இரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் இந்தியா

இந்தியா - இரான் படத்தின் காப்புரிமை Getty Images

இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பைத் தொடர்வதற்குதம் இந்தியா உறுதியளித்துள்ளதாக இரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிஃப் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த பிறகு, இரான் வெளியுறவு அமைச்சரின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக நியூயார்க் சென்றிருந்த இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும், அங்கு சந்தித்துக் கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

எதிர்வரும் நவம்பரில் இரானின் எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்வது தொடர்பாக இந்தியா நம்பிக்கையான செய்தி அளித்திருக்கிறதா என்று இரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிஃபிடம் கேட்கப்பட்டது.

"இரானுடன் பொருளாதார ஒத்துழைப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகியவை எப்போதும் தெளிவாக உள்ளன. இதைத்தான் இந்திய வெளியுறவு அமைச்சரும் என்னிடம் தெரிவித்தார்" என்று கூறியிருக்கிறார் இரான் வெளியுறவு அமைச்சர்.

புதன்கிழமையன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை பின்பற்றாத நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்தியாவுடனான எங்கள் உறவு விரிவானது. அதில் எரிபொருள் வர்த்தகமும் ஒன்று. ஏனெனில், இந்தியாவின் எரிபொருள் தேவைகளின் நம்பகமான ஆதாரமாக எப்போதுமே இரான் திகழ்கிறது" என்கிறார் ஜரீஃப்.

மேலும், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை இரான் வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரானுடனான இந்திய உறவு

2019ஆம் ஆண்டு மத்தியில் சாபாஹர் போக்குவரத்து மற்றும் பெயர்வு வழித்தடம் இயங்கத் தொடங்கிவிடும் என்று இரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிஃப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் யூகோ வங்கி மூலமாக சாபாஹார் துறைமுக அபிவிருத்தி பணிகளுக்காக இந்தியா 35 மில்லியன் டாலர் அளவுக்கு வங்கி உத்தரவாதம் வழங்க உத்தேசித்திருப்பதாக இந்திய அரசு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தற்போதும் சாபாஹார் துறைமுகம் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறும் ஜரீஃப், இந்தியா உட்பட பிற முதலீட்டாளர்களின் உதவியுடம் இந்த துறைமுகம் மேம்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கச்சா எண்ணெய் வர்த்தகம்

இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் (ஒபெக்) இரான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இரானின் மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் இந்தியா அதற்காக 100 பில்லியன் டாலருக்கும் மேலான தொகையை செலுத்தி வருகிறது.

அதேபோல் சீனாவுக்கு பிறகு, இந்தியாவுக்குதான் இரான் அதிகளவு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்கா மற்றும் இரானிடையே சர்வதேச அணுசக்தி உடன்படிக்கை முறிந்துபோன பிறகு, இந்தியா, இரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை குறைத்தது.

இருந்தாலும், அமெரிக்கா தடைகள் விதித்த பிறகும், இரானுடனான வர்த்தக உறவுகளை தொடர்ந்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில் அமெரிக்காவின் ஒருபக்க தடைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறிவித்த இந்தியா, இந்த விவகாரத்தில் ஐ.நாவின் விதிகளுக்கு ஏற்பவே செயல்பட்டது.

இந்த ஆண்டு இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. போக்குவரத்து செலவே இல்லை என்றே சொல்லும் அளவில் போக்குவரத்து கட்டணத்தை நிர்ணயித்ததுடன், கடன் அளவை அதிகரிப்பதாகவும் இரான் சலுகைகள் வழங்கியதை அடுத்து இந்தியா இந்த முடிவை எடுத்தது.

நவம்பர் மாதத்தில் இரானின் எண்ணெய் துறை மீது பொருளாதாரத் தடைகள் அமல்படுத்தப்படும்போது, இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது இந்தியாவுக்கு சுலபமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் சர்ச்சை

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரான் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டது.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, இந்த உடன்பாட்டின் கீழ், இரானின் மீது விதிக்கப்பட்டிருந்த அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தடைகளை நீக்கினார்.

