லிபியா: துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் இருவர் பலி

தேசிய எண்ணெய் நிறுவன கட்டடத்தில் இருந்து வெளிவரும் புகை
படக்குறிப்பு,

தேசிய எண்ணெய் நிறுவன கட்டடத்தில் இருந்து வெளிவரும் புகை

லிபியா தலைநகர் திரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தினுள் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர்.

ஆயுதக்குழுவினருடன் அங்கிருந்த பாதுகாப்பு படைகள் மோதினர். தலைநகர் மத்தியில் உள்ள அக்கட்டடத்தில் இருந்து வெடி மற்றும் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக, சாட்சிகள் தெரிவித்தன.

இரண்டு ஊழியர்களும் இரண்டு துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திரிபோலியில் உள்ள ஐ.நா ஆதரவு பெற்ற அரசாங்கம் பெயரளவிலேயே ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆயுதக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க ஜன்னலில் இருந்து வெளியே குதித்த தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், மூன்று அல்லது ஐந்து துப்பாகிதாரிகள் சுட்டுக் கொண்டிருந்ததாகவும், பலர் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எண்ணெய் நிறுவனத்தின் தலைவரான முஸ்தஃபா சனாலாஹ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சாட்சி ஒருவர் கூறியதாகவும் ராய்டர்ஸ் நிறுவன செய்தி தெரிவிக்கிறது.

கட்டடத்தில் இருந்து வெளியே வரும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

இது யார் நடத்திய தாக்குதல் என்று இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.

லிபியா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வளம். நீண்ட காலம் ஆட்சி செய்த கடாஃபி 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள் வெடித்து வந்தன.

சமீபத்தில் நடந்த வன்முறையானது, ஆயிரக்கணக்கான மக்களை அருகில் உள்ள நகரங்களுக்கு வெளியேற்றியதோடு, பலரை வீட்டில் இருந்து வெளிவர விடாமல் செய்துள்ளது.

கடந்த மே மாதம், திரிபோலியில் உள்ள தேசிய தேர்தல் ஆணையத்தில் ஐ.எஸ் அமைப்பு மோசமான தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :