அமெரிக்கா: யூதர்களை சுட்டுக்கொன்றது ஏன், 'இனவெறி’ காரணமா?

பாதுகாப்பு
படக்குறிப்பு,

தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு மையத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பலரைக் கொன்றுள்ள கொடுமையான நிகழ்வு என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியான 46 வயதாகும் ராபர்ட் போவர்ஸ் போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவரும் காயமடைந்துள்ளதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிட்ஸ்பர்க் காவல்துறையைச் சேர்ந்த பொது பாதுகாப்பு இயக்குநர் வெண்டல் ஹிஸ்ரிச் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஒரு இனவெறித் தாக்குதலாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தாக்குதல் நடந்தது எப்படி?

சனிக்கிழமை காலை, யூதர்கள் அதிகம் வசிக்கும் ஸ்குரில் ஹில் பகுதியில் அமைந்துள்ள அந்த யூத வழிபாட்டு மையத்தில் குழந்தை ஒன்றுக்கு பெயர் சூட்டும் 'சாதத்' எனும் நிகழ்வுக்கு பலரும் கூடியிருந்தனர்.

அப்போது வெள்ளை இனத்தைச் சேர்ந்த ராபர்ட் இரு கைதுப்பாக்கிகள் மற்றும் ஒரு கனரக துப்பாக்கி ஆகியவற்றுடன் அங்கு நுழைந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியபோது அவர், ''எல்லா யூதர்களும் சாக வேண்டும்'' என்று முழக்கமிட்டதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் நடந்தபின் காவல் அதிகாரிகள் வந்தபோது ராபர்ட் ஒரு அறைக்குள் சென்று ஒளிந்துகொண்டுள்ளார்.

படக்குறிப்பு,

ராபர்ட் போவர்ஸ்

"அவருடனான மோதலின் தொடக்கத்தில் இரு காவல் அதிகாரிகள் காயமடைந்தனர். பின்னர் 'ஸ்வாட்' எனப்படும் சிறப்புப்படையின் இரு அதிகாரிகளும் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் யாரும் காயமடையவில்லை," என்று வெண்டல் ஹிஸ்ரிச் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் ராபர்ட் போவர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள கணக்கில் யூதர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது துப்பாக்கி குண்டுகளால் உண்டான காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் ராபர்ட், இந்தத் தாக்குதலுக்கு முன்னரே காவல் துறையினரால் அறியப்பட்டவரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று எப்.பி.ஐ அதிகாரி பாப் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

நடக்கும் சம்பவங்களை தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக டிரம்ப் ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: