அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - காரணம் என்ன?

  • 12 அக்டோபர் 2018
எறும்புத்தின்னி படத்தின் காப்புரிமை Alamy

வனவிலங்குகள் தொடர்பாக உலக அளவில் நடைபெற்று வருகின்ற சட்டபூர்வமற்ற வர்த்தகம், பல விலங்குகளின் அழிவுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பெறக்கூடிய லாபத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது இந்த வனவிலங்குகளை பாதுகாக்க உதவலாம்.

உணவு, செல்ல பிராணிகள், மருந்துகள் மற்றும் அணிகலன்களாக கூட இறந்த அல்லது வாழும் விலங்குகள் தொழில்துறை அளவில் விற்கப்படுகின்றன.

இத்தகைய சட்டபூர்வமற்ற வத்தகம், மனித குரங்குகள் முதல் ஹார்ம்ல்ட் ஹார்ன்பில்ஸ் (அலகின் மீது கொம்பு போன்ற வளர்ச்சி உடைய பறவை வகை), பறவையினம் வரை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.

ஆனால், எந்தவித விலங்குகளையும்விட எறும்புத்தின்னிதான் இந்த வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

வித்தியாசமான தோற்றமுடைய இந்த எறும்புத்தின்னி, அதனுடைய இறைச்சி மற்றும் செதில்களுக்காக சில நாடுகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

உலக நாடுகளில் அதிகமாக கடத்தப்படும் பாலூட்டி இந்த எறும்புத்தின்னி என நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, வியட்நாமுக்கும், சீனாவுக்கும் கடத்தப்படுகின்றன.

வழக்கமாக, யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் பாதிக்கப்படுவது மீதுதான் உலக நாடுகளின் கவனம் உள்ளது. பல நாடுகளில் இந்த விலங்குகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

எடுத்துக்காட்டாக தான்சானியாவில் 2009ம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2014ம் ஆண்டு 43 ஆயிரத்திற்கு மேல் என 60 சதவீதம் சரிந்ததாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வர்த்தகத்தின் பின்னணி தூண்டுதலாக இருப்பது இதில் கிடைக்கும் லாபமே.

தொடர் கண்காணிப்பில் பணப்பரிமாற்றம்

கடத்தப்படுகின்ற இந்த விலங்குகளுக்காக பெருந்தொகை கைமாறுகிறது.

ஊழல் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் இணையம் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இடையில் இந்தப் பண பரிமாற்றம் நடைபெறுகிறது.

சட்டபூர்வமற்ற வனவிலங்குகளின் வர்த்தகத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் இந்தப் பணப்புழக்கம் கண்டுக்கொள்ளப்படுவதில்லை.

இந்த வாரம் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்த வனவிலங்குகளின் சட்டபூர்வமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் குற்றவியல் வலையமைப்புகளை அகற்றுவதற்கு பண பரிமாற்றம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்படும்.

இவ்வாறு பண பரிமாற்றத்தை கண்காணிப்பது ஒருபுறம் இருக்க, விலங்குகளை கண்காணிக்கின்ற பாரம்பரிய அணுகுமுறையும் தொடரும். இதற்கு பெருமளவு புள்ளிவிவரங்கள் தேவை என்றாலும் விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

துல்லியமாக கணக்கிட முடியாது என்றாலும், சட்டபூர்வமற்ற வனவிலங்குகள் வர்த்தகத்தில் ஓராண்டுக்கு 700 கோடி முதல் 2,300 கோடி டாலர் வரை பரிமாறப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான பணத்தொகை தனிநபர்களுக்கு இடையில் பணமாக பரிமாறப்படுகிறது. ஆனால், பெருந்தொகை வங்கிகள் வழியாகவும் செலுத்துப்படுகின்றது.

பாதுகாக்கப்படும் உயிரினங்கள்

இவ்வாறு நடைபெறும் சட்டப்பூர்வமற்ற வர்த்தக பண பரிமாற்றங்களை தடுப்பதற்கு சமீபத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, 2017ம் ஆண்டு 1.3 டன் யானை தந்தம் பிடிப்பட்டதை தொடர்ந்து உகாண்டாவிலுள்ள 3 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

பாதுகாக்கப்படும் உயிரினங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட பொருட்களை சட்டபூர்வமற்ற முறையில் வைத்திருந்தது தொடர்பாக மட்டுமே அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படவில்லை.

லாவோஸ் மற்றும் உகாண்டாவிலுள்ள வங்கிக்கணக்குகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் டாலர் பண பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2014ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து சீனாவுக்கு வனவிலங்குகளை கூட்டாக கடத்துவது பற்றி தாய்லாந்து பண மோசடி தடுப்பு அலுவலகம் புலனாய்வு ஒன்றை நடத்தியது.

இந்த புலனாய்வின் மூலம் 3 கோடி 60 லட்சத்திற்கு அதிக மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

2014ம் ஆண்டு இந்தோனீஷியாவில் நடைபெற்ற இன்னொரு இயற்கை பாதுகாப்பு தொடர்பான விசாரணை, இந்த சட்டபூர்வமற்ற வர்த்தகத்தில் பரிமாறப்படும் பணத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிடைக்கின்ற சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன.

பண மோசடி, சட்டபூர்வமற்ற முறையில் மரங்களை வெட்டுதல், எரிபொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக ஜூனியர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு இந்தோனீஷிய உச்ச நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் வங்கிக்கணக்குகள் மூலம் 12 கோடியே 70 லட்சம் டாலர் பரிமாற்றப்பட்டதை சான்றுகள் சுட்டிக்காட்டின.

இருப்பினும், சில வழக்குகளே இவ்வாறு நடைபெற்றுள்ளன. எப்போதாவது ஒருமுறைதான் இந்த வழக்குகள் வருகின்றன.

இத்தகைய கடத்தலில்புழங்குகின்ற பணத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கு நிபுணத்துவமும், போதிய கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன. பல நாடுகளில் இத்தகைய வசதிகள் இல்லாமல் இருப்பதால்தான், இத்தகைய கண்காணிப்பு நடைபெறுவதில்லை.

நிதி தொடர்பான இத்தகைய புலனாய்வுகளில் பல்வேறுப்பட்ட தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

வனவிலங்கு நிறுவனங்கள், நிதி உளவுத்துறை அலகுகள், செத்து மீட்பு அலகுகள் போன்றவை இதில் அடங்குகின்றன. இவற்றில் சில பிரிவுகள், ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செத்துக்களை முடக்குதல், கைப்பற்றுதல், பறிமுதல்செய்தல்

அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகள் எதிர்கொள்ளும் தொடர் நெருக்கடியை பார்த்தால், நிதி உளவுத்துறை தகவல் சேகரிப்பு இந்த விலங்குகளை பாதுகாப்பதற்கான முக்கிய கருவியாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகளின் வர்த்தகத்தால் லாபம் அடைவோரை இலக்கு வைத்து கண்காணிப்பதன் மூலம், பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டிருப்பதை அகற்றிவிட முடியும்.

செத்துக்களை முடக்குதல், கைப்பற்றுதல், பறிமுதல்செய்தல் மூலம், குற்றமிழைத்து வருவாய் ஈட்டுவோரையும், வருங்காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் மீண்டும் முதலீடு செய்வதையும் நிறுத்திவிட முடியும்.

போதை மருந்து மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்பாலும், பிரிட்டன் ராயல் ஐக்கிய சேவைகள் நிறுவனத்தாலும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், நிதியை கண்காணிப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் கவனத்தில் எடுத்துகொள்ளப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

சட்டபூர்வமற்ற வனவிலங்கு வர்த்தகம் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில், இந்த விலங்குகள் அல்லது அவற்றின் உடல் பாகங்களை வைத்திருப்பதை நிரூபித்து தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அபராதங்கள் மற்றும் குறுகிய சிறை தண்டனை என குறைந்தபட்ச தண்டனைகளே வழங்கப்படுவதால், குறைவான ஆபத்துடைய குற்றங்களாக இவை ஆகிவிடுகின்றன.

தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை பயன்படுத்தி செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றிய வருடாந்திர புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த குற்றங்கள் தடுப்பு நடவடிக்கையின் "வெற்றி" அளவிடப்படுகிறது.

நிதி தொடர்பான புலனாய்வு, பணம் மற்றும் பிற சொத்துக்களை பறிமுதல் செய்வது முதன்மையாக பார்க்கப்படுகின்ற போதை மருந்து கடத்தல் போன்ற சர்வதேச குற்றங்களோடு ஒப்பிடுகையில் இது தெளிவான முரண்பாடாகும்.

லண்டனில் இந்த வாரம் நடைபெறும் கருத்தரங்கில் சட்டபூர்வமற்ற வனவிலங்கு வர்த்தகத்தை சர்வதேச அளவிலான மற்றும் ஒருங்கிணைந்து செய்யப்படும் குற்றமாக பார்ப்பது முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் எளிதாக வெற்றிபெறுவது சாத்தியமில்லை.

ஆனால், இந்த வர்த்தகத்தில் பரிமாறப்படும் லாபத்தை இலக்கு வைத்து கண்காணிப்பதில் நாம் தோல்வியடைந்து விட்டால், இதில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளை பிடிப்பதிலும் நாம் தோல்வியடையும் ஆபத்து உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: