"சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன தாக்குதலே முக்கிய காரணம்"

கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

"சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு இரசாயன தாக்குதலே முக்கிய காரணம்" படத்தின் காப்புரிமை EPA

சிரியாவில் ஏழாண்டுகளாக நடந்து வரும் அரசு எதிர்ப்பு படைகளுக்கெதிரான தாக்குதலில் இதுவரை 3,50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இப்போரில் அந்நாட்டின் அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

பலம் பொருந்திய அரசு எதிர்ப்பு படைகளை அல்-அசாத் எப்படி சமாளித்தார்? என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், பிபிசி பனோரமாவும், பிபிசி அரபிக் சேவையும் சேர்ந்து நடத்திய கூட்டு புலனாய்வில், அசாத்தின் வெற்றிக்கு பின்னால் ரசாயன ஆயுதங்கள் பெரும் பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2014-2018ஆம் ஆண்டுகாலத்தில் 106 இரசாயன தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அதிகபட்சமாக 2014ஆம் ஆண்டு 30 ரசாயன தாக்குதல்களை சிரியா அரசு படைகள் நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான தாக்குதல்கள் அரசு எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹமாஸ், இட்லிப், அலெப்போ, கூட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளதாகவும் பிபிசியின் இந்த புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏங்கெலா மெர்கலுக்கு பின்னடைவு

படத்தின் காப்புரிமை EPA

ஜெர்மனியின் பவரியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கூட்டணி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பவாரியா மாநில சட்டமன்றத்தில் சிஎஸ்யு எனப்படும் கிறிஸ்டின் சோசியல் யூனியன் தனது பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏஎஃப்டி எனப்படும் அல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி முதல் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்துள்ளது.

மக்கள் மீது மோதிய விமானம்: மூவர் பலி

படத்தின் காப்புரிமை EPA

மத்திய ஜெர்மனியில் ஒரு விமானம் நொறுங்கி விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஜெர்மனியில் உள்ள ஹெஸ் மாநிலத்தில், ஒற்றை எஞ்சின் கொண்ட செஸ்னா விமானம் , விமானத்தளம் அருகே குழுமியிருந்த மக்கள் மீது மோதியது.

தரையில் இருந்து மேலேறிய இந்த விமானம் மேலும் உயரம் எழும்ப முடியாத சூழலில், தரையிறங்க முயற்சித்த போது விமானநிலைய தடுப்புச் சுவர் மீது மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த போலீசார், விமானத்தில் பயணம் செய்த நால்வரும் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: