகாரிகள் இதை மறுத்தனர்.

அட்மிரல் மைக் முல்லன் எனும் அமெரிக்க ராணுவ அதிகாரி 2011இல் ஹக்கானி நெர்வொர்க் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு கிளைதான் என்று கூறியிருந்தார்.

ஜூன் 1, 2016இல் தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் எனும் பாகிஸ்தான் நாளிதழ், சிராஜுதீன் ஹக்கானிதான் தாலிபனில் உண்மையான சக்திவாய்ந்தவராக உள்ளார் என்று கூறியிருந்தது.

உலகம் முழுதும் உள்ள ஜிகாதிகள் மட்டுமல்லாது சில இஸ்லாமியவாத மதகுருக்களும் ஜலாலுதீன் இறப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :