”கஷோக்ஜி கொலை விசாரணையில் டிரம்ப் நேர்மையாக இல்லை”
கடந்தசில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், EPA
”கஷோக்ஜி கொலை விசாரணையில் டிரம்ப் நேர்மையாக இல்லை”
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையை விசாரிப்பதில் அதிபர் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, வெள்ளை மாளிகைக்கு வர அமெரிக்க அதிபர் தனக்கு விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார் ஜமால் கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ்.
டிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல கருத்தை தோற்றுவிப்பதற்கு என எண்ணுவதாக ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறியுள்ளார்.
ஜமால் கஷோக்ஜி 3 வாரங்களுக்கு முன்னர் துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சௌதி துணை தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டார் .
பட மூலாதாரம், GETTY IMAGES / AFP
சௌதி அரேபியாவை ஆளுகின்ற அரசக் குடும்பத்திற்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ள அந்நாடு, கூலிப்படை இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கிறது.
இந்த பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை சௌதி அரேபியா தொடக்கத்தில் மறுத்தது. ஆனால், அந்நாட்டின் அரசு வழக்குரைஞர் இதுவொரு திட்டமிடப்பட்ட கொலை என்று இப்போது கூறியுள்ளார்.
சீனாவில் கத்திக்குத்து தாக்குதலில் 14 குழந்தைகள் காயம்
பட மூலாதாரம், Reuters
சீனாவின் தென்மேற்கிலுள்ள சொங்சிங் மாகாணத்தில் மழலையர் பள்ளி (கின்டர்கார்டன்) ஒன்றில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 14 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் இருந்தபோது, சமையலுக்கு பயன்படுத்தப்படும் கத்தியோடு நுழைந்த 39 வயது பொண்ணொருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஆனால், இந்த பெண்ணுக்கு அரசுக்கு எதிராக பிரச்சனை ஒன்று இருந்ததாக சமூக ஊடக தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
லியு என்ற குடும்ப பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பெண், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இரானில் இருந்து அதிக போலி ஃபேஸ்புக் கணக்குகள்
இரானோடு தொடர்புடைய பல ஃபேஸ்புக் கணக்குகளையும், குழுக்களையும் கண்டறிந்து, அவற்றை நீக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
அமெரிக்கா மற்றும் பிரிட்னிலுள்ள மக்களை இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த போலி ஃபேஸ்புக் கணக்குகளை "நேர்மையற்ற நடத்தை" என்று இந்த நிறுவனம் விவரித்துள்ளது.
இன உறவுகள், அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிர்ப்பு மற்றும் குடியேற்றம் பற்றி பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய தலைப்புக்களில் இந்த போலி ஃபேஸ்புக் கணக்குகளில் பதிவுகள் இடப்பட்டிருந்தன.
ஒரு வாரத்திற்கு முன்னால் இந்த போலிக் கணக்குகளை கண்டறிந்ததாக இந்த சமூக ஊடகம் கூறியுள்ளது.
இதற்கு யார் காரணம் என்று உறுதியாக கூற முடியவில்லை என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
தெய்வநிந்தனை சட்டங்களை நீக்க ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களிப்பு
பட மூலாதாரம், Getty Images
நாட்டின் அரசியல் சாசனத்தில் இருந்து தெய்வநிந்தனை சட்டங்களை நீக்க ஆதரவு தெரிவித்து அயர்லாந்து குடியரசின் மக்கள் வாக்களித்துள்ளதாக, இந்த வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்து அரசியல் சாசனத்தில் தெய்வநிந்தனை குறிப்பை நீக்கிவிடுவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டவர்களில் 71 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
அயர்லாந்து அதிபராக யார் வருவார் என்று தெரிவிக்கவும் வாக்குகளை பதிவு செய்தோரிடம் கேட்கப்பட்டுள்ளது.
மைக்கேல் டி ஹிக்கின்ஸ் மறுபடியும் தேர்வு செய்யபடுவார் என்பதை தங்களது முதல் தெரிவாக 58 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது பதவிக்காலத்திற்காக கடும் போட்டியை சந்திக்கிற அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் ஆவார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்