இந்திய - பாகிஸ்தான் எல்லையில் குருத்வாரா: 3 கி.மீட்டர்தான்; ஆனால், முடிவில்லா பயணம்

கர்டர்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்
படக்குறிப்பு,

கர்டர்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்

இந்திய எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கர்டர்பூரில் உள்ளது குருத்வாரா தர்பார் சாஹிப். பஞ்சாப் மாகாணத்தின் நரோவல் மாவட்டத்தில் உள்ள இந்த குருத்வாராவிற்கு அமிர்தசரஸரில் அல்லது லாகூரில் இருந்து 3 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவு மற்றும் பிரிவினையால் இந்த பயணம் முடியவே முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உள்ள இந்த குருத்வாரா, சீக்கிய மக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. தற்போது இதுகுறித்த இடங்கள்தான் இருநாடுகளிலும் தலைப்புச் செய்திகளாக உள்ளன.

பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் ஃபவத் சௌத்ரி பிபிசியிடம் பேசுகையில், ஆயிரக்கணக்கான சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா அல்லாமல் இலவச அனுமதி கொடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்க, இரு தரப்பினரிடையே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ்ஜி, கர்தாபூரில்தான் அவரது குறுகிய காலத்தை செலவிட்டார். அவருடைய கல்லறையும் சமாதியும் இங்கு உள்ளது. சீக்கியர்களால் இதற்கு பெரும் மரியாதை வழங்கப்படுகிறது.

ரவி நதியின் மேற்கு கரையில் இந்த குருத்வாரா அமைந்திருக்க, கிழக்குக் கரையில் முட்கம்பிகள் படர்ந்திருக்கும். இதுதான் இந்தியாவின் எல்லைப்பகுதி.

லாகூரில் உள்ள டேரா சாஹிப், ஹசனப்தல்லில் உள்ள புஞ்சா சாஹிப் போன்ற புனித தலங்கள் போன்று அல்லாமல் இந்த தர்பார் சாஹிப் தனியாக ஓர் எல்லைப்பகுதியில் உள்ளது.

பிரதான சாலை முடிந்தவுடன், வேறொரு உலகம் மக்களை வரவேற்கும். பச்சை பசேலென இருக்கும் வயல்வெளிகளில் அடிக்கும் காற்று, நெற்செடிகளை சுற்றி நாய்கள் ஓடிவருவது, மாட்டு வண்டிகள், தூரத்தில் இருந்து வரும் பம்ப் செட்டுகளின் சத்தத்தால் அந்த இடம் நிறைந்திருக்கும்.

நீல நிற வானத்தில் வெள்ளைப் புறா பறப்பதுபோல, பச்சைப் பசேலென இருக்கும் இடத்தில் வெள்ளை பளிங்குக்கற்களினால் ஆன குருத்வாரா தனியே தெரியும்.

பிரதான சாலைகளில் ஹாரன் சத்தத்திற்கு இடையே வானகம் ஓட்டிச் செல்வோருக்கு, இந்த குருத்வாராவிற்கு போகும் சாலையில் வாகனம் ஓட்டிச் செல்வது வித்தியாசமான அனுபவத்தைத்தரும்.

குருத்வாராவிற்கு வெளியே ஒரு கிணறு ஒன்று இருக்கும். இந்த கிணறு குருநானக் தேவ்ஜி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே இதற்கு "சிறி கு சாஹிப்" என்று பெயரிடப்பட்டது.

கிணற்றிற்கு அருகில் வெடிகுண்டு ஒன்றின் பாகமானது கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும். 1971ஆம் ஆண்டு போரின்போது, இந்திய விமானப்படையால் போடப்பட்ட குண்டு அது என்று அருகில் எழுதியிருக்கும்.

குருத்வாராவின் நுழைவு வாயிலில் இவ்வாறு எழுதியிருக்கும்: "குருத்வாராவின் உள்ளே நுழையும் முன், தலையை மூடிக்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் கவலையில்லை".

இங்குவரும் யாரும் அங்குள்ள சமையலறையின் லங்கர் உண்ணாமல் செல்லமாட்டார்கள்.

நான் பிரதான அரைக்கு சென்று கொண்டிருக்கும் போது, அங்கு ஒரு புதுமண தம்பதியினர் வேண்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன். சீக்கிய இளைஞர் ஒருவர் அவர்களின் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

அதிகளவிலான முஸ்லிம்களும் இங்கு வந்து வேண்டி மரியாதை செலுத்தி செல்வதுண்டு என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

குருத்வாரா தர்பார் சாஹிபின் உண்மையான கட்டடம் 20ஆம் நூற்றாண்டில் ரவி நதியில் வெள்ளம் ஏற்பட்டபோது சேதமடைந்தது. தற்போது அங்கிருக்கும் கட்டடமானது 1920ஆம் ஆண்டு கட்ட துவங்கப்பட்டு, 9 ஆண்டுகளுக்கு பிறகு முடிக்கப்பட்டது. இதற்கு ஆன செலவான 1,35,600 ரூபாயை பட்டியாலாவின் மகாராஜாவாக இருந்த சர்தார் போபின்தர் சிங் ஏற்றுக்கொண்டார்.

1995ஆம் ஆண்டு கட்டடத்தில் ஏற்பட்ட கோளாறுகளை பாகிஸ்தானும் சரி செய்ய முயற்சி எடுத்தது. இந்த குருத்வாரா பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருந்தாலும், இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவு சிக்கல்களால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பக்தர்களுக்காக எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை தர்ஷன் சதாய் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அங்கு தொலைநோக்கி மூலமாக பக்தர்கள் குருத்வாராவை காணலாம்.

குருத்வாரா அமைந்துள்ள கரத்பூருக்கு, இந்தியர்கள் விசா இல்லாமல் இலவசமாக நுழைவதற்காக 1998ஆம் ஆண்டு முதன்முதலாக பரிந்துரைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த பேச்சு எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் இதுகுறித்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :