பிரேசில்: அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம் - போட்டியிலிருந்து லூலா விலகல்

  • 12 செப்டம்பர் 2018

பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அதிபரான லூயீஸ் ஈனாஸ்யோ லூலா டா சில்வா விலகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை REUTERS

72 வயதான லூலா தனது 12 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகின்ற காவல்துறையின் தலைமையகத்தின் வெளியில், தொழிலாளர் கட்சியின் தலைவர் கலெய்சி கோஃப்மன் இந்த முடிவை அறிவித்தார்.

லூலா மீதான ஊழல் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் 2 வாரங்களுக்கு முன்னர்தான் பிரேசிலின் தேர்தல் மேல் நீதிமன்றம் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து லூலாவை தடை செய்தது.

தீவிர வலதுசாரி அதிபர் வேட்பாளர் பரப்புரை பேரணியில் கத்தியால் குத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், இந்த நடவடிக்கை வந்துள்ளது.

தனி நபர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட 63 வயதான ஜயீர் போல்சோனாரோவுக்கு பெரியதொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லூலாவை விடுதலை செய்ய வேண்டுமென 5 மாதங்களாக சிறைக்கு வெளியே முகாமிட்டுள்ள அவருடைய ஆதரவாளர்களுக்கு அவரால் எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்று வாசித்து காட்டப்பட்டது.

அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று ஜனவரி 2003 முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பிரேசிலை ஆண்ட முன்னாள் அதிபர் இந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption லூலா சிறையிடப்பட்டுள்ள காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் அவரது இடத்தில் பெர்னான்டோ அட்டாட் அதிபராக போட்டியிடுவார் என்று பெயரையும் லூலா அறிவித்திருந்தார்.

மிக நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவில், அதிபர் தேர்தலில் போட்டியிட லூலா தகுதியில்லாதவர் என்று தேர்தல் மேல் நீதிமன்றம் ஆகஸ்ட் 31ம் தேதி அறிவித்த பின்னர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகும் தீர்மானத்தை லூலா எடுத்துள்ளார்.

லூலாவின் சட்டக்குழுவும், தொழிலாளர் கட்சியும் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளது.

திங்கள்கிழமை இரவு வரை இந்த அதிபர் தேர்தலில் லூலாவை போட்டியிட வைப்பதே தொழிலாளர் கட்சியின் திட்டமாக இருந்தது.

லூலா சிறைப்படுத்தப்பட்ட பின்னரும், டேட்டாஃபோல்ஹா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 40 சதவீத மக்கள் லூலாவுக்கே வாக்களிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரியதொரு ஊழல் திட்டத்தில் ஈடுபட்ட பொறியியல் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கையூட்டு பெற்றதாக 2017ம் ஆண்டு லூலா மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

தன் மீதான குற்றத்தை மறுத்த லூலா, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்தார்.

கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கிய மேல் முறையீட்டு நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை உறுதி செய்ததோடு, முன்னர் வழங்கப்பட்ட ஒன்பதரை ஆண்டு சிறைதண்டனையை 12 ஆண்டாக உயர்த்தி அறிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்