பாஜக ஆட்சியில்தான் அதிக விமான நிலையங்கள் கட்டப்பட்டதா? பிரதமரின் கூற்று சரியா?

பாஜக ஆட்சியில்தான் அதிக விமானங்கள் கட்டப்பட்டதா? பிரதமரின் கூற்று சரியா? படத்தின் காப்புரிமை Reuters

கடந்த வாரம் சிக்கிமில் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்து பேசிய இந்தியா பிரதமரின் கூற்றுகள் நாடு முழுவதும் விவாதத்தை எழுப்பியுள்ளது. அவரது கூற்றுகள் சரியானவையா?

இந்தியாவில் தற்போதுள்ள 100 விமான நிலையங்களில் 35 விமான நிலையங்கள் பாஜகவின் கடந்த நான்காண்டுகால ஆட்சியில் கட்டப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி, எதிர்கட்சிகளை தாக்கும் வகையில், "நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கடந்த 2014ஆம் வரையிலான 67 வருட காலத்தில் வெறும் 65 விமான நிலையங்களே கட்டப்பட்டன. அதாவது சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு விமான நிலையம்தான் கட்டப்பட்டது" என்று கூறினார்.

அதாவது மறைமுகமான தனது தலைமையிலான அரசாங்கம் ஒரு வருடத்திற்கு தலா 9 விமான நிலையங்களை கட்டி வருவதாக இந்த தரவுகளை மையப்படுத்தி கூறினார்.

பிரதமரின் கூற்றுகளை மெய்ப்பிக்கும் அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதாவது உள்ளதா?

இந்தியாவின் விமான போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நாட்டில் மொத்தம் 101 விமான நிலையங்கள் உள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் இணையதளத்திலும் 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 101 உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த கால தரவுகளை திரும்பி பார்க்கும்போது வேறுவிதமான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.

படத்தின் காப்புரிமை RAJIV SRIVASTAVA

2015இல் 95 விமான நிலையங்கள் இருந்த நிலையில், அதில் 31 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இல்லை.

2018இல் 101 விமான நிலையங்கள் உள்ள நிலையில், அதில் 27 விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தரவின்படி பார்க்கும்போது, கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தலா ஆறு விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன அல்லது மொத்தத்தில் 10 விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று தெரிய வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 35 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் கூறும் எண்ணைவிட இது மிகவும் குறைவாகும்.

அபார வளர்ச்சி

விமான சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமீபத்திய ஆண்டுகளாக இந்திய விமான போக்குவரத்து துறை அபார வளர்ச்சி கண்டு வருகிறது.

கடந்த ஆண்டு இந்திய அரசு உள்நாட்டு விமான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும், முக்கிய நகரங்களை இரண்டாம் நிலை நகரங்களுடன் இணைக்கும் வகையிலும் உதான் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, 2035ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்கு 150 முதல் 200 விமான நிலையங்கள் தேவைப்படும் என்று கூறினார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் விமானத் துறை படிப்படியாக தாராளமயமாக்கப்பட்டது. மேலும், விமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிதமாக அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு விமான சேவை நிறுவனங்களிடையே குறைந்த விலையில் சேவையை வழங்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

ரயில் போக்குவரத்து நேரம் பிடிப்பதாகவும், விமானம் அளவுக்கு சௌகரியமாகவும் இல்லாமல் இருந்தாலும் கூட, பெரும்பாலான இந்தியர்கள் வெகுதூர பயணங்களுக்கு இன்னமும் ரயில்களை சார்ந்துள்ளனர்.

போதுமான விமான நிலையங்கள் உள்ளதா?

அடுத்த இருபதாண்டுகளில் இந்தியாவில் விமானப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை தாண்டும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு கணித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு விமான நிலையங்களின் எண்ணிக்கையும், திறனும் அதிகரிக்கவில்லை என்று அந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையிலான "சரியான கட்டமைப்பு வசதி, சரியான இடத்தில், நேரத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

தற்போது அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை பார்க்கும்போது, வருங்காலத்தில் நாட்டின் பெரிய நகரங்களில் இரண்டாவது விமானங்களை உருவாக்கும் நிலை ஏற்படலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

"வரும் 2030 ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் இரண்டாவது விமான நிலையங்களை ஏற்படுத்துவது அவசியமாகும்" என்று கூறுகிறார் சிஏபிஏ நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனர் பினிட் சோமையா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: