மைக்கேல் சூறாவளி: தரைமட்டமான மெக்ஸிகோ கடற்கரை

மெக்ஸிகோ கடங்கரை பகுதிகளில் பெரும் சேதம் படத்தின் காப்புரிமை Reuters
Image caption மெக்ஸிகோ கடங்கரை பகுதிகளில் பெரும் சேதம்

புளோரிடா கடற்கரை பகுதிகளை புரட்டிப்போட்டு நினைத்து பார்க்காத பேரழிவை மைக்கேல் சூறாவளி ஏற்படுத்தியுள்ளது என்று மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

பலரின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான புளோரிடாவின் வடமேற்கு கடலோர பகுதிகளிலுள்ள வீடுகள் இடிந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் தெருக்களில் அறுந்து கிடக்கின்றன.

புதன்கிழமையன்று மணிக்கு 155 மைல் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது இது புயலாக வலுவிழந்தது. இதனால் குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர். அதில் பெரும்பாலோர் புளோரிடாவை சேர்ந்தவர்கள்.

படத்தின் காப்புரிமை Mark Wallheiser/Getty Images

புளோரிடாவிலுள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற ஆணையிடப்பட்டிருந்தனர். ஆனால், பலரும் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை என அதிகாரிகள் நம்புகின்றனர்.

இரவு நேரத்தில் கடலோர பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 10 மீட்பு நடவடிக்கைகளில் குறைந்தது 27 பேரை காப்பாற்றியுள்ளனர் என்று ஆளுநர் ஸ்காட் கூறியுள்ளார்.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்

அமெரிக்க பெருநிலப்பகுதியை இதுவரை தாக்கிய வலுவான புயல்களில் ஒன்றான மைக்கேல் சூறாவளி, மெக்ஸிகோ கடற்கரைக்கு அருகிலுள்ள புளோரிடாவின் பான்கேன்டில் கடற்கரையை புதன்கிழமை புரட்டிப்போட்டுவிட்டது.

4ம் நிலை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்ட மைக்கேல் சூறாவளி, வீடுகளை அவற்றின் அடித்தளங்களோடு பெயர்த்துள்ளது. மெக்ஸிகோ கடற்கரைக்கு மிகவும் அருகிலுள்ள மாவட்டங்களில் பேரழிவுகளை இது ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Images

இந்த நகரில் இரவு முழுவதும் 20 பேர் மீட்கப்பட்டனர் என்று ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், அப்பகுதியை விட்டு வெளியேறும் எச்சரிக்கைக்கு கீழ்படிய 285 பேர் மறுத்துவிட்டனர்.

இந்த சூறாவளியின் சேதங்களை பார்த்து, 'தரைமட்டமாக்கப்பட்ட மெக்ஸிகோ கடற்கரை' என்று பெடரல் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் புரோக் லாங் தெரிவித்துள்ளார்.

2, 300 பேர் வசிக்கின்ற அப்பலாசிக்கோலாவும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த நகரத்தை தொடர்பு கொள்வது கடினமாகியுள்ளதாக மேயர் கூறியுள்ளார்.

இடிபாடுகளும், வெள்ளப்பெருக்கும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளை சென்றடைய முடியாமல் செய்துள்ளன.

மின் இணைப்புகள் மற்றும் பிற இடிபாடுகளால் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் அனைத்திலும் இருந்து பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதை அதிகாகரிகள் உறுதி செய்வது வரை மக்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆளுநர் ஸ்காட் வலியுறுத்தியுள்ளார்.

மெக்ஸிகோ கடலோரத்தில் தற்போதைய நிலைமை

படத்தின் காப்புரிமை Mark Wallheiser/Getty Images

மெக்ஸிகோ கடலோரத்தில் இப்போது நடந்து செல்லும்போது மயான அமைதி காணப்படுகிறது.

காற்று இல்லை. தெருவில் யாரும் நடமாடவில்லை. எல்லா இடங்களிலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. பஞ்சு மெத்தைகள் சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கின்றன.

எல்லா திசைகளிலும் இருந்து மெல்லிய அழுகை ஒலி கேட்டு கொண்டிருக்கிறது.

இடிபாடுகளின் மத்தியில் நடந்து சென்றால் அவ்விடங்கள் வீடுகளால் நிறைந்திருந்த இடங்களாக தென்படுகின்றன.

மைக்கேல் சூறாவளியின் அதிவேகம் நன்றாகவே ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும், மக்களின் அன்றாட தேவைக்குரிய பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்டுள்ளன. துண்டு துண்டாகியுள்ளன.

பாதிக்கப்பட்டோர்

படத்தின் காப்புரிமை Getty Images

கிளாஸ்டன் வட்டத்தில் மரம் விழுந்து ஒருவர் நசுங்கிவிட்டதாக புளோரிடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜியாவிலுள்ள சிமினோலியில் கார் நிறுத்துமிட கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டு வீட்டின் மீது விழுந்து 11 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.

மைக்கேல் சூறாவளி மத்திய அமெரிக்காவில் கரைகடந்தபோது குறைந்தது 13 பேர் பலியானதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 6000 பேர், பெரும்பாலும் புளோரிடாவை சேர்ந்தவர்கள் அரசு அமைத்துள்ள புகலிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த சூறாவளியின் தற்போதைய நிலை என்ன?

மைக்கேல் சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 50 மைல் என தற்போது குறைந்துள்ளதாக தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

ஜார்ஜியாவின் வடகிழக்கை கடந்து சென்றுள்ள மைக்கேல் சூறாவளி, இப்போது வட கரோலினாவிலும், வெர்ஜீனியாவிலும் கனமழை பொழிய காரணமாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Images

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதால், மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து உள்நாட்டு பகுதிகளுக்கு சென்றுவிட வேண்டும் என்று வடமேற்கு புளோரிடா மற்றும் வட கரோலினாவில் வாழும் மக்களுக்கு தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபிளாரன்ஸ் சூறாவளியின் பாதிப்புகளில் இருந்து கரோலினா இப்போதுதான் மீண்டு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினாவின் ஆகிய மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

விர்ஜீனியாவின் வடக்கில் 2 லட்சத்து 2000 பேர் மின் இணைப்பு இல்லாமல் அவதிப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மைக்கேல் சூறாவளி: அமெரிக்காவை தாக்கிய 3வது மோசமான சூறாவளியின் கோரதாண்டவம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மைக்கேல் சூறாவளி: அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது மோசமானது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்