செளதி: பெண்ணுடன் உணவு அருந்தியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்

செளதி அரேபியாவில் பெண்ணுடன் காலை உணவருந்திய எகிப்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருவரும் உணவருந்தும் காணொளியானது ட்விட்டரில் வைரலானதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

காணொளியில் என்ன இருக்கிறது?

எகிப்திய பேச்சு வழக்கில் உரையாடிக் கொண்டே புர்கா அணிந்த பெண்ணுடன் அந்த இளைஞர் உணவருந்தி கொண்டிருக்கிறார். முகம் முழுக்க மறைத்த வண்ணம் புர்கா அணிந்திருக்கும் அந்த பெண் செளதியை சேர்ந்தவர் என கருதப்படுகிறது.

முப்பது விநாடிகள் நீளும் அந்த காணொளியில் இருவரும் உரையாடிக் கொண்டே உணவருந்துகிறார்கள். இறுதியில் அந்த பெண், இளைஞருக்கு உணவூட்டுகிறார்.

அந்த நாட்டு சட்டப்படி உணவகங்களுக்கு குடும்பத்துடன் வருபவர்களும், தனியாக வரும் ஆண்களும் தனித்தனி இடத்தில் அமர்ந்துதான் உணவருந்த வேண்டும்.

குறிப்பாக தனியாக வரும் பெண்கள் அவர்களின் ஆண் துணைவர்கள், அதாவது தந்தை மற்றும் கணவர், சகோதரர் அல்லது மகன் இல்லாமல் யாருடனும் உரையாட கூடாது.

இந்த சட்டத்தை மீறியதால் அந்த எகிப்தியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சட்டத்தை மீறுதல்

தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அந்த அமைச்சகம், "பல விதிகளை இவர் மீறி உள்ளார்" என்கிறது.

இவர்கள் இருவரின் காணொளியானது, "செளதி பெண்ணுடன் உணவருந்தும் இளைஞர்" என்ற ஹேஷ் டாகுடன் பதிவேற்றப்பட்டு 113,000 முறை பகிரப்பட்டு இருக்கிறது.

செளதி என்ன சொல்கிறது?

பலர் ஏன் ஆண்களுக்கு மட்டும் தண்டனை என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

பெண்ணும் ஆணும் தானே ஒன்றாக உணவருந்தினார்கள். பின் ஏன் ஆண்கள் மட்டும் தண்டிக்கபடுகிறார்கள் என ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார் மலாக்.

செளதி பெண்கள் வேற்று நாட்டினருடம் பணிப்புரிவது தம் நாட்டின் கலாசாரம், பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்துவதாக ட்வீட்டரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலின வேறுபாடு கடந்த நட்பு மலர வேண்டுமென்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

எகிப்து என்ன நினைக்கிறது?

செளதி பெண்கள் விஷயத்தில் மிகவும் முற்போக்கான முடிகளை எடுத்திருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கியது அந்நாடு. இப்படியான சூழலில் உணவருந்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது முரண்பாடாக இருக்கிறது என்று பலர் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்