சூறாவளி ஃபுளோரன்ஸ்: 'பேரழிவு ஏற்படலாம்' - பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்குமுன்பு அந்த பகுதிகளில் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில் ஏராளமான மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சூறாவளியின் தாக்கம் அடுத்த 48 மணி நேரங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களை சேர்ந்த ஏறக்குறைய 17 லட்சம் மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption வெளியேறிவரும் மக்கள்

பேரழிவை உண்டாக்கும் வெள்ளம் மற்றும் புயல் காற்றை எதிர்கொள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வட மற்றும் தென் கரோலினா, வர்ஜீனியா, மேரிலாண்ட் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகிய மாகாணங்களை தொடர்ந்து, புதன்கிழமையன்று ஜார்ஜியா மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கரோலினா மாகாணங்களில் கடந்த 3 தசாப்தங்களில் ஏற்பட்ட சூறாவளிகளில் இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் ஃபுளோரன்ஸ் சூறாவளி வலுப்பெறும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தேசிய வானிலை சேவை மைய பேச்சளார் ஒருவர் கூறுகையில், ''கரோலினா கடற்கரையில் சில பகுதிகளில் வாழ்நாளில் ஒருவர் சந்தித்த மிகப்பெரிய புயலாக இதன் தாக்கம் இருக்கக்கூடும்'' என்று தெரிவித்தார்.

''முந்தைய சூறாவளிகளான டயானா, மேத்யூ போன்றவைகளின் பாதிப்பை முன்பு சந்தித்த நிலையில், தற்போதைய ஃபுளோரன்ஸ் சூறாவளியின் தாக்கம் கணக்கிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வட கரோலினா ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்ட செய்தியில், ''பேரழிவு வீட்டுவாசலில் நிற்கிறது' என்று ஃபுளோரன்ஸ் சூறாவளி ஏற்படுத்தவுள்ள பாதிப்பை வர்ணித்துள்ளார். இதனால் பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் வெள்ள நீரில் சூழப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சூறாவளி ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து பல தகவல்கள் வெளிவரும் நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில் தெற்கு கரோலினாவில் பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம் நடந்துவரும் நிலையில், அங்குள்ள ஒரு சிறையில் கிட்டதட்ட 1000 கைதிகள் அங்கிருந்து வேறு செல்களுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது

''முன்பு இதே போல் இயற்கை பேரழிவுகள் நடந்தபோதுகூட அவர்கள் அதே செல்களில் இருந்தனர். இந்த இடம் பாதுகாப்பானதுதான்'' என்று ஒரு அரசு துறை பேச்சளார் இது குறித்து தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்