ஆனால் 2018 மே மாதத்தில், இரானுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் வகையில் இந்த உடன்பாட்டை முறித்துக் கொண்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை தொடர்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இந்த பிரச்சனையில் டிரம்ப்பை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனால் டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒபாமா நிர்வாகம் இரானுடன் மேற்கொண்ட அணுசக்தி உடன்படிக்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தார்.

இதன் பின்னர், டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட புதிய ஆணை ஒன்றில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளில், இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை MEA

இரானுக்கு இந்தியா ஏன் வெளிப்படையாக ஆதரவளிக்க முடியாது?

இந்தியாவிற்கும் இரானுக்கும் இடையிலான உறவு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் ஏற்பட்டது. இந்தியாவின் எரிசக்தி தேவைகள் முழு முதல் காரணம் என்றால், இரானுக்கு பிறகு, உலகில் அதிக அளவிலான ஷியா முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.

சதாம் ஹுசைனின் இராக்கிடம் இந்தியா அதிக நெருக்கமாக இருப்பதாக இரானுக்கு தோன்றியது. எனவே, இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அந்நாடு பெரிய அளவு ஊக்கமளித்ததில்லை.

இதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய புரட்சி மற்றும் இராக்-இரான் போர் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதே சமயம், இரானுடன் நட்பு கொள்ள இந்தியாவுக்கு நீண்ட காலமாக தயக்கம் இருந்தது. அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு நெருக்கமானதால், இரானுடன் நட்பு கொள்வதற்கு இந்தியாவை அமெரிக்கா தடுத்துக் கொண்டிருந்தது.

இரான் அணு ஆயுதங்களைக் வைத்திருப்பதையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதன் சக்தி ஓங்குவதையும் அமெரிக்கா ஒருபோதும் விரும்பியதில்லை, எனவே, இரானுடன் பிற நாடுகளின் உறவு இணக்கமாகவோ, இயல்பாகவோ இருக்கக்கூடாது என்று அமெரிக்கா விரும்புவது அனைவராலும் புரிந்துக் கொள்ளக் கூடியதே.

படத்தின் காப்புரிமை Getty Images

இரானின் சபாஹார் துறைமுகத்தை உருவாக்க நீண்ட காலமாக இந்தியா முயற்சித்து வந்தாலும், சர்வதேச தடைகள் காரணமாக அந்த பணிகள் தேக்கநிலையில் உள்ளன.

இரானுடனான சாபாஹர் போக்குவரத்து மற்றும் பெயர்வு வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானும் இணைந்திருக்கிறது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியன் வங்கி, இரானில் தனது வங்கிக்கிளையை திறந்துள்ளது. இதைத்தவிர, ஏர் இந்தியா விமான நிறுவனம் புதுடெல்லியில் இருந்து தெஹ்ரானுக்கு நேரிடையான விமானச் சேவையை துவங்குவதாக அறிவித்துள்ளது.

இருந்தபோதிலும், 2009இல் இந்தியா ஐ.நா. தீர்மானத்தில் இரானுக்கு எதிராக வாக்களித்திருந்தது. அதற்கு காரணம், அமெரிக்காவின் அழுத்தமே என்றும் கூறப்படுகிறது.

செய்தியாளர் சநதிப்பில் இரான் தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இரான் தொடர்பான ஐ.நா அவையின் கட்டுப்பாடுகளை இந்தியா ஏற்கும் என்று தெரிவித்தார்.

இரான்: 40 ஆண்டுகளுக்கு பின் விளையாட்டு அரங்கில் பெண்களுக்கு அனுமதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இரான்: 40 ஆண்டுகளுக்கு பின் விளையாட்டு மைதானத்துக்குள் பெண்கள் அனுமதி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :