வட கொரியா - தென் கொரியா எல்லை: 8 லட்சம் கண்ணி வெடிகளை நீக்கும் பணி தொடக்கம்

படத்தின் காப்புரிமை PaulFleet
Image caption கண்ணிவெடி

வட மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியா தனது அதிகபட்ச ராணுவத்தை குவித்துள்ள பன்முஞ்சோம் கிராமத்திலுள்ள கண்ணிவெடிகளை நீக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

அதுமட்டுமில்லாமல், கொரிய போரின்போது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சுரங்கங்களும் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன்னுக்கு இடையேயான கடந்த மாத சந்திப்பின்போது இருநாட்டு எல்லையில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

கூட்டு பாதுகாப்பு பகுதியில் (ஜேஎஸ்ஏ) உள்ள படைகளற்ற மண்டலத்தில் (டிஎம்ஜீ) இருநாட்டு ராணுவ வீரர்களும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அடுத்த 30 நாட்களுக்குள் அகற்றப்படும் என்று தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கண்ணிவெடிகள் முழுவதுமாக நீக்கப்பட்டவுடன், இருநாட்டு எல்லையிலுள்ள சோதனை சாவடிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அகற்றப்படும் என்றும், மேலும் இருநாட்டு எல்லைப்பகுதியில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கும் நடவடிக்கையாக ஆயுதமில்லாத படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இருநாடுகளுக்கிடையேயான ராணுவ பதற்றத்தை தளர்த்தும் வகையில்" எல்லைப்பகுதியில் ஒலிப்பெருக்கிகளின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வதை கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுத்திவிட்டதாக தென் கொரியா மேலும் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

250 கிலோ மீட்டர் நீளமும், 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட இருநாடுகளுக்கிடையேயான படைகளற்ற எல்லைப்பகுதி முள் வேலி, கண்ணிவெடி, கண்காணிப்பு கேமெரா மற்றும் மின் கம்பியால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, இருநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான படைகள் எல்லைப்பகுதியில் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் எல்லையை கடப்பது என்பது சாத்தியமில்லாதாக்குகிறது.

கடந்த நவம்பர் மாதம் தென் கொரியாவின் எல்லைப்பகுதிக்குள் நுழைந்த வட கொரிய ராணுவ வீரரொருவர் அந்நாட்டு ராணுவ வீரராலே சுடப்பட்டார்.

கடந்த ஏழாண்டுகளுக்கு முன்பு வட கொரியாவின் தலைவராக கிம் ஜாங்-உன் பதவியேற்றதிலிருந்து வடகொரியாவிலிருந்து தென் கொரியாவிற்கு தஞ்சம் புகுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Gannet77

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரியா போரிலிருந்து இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வரும் பகைமை கடந்த சில மாதங்களாக தணிந்து வருவதை காண முடிகிறது.

சென்ற மாதத்தின் தொடக்கத்தில் இருநாட்டு தலைவர்களும் பியாங்யோங்கில் சந்தித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அணுஆயுத கைவிடல் முடிவை செயல்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டில் அணுஆயுதமற்ற கொரிய பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :