இன்னொரு அமெரிக்க - வட கொரிய உச்சி மாநாடு: கிம் எழுதிய 'அன்பான' கடிதம்

வரலாற்று முக்கியத்துவமிக்க அமெரிக்க - வட கொரிய உச்சி மாநாட்டை தொடர்ந்து இன்னுமோர் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இன்னுமொரு சந்திப்புக்கு தாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டுவருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த "அன்பான" கடிதம், அணு ஆயுத ஒழிப்பில் வட கொரியாவுக்கு உள்ள தொடர் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்குப் பின், இந்த தலைப்பிலான பேச்சுவார்த்தைகள் முடங்கி போனதாக தோன்றின.

அதிபர் டிரம்போடு இன்னெரு கூட்டம் நடத்த சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யக் கோருவதே இந்த கடிதத்தின் முக்கிய நோக்கம் என்றும், தாங்கள் இதற்கு திறந்த மனதுடனே இருப்பதாகவும் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் சான்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

இந்த இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு எப்போது நடைபெறலாம் என்பது பற்றி அவர் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

வட கொரியத் தலைவர் அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதியிருப்பதை தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் வரவேற்றுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் முழு அணு ஆயுத ஒழிப்பு என்பது, அமெரிக்கா - வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை மூலம் அடிப்படையில் தீர்வு காணக்கூடிய பிரச்சனை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜூன் மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற அதிபர் மூன் முக்கியப் பங்காற்றினார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை அடுத்த வாரம் பியோங்யாங்கில் நேரில் சந்திக்கும் அதிபர் மூன், மூன்றாவது சுற்று பேச்சு நடத்தவுள்ளார்.

.அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் மத்தியஸ்தர் போல தன்னை பார்க்கும் மூன், இரு தரப்பும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளதாக சோலிலுள்ள பிபிசியின் செய்தியாளர் லௌரா பிக்கர் கூறியுள்ளார்.

வட கொரியாவின் தொடர் அணு நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையின் தீர்மானங்களுக்கு எதிரானவை என்று ஐநாவின் அணு கண்காணிப்பு அமைப்பின் தலைவர் யுகியா அமானோ விடுத்த எச்சரிக்கை விடுத்த மறுநாள், வட கொரியாவின் இந்த கடிதம் வந்துள்ளது.

வட கொரியாவில் நுழைய சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு தடையுள்ளது. அரசியல் ஒப்பந்தம் எட்டப்படுமானால் தாங்கள் வட கொரியா செல்ல தயாராக இருப்பதாக அமானோ கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :