எண்ணெய் கொண்டுசென்ற டேங்கர் லாரி விபத்து - 50க்கும் மேற்பட்டோர் பலி

கோப்புப் படம் படத்தின் காப்புரிமை Getty Images

காங்கோவின் மேற்குப்பகுதியில் எண்ணெய் கொண்டுசென்ற டேங்கர் லாரி காரொன்றின் மீது மோதி வெடித்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் காங்கோவின் தலைநகரான கின்ஷாசா மற்றும் துறைமுக நகரமான மட்டாடி ஆகியவற்றிற்கிடையே உள்ள கிசண்டு என்ற நகரில் நடைபெற்றுள்ளது.

இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய காங்கோ பிராந்தியத்தின் ஆளுநர் அட்டோ மாபுவானா கூறியுள்ளார்.

"தீப்பிழம்புகள் விரைவாக அருகிலுள்ள வீடுகளை நோக்கி சூழ்ந்தன" என்று ஐநாவின் வானொலி சேவையான ஒக்காபி தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு நீடித்த போருக்கு பின்னரும் காங்கோவில் சாலை வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு காங்கோவில் இதேபோன்று எண்ணெய் கொண்டுசென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்து, பிழம்புகள் அருகிலுள்ள கிராமத்திற்கு பரவியதில் 220 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் 53 உடல்கள் கருகிய நிலையில் கிடப்பதாக ஏ.எஃப்.பி செய்தி முகமைக்கு கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது.

தீப்பிழம்பினால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக அருகிலுள்ள மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

"நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தாலும், கவலையளிக்கக்கூடிய வகையில் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்" என்று ட்ரெசார் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

"விபத்தில் காயமடைந்தோரை சிகிச்சையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைளை உள்ளூர் அதிகாரிகள் எடுத்துள்ளனர்" என்று பிராந்திய ஆளுநர் மாபுவானா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விபத்து நடந்தேறிய பகுதியில் போதிய அவசர உதவி வாகனங்கள் இல்லாததே பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணமென்று லுச்சா என்னும் அமைப்பு ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவிற்கு தென்மேற்கு திசையிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் விபத்து நடந்தேறிய கிசண்டு உள்ளது.

இந்த நெடுஞ்சாலையின் மற்றொரு முனையிலுள்ள மட்டாடியில்தான் காங்கோவின் பிரதான துறைமுகம் அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: