மெடிட்டரேனியன் உணவுமுறை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மெடிட்டரேனியன் டயட் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும்

மெடிட்டரேனியன் டயட் (Mediterranean diet) உடல்நலத்திற்கு நல்லது என கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, மனச்சோர்வை குறைக்க இந்த டயட் உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிட்டரேனியன் டயட் என்றால் என்ன? அது எப்படி உங்களுக்கு உதவும் என்பது தெரியுமா?

மெடிட்டரேனியன் டயட் என்றால் என்ன?

வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும். உதாரணமாக முழு தானிய பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி ஆகியவற்றை கூறலாம்.

மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

இந்த உணவு பொருட்கள் எல்லாம் ஒன்று சேர, உடல்நலனுக்கு இது நல்லது என்கிறார், பிரிட்டன் இதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகரான விக்டோரியா டெய்லர்.

இந்த டயட் தரும் உடல்நலன்கள் என்னென்ன?

மெடிட்டரேனியன் டயட் உணவுமுறைபடி உணவு உட்கொள்வதால் இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், இந்த உணவுமுறையை பின்பற்றினால், நீண்ட ஆயுளுடன், உடல் எடை கூடாமல் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது எப்படி சாத்தியம்?

ஒரே ஒரு முழு உணவை விட, இப்படி பலவகையான உணவுகளை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்கிறார் விக்டோரியா டெய்லர்.

ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது ஒரு முக்கியமான விஷயம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது ஒரு முக்கியமான விஷயம்

ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வெண்ணெய் ஒற்றை நிறைசெறிவிலி கொழுப்பு (monounsaturated fat) வகையை சேரும். இது, கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவும் என்கிறது அமெரிக்க மருத்துவ மேயோ கிளினிக்.

கொட்டைகள், விதைகள் மற்றும் எண்ணெய் மீன்களில் பல நிறைசெறிவிலி கொழுப்பு (polyunsaturated fats) இருக்கிறது.

மேலும் சில உணவு தேர்வுகளால் ஏற்படக்கூடிய பலன்களையும் மேயோ கிளினிக் விவரிக்கிறது:

  • உப்பு உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்புக்கு பதிலாக மூலிகைகள் அல்லது மசாலா பொருட்களை பயன்படுத்தி ருசியை கொண்டு வரலாம்.
  • ஆட்டுக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாரத்திற்கு இருமுறையாவது மீன் மற்றும் கோழிக்கறி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மிதமான அளவு சிவப்பு வைன் குடிக்கலாம்
  • நல்ல உடற்பயிற்சி செய்வது அவசியம்.

இப்படியாக பல நாடுகளில் மெடிட்டரேனியன் டயட் பின்பற்றப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

உதாரணமாக கிரேக்க நாட்டில், மிகக் குறைந்தளவிலான சிவப்பு இறைச்சியோடு, தினமும் சுமார் 9 முறை நல்ல காய்கறிப் பழங்களை மக்கள் உட்கொள்வர்.

மெடிட்டரேனியன் முறையில் எப்படி உணவு எடுத்துக் கொள்வது?

நீங்கள் உட்கொள்ளும் உணவுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால், இதன் முழு பயன்களை பெறலாம்.

"இறைச்சி உண்ணுவதை குறைத்துக் கொண்டு, அதிக மீன் மற்றும் சத்தான கொழுப்புகளோடு, நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொண்டால் உங்கள் உடல் நலத்தில் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்" என்று டெய்லர் குறிப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்கால உணவுமுறையில் நாம் தவிர்க்க வேண்டியது கொழுப்பா அல்லது சர்க்கரையா என்ற விவாதம் வலுத்து வருகிறது.

ஒவ்வொரு உணவும், அதன் சத்துக்களும் உங்கள் உடலை எப்படி பாதிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்தியத் தரைக்கடல் பகுதியில் நீங்கள் வாழவில்லை என்றாலும் - கடலுக்கு அருகில், நல்ல சூரிய வெளிச்சத்தோடு, சுவையான உணவுகள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தரும் - மத்தியத் தரைக்கடலில் இல்லையென்றாலும், இந்த உணவுகளின் பயன்களை நீங்கள் பெறலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்