இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமை Spencer Platt/Getty Images
Image caption ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக மறுப்பவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

2015 இரான் அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இரான் மீது முன்பு அமெரிக்கா விதித்திருந்த தடைகளை மறுபடியும் விதித்தது அமெரிக்கா.

ஆனால், இரான் உடன்படிக்கையை தொடர்ந்து ஆதரிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் இரான் அணு ஆயுத விவகாரத்தை சமாளிக்க நீண்டகால உபாயம் தேவை என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய மக்ரோங், அணு உடன்படிக்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் மாறுபாடு இருந்தாலும் அமெரிக்க அதிபரின் நோக்கங்களுடன் உடன்படுவதாக குறிப்பிட்டார். "நாம் ஒன்றாக சேர்ந்து நீண்டகால உபாயத்தை வகுக்கவேண்டும். தடைகளிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் இறங்குவதாக அது இருக்கக்கூடாது" என்றார் அவர்.

2015ம் ஆண்டு உலக வல்லரசுகள் சேர்ந்து இரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயலக்கூடாது. அதற்குப் பதிலாக வல்லரசுகள் விதித்திருந்த தடைகளை அவை விலக்கிக் கொள்ளும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு சுழற்சி முறையில் நாடுகள் தலைமை வகிக்கும். அதன் அடிப்படையில் தற்போதைய கூட்டத்துக்கு தலைமை வகிப்பது அமெரிக்காவின் முறை என்பதால் அமெரிக்க அதிபர் இந்த பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார்.

"இரான் அரசு தமது போக்கை மாற்றிக்கொள்வதை உறுதி செய்யும் வகையிலும், அது அணு ஆயுதம் தயாரிக்காமல் இருப்பதற்காகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்" என்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியா நாட்டு அரசு படுகொலைகளில் ஈடுபடுவதற்கு இரானும், ரஷ்யாவும் உதவி செய்வதாக குற்றம் சாட்டினார். அதேநேரம், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மீதான ஒரு தாக்குதலில் இருந்து விலகியதற்காக அந்த மூன்று நாடுகளுக்கும் டிரம்ப் நன்றி சொன்னார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரான் உறுப்பு நாடாக இல்லை. அதே நேரம், செவ்வாய்க்கிழமை நடந்த ஐ.நா. பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய இரான் அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்காவை அடாவடி நாடு என வருணித்தார். அச்சுறுத்தல்களை, நியாயமற்ற தடைகளை நிறுத்துவதன் மூலமே பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :