உய்கர் முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு - சீனாவின் கருத்தியல் கல்வி முகாம்களை புகழும் சின்ஜியாங் உயரதிகாரி

சின்ஜியாங் முஸ்லிம்கள் படத்தின் காப்புரிமை Getty Images

கருத்தியல் கல்வி முகாம்களை சட்டமாக்கி உய்கர் முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை பற்றி இதுவரை வழங்கப்படாத தகவல்களை வழங்கி, அதனை புகழ்ந்துள்ளார் சீனாவின் சின்ஜியாங் தன்னாட்சி பிரதேசத்தின் உயரதிகாரி ஷோக்ராட் ஜகீர்.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இந்த தொழிற்பயிற்சி முகாம்கள் அதிகமாக பங்காற்றுகின்றன என்று அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களின் வாழ்க்கைப்பாதையை மாற்றி, சிறந்ததாக உருவாக்கி கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு பயிற்சி பெற்றவர்கள் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிரதேசத்தில் சீனா நடத்தி வருகின்ற பெரிய பாதுகாப்பு நடவடிக்கை பரந்த அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தது.

டிஎன்ஏ மாதிரிகளை வழங்க மறுத்தல், சிறுபான்மையினர் மொழியில் பேசுதல் அல்லது அதிகாரிகளோடு வாதிடுதல் போன்றவற்றுக்கு குற்றச்சாட்டு ஏதுமின்றி காலவரம்பின்றி முஸ்லிம்கள் கைதுசெய்யப்படுவதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

10 லட்சம் வரையிலான முஸ்லிம்களும், பிற சிறுபான்மை குழுக்களும் கைது செய்யப்பட்டிருப்பதை மறுத்துள்ள அதிகாரிகள், தீவிரவாதத்தை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

சீனாவின் மேற்கில் அமைந்துள்ள சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிரதேச அரசின் தலைவராக, இந்த பாதுகாப்பு நடவடிக்கை பற்றி தகவல் கூறியுள்ள மிகவும் மூத்த சின்ஜியாங் பிரதேச அதிகாரி ஷோக்ராட் ஜகீர் ஆவார்.

சீன அரசு நடத்துகின்ற சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஷோக்ராட் ஜகீரின் விரிவான பேட்டி, இந்த நடவடிக்கை மூலம் கிடைக்கின்ற நன்மைகளை விவரிப்பது, அதிகரித்து வருகின்ற விமர்சனங்களை தடுப்பதற்கான சீனாவின் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

1990ம் ஆண்டுகளில் இருந்து இந்த பகுதி தீவிரவாதம், கடும்போக்குவாதம், பிரிவினைவாதம் ஆகிய மூன்று தீய சக்திகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்த ஷோக்ராட் ஜகீர், இவற்றின் ஆணிவேர்களை சமாளிப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

சீனாவின் சட்டத்தில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள கருத்தியல் கல்வி மற்றும் பயிற்சி திட்டம், இந்த பயிற்சியை பெறுவோர் அவர்களின் தவறுகளை எண்ணிப்பார்த்து, தீவிரவாதம் மற்றும் மத கடும்போக்குவாதத்தின் சாராம்சத்தையும், பாதிப்புக்களையும் தெளிவாக புரிந்து கொள்ள செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை SOPA Images

இந்த முகாமில் என்ன நடைபெறுகிறது என்று வழங்கிய விரிவான தகவல்களில், சீன வரலாறு, மொழி, கலாசாரம் பற்றிய வகுப்புகளும், நாடு, குடியுரிமை மற்றும் சட்டப்படியான ஆட்சி பற்றிய விழிப்புணர்வு வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பயிற்சியில் பங்கேற்க அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா என்று அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் அந்த இடத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கு ஊட்டசத்து மிக்க இலவச உணவு வழங்கப்படுவதாகவும், தங்கியிருக்கும் இடம் எல்லா வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கான போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பேட்டியின்போது, அங்காங்கே, தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அரசு வாய்ப்பு வழங்கியதாக 'பட்டதாரிகளால்' அரசை புகழ்ந்து சொல்லப்பட்ட மேற்கோள்கள் ஒளிப்பரப்பாயின.

"அரசு என்னை கைவிடவில்லை. இலவச உணவு வழங்கி, தங்க இடம் கொடுத்து, கருத்தியல்களை போதனை செய்து என்னை காப்பாற்றியுள்ளது, உதவியுள்ளது" என்று தெரிவித்த ஒருவர், "இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டுக்கும், சமூகத்திற்கும் பயனுள்ள நபரான உருவாகுவேன்" என்று கூறியுள்ளார்.

இன்னொருவர், "இந்த பயிற்சி பெற்ற பின்னர் எனது வருவாய் அதிகரித்துள்ளது. எனது குடும்பத்திற்கு நான் முக்கிய ஆதரவாக மாறியுள்ளேன். மூத்தோரிடம் இருந்து பாராட்டை பெற தொடங்குவேன்.

பிறர் நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மையுடையவராக எனது மனைவி மாறியுள்ளார். என்னை பற்றி எனது குழற்தைகள் பெருமையாக எண்ணுகின்றனர். மதிப்பையும், நம்பிக்கையும் நான் திரும்ப பெற்றுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

எத்தனை பேர் இந்த பயிற்சியை பெற்று வருவதாக ஷோக்ராட் ஜகீர் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த பயிற்சியை நிறைவு செய்தோரிடம் சீன தேசிய மனப்பான்மை மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிரதேசம் இப்போது பாதுகாப்பாகவும், ஸ்திரமானதாகவும் ஆகியுள்ளதாக அவர் கூறினார்.

கடும்போக்குவாத கருத்துக்களால் தாங்கள் முன்னர் பாதிக்கப்பட்டதாகவும், இது போன்ற கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முன்னர் பங்கேற்றது இல்லை என்றும் பல பயிற்சியாளர்கள் தெரிவித்தாக அவர் கூறியுள்ளார்.

10 லட்சம் முஸ்லிம்களை சிறையில் அடைத்து சீனா சித்ரவதை?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
10 லட்சம் முஸ்லிம்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் சீனா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: