'புதிய மெக்ஸிகோ அதிபர் - 'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்'

  • 21 செப்டம்பர் 2018

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்'

படத்தின் காப்புரிமை Reuters

மெக்ஸிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ சாதாரண பயணிகள் விமானத்தில்தான் பயணிப்பேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.

இவர் சமீபத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் பயணித்தபோது கனமழையின் காரணமாக விமானத்தினுள்ளே சுமார் மூன்று மணிநேரங்களுக்கு சிக்கியிருக்க நேர்ந்தது.

இருந்தபோதிலும், வரும் டிசம்பர் அந்நாட்டின் அதிபராக பதவியேற்கவிருக்கும் இவர் அதிபருக்கான பிரத்யேக விமானத்தை விற்பதுடன், தொடர்ந்து பயணிகள் விமானத்தில்தான் பயணிப்பேன் என்றும் கூறிவருகிறார்.

அமெரிக்கா: மூன்று பேரை சுட்டுக்கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை

படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் மூன்று பேரை சுட்டுக்கொன்ற பெண்ணொருவர் இறுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பால்டிமோர் நகருக்கு அருகேயுள்ள பெர்ரிமான் பகுதியிலுள்ள மருந்து விநியோக மையம் ஒன்றில் வியாழக்கிழமை காலை இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டது 26 வயதான ஸ்நோச்சியா என்ற பெண் என்பதும், அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தைவான்: ஸ்வஸ்திக் சின்னத்துக்கு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை EPA

நாசிகளின் ஸ்வஸ்திக் சின்னத்தை ஒத்து காணப்பட்ட தைவானிலுள்ள சிகை அலங்கார கடை ஒன்றின் சின்னம் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது.

தைவானின் வடக்குப்பகுதியிலுள்ள சிஞ்சு நகரத்தில் செயல்பட்டு வரும் 'பெர்லின் ஹேர் சலூன்' என்ற அந்த கடையின் பெயர் மற்றும் ஸ்வஸ்திக்கை ஒத்த லோகோ ஆகியவை கடந்த ஒரு வாரகாலமாக கடும் விமர்சனத்துக்குள்ளானதாகவும், அதன் பிறகு தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாகவும் தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பகுதியில் வாழும் ஜெர்மனி மற்றும் யூத இனத்தை சார்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த ஸ்வஸ்திக் சின்னமும் நீக்கப்பட்டுள்ளது.

டான்சானியா: படகு விபத்தில் 40 பேர் பலி

படத்தின் காப்புரிமை STEPHEN MSENGI

டான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் பல நூற்றுக்கணக்கானோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்த விபத்து குறித்து தெரிவித்த ஓர் உள்ளூர் அதிகாரி, ஏரியில் மூழ்கியவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டக்கூடும் என்று கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை விடிகாலை வரை மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த விபத்தில் ஏறக்குறைய 100 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 32 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :