2000 ஆண்டுகள் மண்ணில் புதைந்திருந்த ரோமப் பேரரசின் கிராமம்

Archaeologist படத்தின் காப்புரிமை omroep west

நெதர்லாந்தில் உள்ள காட்விஜ்க் எனும் நகரில் 2000 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த பண்டைய ரோமப் பேரரசின் கிராமம் ஒன்றின் எச்சங்களையும், அப்போது பயன்படுத்தப்பட்ட சாலை ஒன்றின் ஒரு பகுதியையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பண்டைய ரோமப் பேரரசின் வடக்கு எல்லையாக இந்தப் பகுதி இருந்தது.

வால்கென்பர்க் புறநகர்ப் பகுதி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தப் பழங்கால சாலை 125 மீட்டர் நீளமுள்ளது.

அந்த பழங்கால கிராமத்தில் ஒரு கால்வாயும் மயானமும் இருந்த சுவடுகள் முழுமையாக உள்ளதாக ஒம்ரோப் வெஸ்ட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காட்விஜ்க் நகரத்தின் வழியாகப் பாய்ந்தோடும் ஓல்டு ரைன் நதியின் கரையோரத்தில் ரோமப் பேரரசர் கிளாடியஸ் லக்டுனம் படாவோரம் எனும் நகரைக் கட்டமைத்தார். அங்கிருந்து நதி வழியாக கப்பல்கள் பிரிட்டனுக்குச் சென்றுள்ளன.

படத்தின் காப்புரிமை OMROEP WEST

பண்டைய ரோமப் பேரரசின் ஒரு கிராமம் அதிகம் சிதையாமல் அப்படியே கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சாலைகள் மண்ணுக்குள் புதையாமல் இருக்க, அவற்றின் ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த ஓக் மரத்துண்டுகளின் கட்டைகள்கூட இன்னும் நல்ல நிலையில் உள்ளன.

இந்த சாலை கி.பி 125ஆம் ஆண்டு, பேரரசர் ஹட்ரியான் ஆட்சிக்காலத்தின்போது அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாய்வாளர்கள் கருதுகின்றனர்.

மண் பாண்டங்கள், தோலால் ஆன காலணிகள், நாணயங்கள், மீன் பிடிக்கும் கண்ணி மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை PROVINCIE ZUID-HOLLAND
Image caption ஓக் மரக்கட்டையுடன் தலைமை அகழ்வாராய்ச்சியாளர் ஜெரோன் லூபிக்

இந்த அகழ்வாய்வில் கிடைத்த கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்ட கல் ஒன்றின் மீது பூசப்பட்ட வர்ணம், சுமார் 20 நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அப்படியே உள்ளது அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அக்கல்லின்மீது சுண்ணாம்புச் சாந்தின் சுவடுகளும் உள்ளன. நெதர்லாந்தின் அகழ்வாய்வு தினமாக அனுசரிக்கப்படும் அக்டோபர் 13 முதல் அங்கு சென்று பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: