வர்த்தக போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா

  • 19 செப்டம்பர் 2018

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா பதில் வரி

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது.

டிரம்ப்க்கு அரசியல் ஆதரவுள்ள மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் அடக்கம்.

அமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தல்களில் சீனா தாக்கம் செலுத்த முயல்வதற்கு எதிராக டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.

'பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் குழந்தைகள்'

படத்தின் காப்புரிமை MOHAMMED AWADH/ SAVE THE CHILDREN

ஏமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக 'சேவ் த சில்ரன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஏமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மீது புகார்

படத்தின் காப்புரிமை Getty Images

வேலைவாய்ப்பு விளம்பரங்களில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் அமெரிக்க வேலைவாய்ப்பு சமத்துவ ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

இந்தப் புகாரில், ஃபேஸ்புக்கில் வெளியான 10 வேலைவாய்ப்பு விளம்பரங்கள் 25 முதல் 35 வயது வரையிலான ஆண்களை மட்டுமே இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது சுட்டிக்கப்பட்டுள்ளது.

ஒஹையோ, பென்சில்வேனியா, இல்லினோ ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு இந்த விளம்பரங்கள் தெரியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சோவியத் முத்திரைக்கு தடை

படத்தின் காப்புரிமை AFP / Getty Images

சோவியத் ஒன்றியத்தின் அரிவாள் மற்றும் சுத்தியல் சின்னங்கள் அச்சிடப்பட்ட டீ-சர்ட்டுகள் வால்மார்ட் நிறுவனத்தின் கிளைகளில் விற்பனை செய்யப்படாது என்று லித்துவேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோவியத் ஆட்சிக்காலத்தில் லித்துவேனியாவைச் சேர்ந்த கொல்லப்பட்டவர்களை அவமதிக்கும் விதமாக அவை இருப்பதாக லித்துவேனியா தூதர் அமெரிக்காவிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜோசஃப் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் 21,000 லித்துவேனியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு குற்றம்சாட்டுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :