கஷோக்ஜி விவகாரம்: மத்திய கிழக்கு அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எனென்ன?

  • ஜொனாதன் மார்கஸ்
  • பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர செய்தியாளர்
கஷோக்ஜி விவகாரம்

பட மூலாதாரம், Reuters

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது சௌதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவை சிக்கலாக்கியுள்ளது.

சௌதி அரசுடன் அரசியல் மற்றும் தொழில் ரீதியாக நெருக்கமாக உள்ள மேற்கத்திய அரசாங்கங்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்த பிரச்சனை ஒரு தலைவலி ஆகியுள்ளது..

அமெரிக்க - சௌதி உறவுகளை அடிப்படையாக மறுபரிசீலனை செய்வதற்கு சௌதி வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிகார மையத்தின் மூத்த நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கஷோக்ஜி கொலை குறித்து, அவர் எந்த சூழலில் கொலை செய்யப்பட்டார், அவரது உடல் எங்கே, முக்கியமாக இந்த கொலையை செய்ய உத்தரவிட்டது யார் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் வரவேண்டி உள்ளது.

கஷோக்ஜியை கொலை செய்ய வேண்டும் என்ற உத்தரவு சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மானிடம் இருந்தே வந்துள்ளதாக இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

சல்மான்தான் சௌதி ராஜ்ஜியத்தின் பல்வேறு அதிகாரங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இந்த கொலை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பலரும், அவருக்கு கீழ் வேலை செய்பவர்களே. இளவரசர் சல்மான் உத்தரவு இல்லாமல் இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற வாய்ப்பே இல்லை என சௌதி வல்லுநர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மான்

ஆனால், சல்மானின் நேரடி தலையீடு குறித்து எந்த அளவிற்கு ஆதாரம் உள்ளது என்பதை பொறுத்தே மற்ற விஷயங்கள் இருக்கும்.

துருக்கியிடம் வேறு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிடம் அவர் வெளியிடுவதை விட அதிக ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அதன் உறுதித்தன்மை குறித்து தெரியவில்லை.

இதில் சட்டப்படியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வரும் எர்துவான், இந்த விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்து, இளவரசர் சல்மான் மீதும் தீவிரமான கவனத்தை வைத்துள்ளார்.

சுன்னி இஸ்லாம் நாடுகளான துருக்கி மற்றும் சௌதி அரேபியா, மத்திய கிழக்கில் பரவலான ஆளுமை வகிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றன.

சௌதி இளவரசர் சல்மானுக்கு சிரமங்களை அதிகரிக்க செய்ய தன்னால் முடிந்ததை செய்ய அதிபர் எர்துவான் திட்டமிட்டுள்ளார்.

இது தன் சொந்த நாட்டின் செல்வாக்கை உயர்த்திக்காண்பிக்க எர்துவானுக்கு உதவுவதோடு, அமெரிக்காவுடனான மேம்பட்ட உறவுகளுக்கும் வழிவகை செய்யும்.

சரியான அழுத்தத்தை கொடுத்து, ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிட்டால், சௌதி முதலீடு மற்றும் அந்நாட்டுக்கு வழங்கப்படும் பொருளாதார உதவிகளின் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதியை, துருக்கியின் பலவீனமான பொருளாதாரத்திற்கு பெற்றுக் கொள்ள உதவும்.

ஆனால், அமெரிக்காவுக்கு இதில் வேறு விதமான பிரச்சனை இருக்கிறது. அது ஆயுதங்கள் விற்பனையையும் தாண்டியது.

அது பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்வது மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தில் இருக்கும் கூட்டு நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் சௌதிக்கும் இடையேயான நீண்டகால கட்டமைப்பு உறவுகளை சார்ந்தது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இருக்கும் முக்கிய காரணி எண்ணெய். சௌதி எண்ணெய் வளத்தை பெரிய அளவில் அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை.

அமெரிக்கா - சௌதி உறவில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சல்மான் இளவரசராக ஆன பின்னர் ஒரு வகையில் ஆசிர்வதிக்கப்பட்டதாக இருந்தது. அவர் கொண்டுவந்த உள்நாட்டு சீர்திருத்த சட்டம், அவரது கொள்கைகளின் மற்ற பாதகமான விஷயங்களை மறைத்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜமால் கஷோக்ஜி

ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கத்தாரை தனிமைப்படுத்த முயற்சி செய்தது; லெபனானின் பிரதமரை தற்காலிகமாக கடத்தி வைத்தது; மனித உரிமைகள் தொடர்பாக கனடாவுடனான தேவையற்ற மோதல்; முக்கியமாக ஏமனில் சௌதி தலைமையிலான தாக்குதல்களை கட்டவிழ்தது என பல விஷயங்களுக்கு இளவரசர் சல்மானே பொறுப்பு.

இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பார்வையில், ஸ்திரத்தன்மைக்கு எதிரான கொள்கைகளையே சௌதி கடைபிடிக்கிறது.

டிரம்ப் நிர்வாகம் தன் அனைத்து கொள்கைகளையும் இளவரசர் சல்மான் முன் வைத்திருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

தன் மூன்று முக்கிய கொள்கை இலக்குகளை செய்துமுடிக்க சல்மானின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது.

முதலாவதாக, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உதவுவது. இரண்டாவது, இஸ்ரேல் - பாலத்தீன பிரச்சனைக்கு தீர்வு காண டிரம்ப் அமைதி திட்டத்தை செயல்படுத்தவது. இறுதியாக முக்கியமாக, இரானை தனிமைப்படுத்த டிரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு சௌதி ஒரு முக்கிய கூட்டணியாகும்.

ஆகையினால், இந்த கஷோக்ஜி கொலை விவகாரம் விரைவில் முடிய வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் நினைக்கிறது.

இந்நிலையில், கஷோக்ஜி விவகாரத்தில் சௌதியை நம்புவதாக ரஷ்யா சமிக்ஞை செய்துள்ளது.

எதிர்காலத்தில் ஆயுதங்கள் விற்பனையை ரஷ்யா எதிர் நோக்குகிறது. அப்பிராந்தியத்தில் தனது சொந்த நாட்டின் நலன்களை வளர்க்க அதிபர் புதின் ஆர்வமாக உள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை என்பது இரு முனை கூர்வாளாகும். நீண்டகாலம் சௌதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி வைக்க முடியாது. அதே நேரத்தில் ரஷ்யா மற்றும் சீனாவிடம் ஆயுதங்கள் வாங்குவதற்காக சௌதியும் உடனடியாக மாற முடியாது.

பலரின் கற்பனையைவிட மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு அதிகமாகவே உள்ளது.

ஆனால், இதில் முக்கிய கேள்வி என்னவென்றால் அவர்கள் குறிப்பாக டிரம்ப் நிர்வாகம் தங்கள் பயன்படுத்த விரும்புகிறார்களா என்பதுதான்.

அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் இந்த விஷயத்தில் தங்களிடையே முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளன. இது மேலும் குழப்பத்தையே உண்டாக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: