கசோஜி கொலையை காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள்: துருக்கியை கேட்கும் அமெரிக்கா

அமைச்சரவைக் கூட்டத்தை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப். படத்தின் காப்புரிமை Getty Images

துருக்கியில் உள்ள சௌதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள் என்று துருக்கியைக் கேட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது டிரம்ப் இதைத் தெரிவித்தார்.

அக்டோரபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்குள் சென்றதில் இருந்து கசோஜியைக் காணவில்லை. தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்றும், வந்த வேலை முடிந்து அவர் திரும்பிவிட்டார் என்றும் கூறுகிறது சௌதி அரேபியா.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கசோஜி சம்பவத்தின் பின்னணியில் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ.

இதனிடையே காணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு நாடுகளில் சுதந்திரமான ஊடகத்துக்கான தேவை குறித்து அந்தப் பத்தியில் கசோஜி வலியுறுத்தியுள்ளார்.

கசோஜி பாதுகாப்பாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில், இந்த பத்தியை வெளியிடாமல் தாமதம் செய்ததாக அந்த நாளிதழின் உலக கருத்துப் பிரிவு ஆசிரியர் கரேன் ஆட்டியா தெரிவித்துள்ளார்.

"தற்போது அது நடக்கப்போவதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். நான் கடைசியாக எடிட் செய்யும் அவரது கட்டுரை இது" என்று கூறிய அவர், "அரபு உலகத்தில் சுதந்திரம் நிலவவேண்டும் என்பதற்கு அவர் காட்டிய அக்கறையையம், ஆர்வத்தையும் இந்த பத்திக் கட்டுரை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இந்த சுதந்திரத்துக்காகவே அவர் தமது உயிரைக் கொடுத்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார்.

இரும்புத் திரை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜமால் கசோஜி.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அந்த கடைசி பத்தியில் "அரபு உலகம் தம்முடைய சொந்த இரும்புத்திரை சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த இரும்புத்திரை வெளிநாட்டு சக்திகளால் உண்டானதல்ல.

அதிகார தாகத்தில் உள்நாட்டு சக்திகளே உருவாக்கியது. அரபு உலகத்துக்கு நவீனமான பன்னாட்டு ஊடகம் வேண்டும். இதன் மூலமே உலக நடப்புகளை குடிமக்கள் தெரிந்துகொள்ள முடியும். மிக முக்கியமாக, அரபு குரல்கள் ஒலிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்கவேண்டும்" என்று கசோஜி எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துணைத் தூதரக கட்டடத்தினுள் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தமது சக சௌதி எழுத்தாளர் சலே அல்-சலே தற்போதைய சௌதி அரசாங்கத்தின் கருத்துக்கு மாறான கருத்தை எழுதியதற்காக தேவையில்லாமல் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட கசோஜி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் காக்கும் மௌனம் விரைவில் கண்டனமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :