சீனாவில் காணாமல் போகும் பல்லாயிரம் உய்கர் முஸ்லிம்களுக்கு என்ன நேர்கிறது?

  • ஜான் சுட்வர்த்
  • பிபிசி
உய்கர்

பட மூலாதாரம், CHINA PHOTOS/GETTY IMAGES

மேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில், விசாரணையின்றி லட்சக் கணக்காண முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

``பயங்கரவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்தை'' ஒடுக்கும் சிறப்பு ``தொழிற்பயிற்சிப் பள்ளிகளுக்கு'' மக்கள் தாங்களாக விரும்பி செல்கிறார்கள் என்று கூறி அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கிறது.

இப்போது பிபிசி புலனாய்வுக் குழு, உண்மை நிலவரம் குறித்து முக்கியமான புதிய ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளது.

2015 ஜூலை 12 ஆம் தேதி ஒரு செயற்கைக்கோள் சீனாவின் பரந்து விரிந்த மேற்குப் பகுதியில் தொலைதூரத்தில் பாலைவனம் மற்றும் பாலைவனச் சோலை நகரங்களின் மீது சுற்றியது.

அன்றைய நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஒரு புகைப்படம் காலியான, நடமாட்டம் இல்லாத, சாம்பல் நிற மணல் பரப்பு இருப்பதைக் காட்டுகிறது.

நாம் வாழும் காலத்தின் மனித உரிமைப் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமானதாக உள்ள ஒரு விஷயம் குறித்து புலனாய்வு தொடங்குவதற்கு உகந்ததாக இல்லாத இடத்தைப் போல அது தெரிகிறது.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 2018 ஏப்ரல் 22 ஆம் தேதி, பாலைவனத்தின் அதே பகுதியைக் காட்டும் செயற்கைக்கோள் படம் ஒன்றில், புதிய காட்சிகள் இருந்தன.

பெரிய, அதிக பாதுகாப்பான ஒரு வளாகம் உருவாக்கப்பட்டிருந்தது.

2 கிலோ மீட்டர் நீளத்துக்கு வெளிப்புற சுவர் கட்டப்பட்டு, 16 காவலர் கோபுரங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

ஜின்ஜியாங் பகுதியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்புடன் கூடிய ஒரு முகாமை சீனா நடத்தி வருவது குறித்த முதலாவது தகவல் கடந்த ஆண்டு வெளியாகத் தொடங்கியது.

அந்த முகாம் குறித்த ஆதாரங்களைத் தேடி வந்த ஆராய்ச்சியாளர்களால் கூகுள் எர்த்தின் குளோபல் மேப்பிங் சிஸ்டம் மூலம் இந்த செயற்கைக்கோள் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.

டபன்செங் என்ற சிறிய நகரத்துக்கு சற்று தள்ளி இந்த இடம் அமைந்திருப்பதாக அது காட்டுகிறது. உரும்க்கி மாகாணத்தின் தலைநகரில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இந்த இடம் இருக்கிறது.

பயணம் செல்லும் பத்திரிகையாளர்களை தீவிரமாகக் கண்காணிக்கும் காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக, நாங்கள் உரும்க்கி விமான நிலையத்துக்கு அதிகாலை நேரத்தில் சென்று சேர்ந்தோம்.

ஆனால் நாங்கள் டபன்செங் சென்று சேருவதற்குள் எங்களை குறைந்தது ஐந்து கார்கள் பின்தொடர்ந்தன. சீருடையில் இருந்த மற்றும் சாதாரண உடைகளில் இருந்த காவல் துறை அதிகாரிகளும், அரசாங்க அதிகாரிகளும் அவற்றில் இருந்தனர்.

அடுத்த சில நாட்களில், முகாம்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு டஜன் இடங்களைப் பார்வையிடுவது என்ற எங்களுடைய திட்டம் அவ்வளவு எளிதாக இருக்காது என்பது ஏற்கெனவே எங்களுக்குத் தெளிவாகிவிட்டது.

அகலமான அணுகுசாலையில் நாங்கள் பயணித்த போது, எங்களுக்குப் பின்னால் வந்த கார்கள் எந்த நேரத்திலும் முன்னால் வந்து எங்களை நிறுத்த முயற்சிக்கலாம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது.

இன்னும் சில நூறு மீட்டர்கள் இருந்த நிலையில், எதிர்பாராத ஒரு விஷயத்தை நாங்கள் கண்டோம்.

செயற்கைக்கோள் படத்தில் காலியாக தெரிந்த பகுதிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மணற்பாங்கான பெரும் நிலப்பரப்பு காலியாக இல்லை.

அந்த இடத்தில் பெரிய, விரிவாக்கத் திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.

சாலையில் இருந்து பார்க்கும் போது டபன்செங் தளம், பாலைவனத்தில் ஒரு குட்டி நகரம் முளைத்து வருவதைப் போல, கிரேன்கள் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்க, இப்போது வரிசையான பெரிய, சாம்பல் நிற கட்டடங்களாக இருந்தன - அனைத்துமே நான்கு மாடி உயரம் கொண்டவை.

எங்கள் காமிராக்கள் ஓடிக் கொண்டிருக்க, கட்டுமானப் பணியின் விஸ்தீரணத்தைப் படம் பிடிக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் அதிக நேரம் படம் பிடிப்பதற்குள், காவல் துறையின் ஒரு வாகனம் செயல்பாட்டில் இறங்கியது. எங்கள் கார் நிறுத்தப்பட்டது - காமிரா இயக்கத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப் பட்டோம்.

ஆனால் குறிப்பிடத்தக்க ஒரு விஷயத்தை நாங்கள் கண்டறிந்தோம் - இதுவரையில் வெளி உலகில் கவனிக்கப்படாத வகையில், பிரமாண்டமான அளவில் இயல்புக்கு மீறிய ஒரு செயல்பாடு நடந்து கொண்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

உலகில் தொலைதூரத்தில் உள்ள இடங்கள் குறித்த தகவல்களை அப்டேட் செய்ய Google Earth பல மாதங்களை எடுத்துக் கொள்ளும்.

ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் சென்டினல் டேட்டாபேஸ் - போன்ற செயற்கைக்கோள் புகைப்பட தகவல் வசதிகள், இன்னும் நிறைய, குறுகிய கால இடைவெளியிலான படங்களைத் தந்தாலும், அவற்றின் தெளிவுத் திறன் மிகவும் குறைவாகவே இருக்கும்.

நாங்கள் தேடி வந்ததை இங்கேதான் நாங்கள் கண்டோம்.

அக்டோபர் 2018-ல் வெளியான சென்டினல் படம் ஒன்று, நாங்கள் எதிர்பார்த்ததைவிட எந்த அளவுக்கு வேகமாக அந்த இடத்தில் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது.

பாதுகாப்புடன் கூடிய காவல் பயிற்சிக்கான பெரிய முகாம் இருக்கும் என நாங்கள் சந்தேகப்பட்ட இடம், இப்போது பிரமாண்டமானதாகக் காட்சியளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஜிங்ஜியாங் முழுக்க உருவாக்கப்பட்ட, இதைப் போன்ற சிறை போன்ற பெரிய கட்டுமானத் திட்டங்கள் பலவற்றில் ஒன்று தான் இது.

அந்த இடத்தைப் பார்வையிடுவதற்கு நாங்கள் முயற்சி செய்வதற்கு முன், டபன்செங் மையத்தில் நாங்கள் நின்றோம்.

வெளிப்படையாக யாருடனும் பேசுவது சாத்தியமற்றதாக இருந்தது - கண்காணிப்பு பணியில் இருந்தவர்கள் தொடர்ந்து நெருக்கமாக கவனித்துக் கொண்டிருந்தனர். எங்களுடன் பேசியவர்களை அவர்கள் ஒதுங்கிச் செல்ல வைத்தனர்.

[`மறு கல்வி கற்பிக்கும் பள்ளியில்] பத்தாயிரக்கணக்கானோர் உள்ளனர். கண்காணிப்பில் ஈடுபடுவோர் அச்சுறுத்தும் வகையில் நெருங்கி வந்தனர். எங்களுக்கு வணக்கம் சொன்னவர்களைக்கூட அவர்கள் விரட்டி தூர அனுப்பினர்.

எனவே, குருட்டாம்போக்கில், எழுமானமாக நகர வாசிகள் சிலரது தொலைபேசி எண்களைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டோம்.

நாங்கள் படம் எடுக்க முடியாமல் தடுப்பதில் அதிகாரிகள் அவ்வளவு தீவிரம் காட்டும் அளவுக்கு, 16 கண்காணிப்பு கோபுரங்கள் கொண்ட அந்தப் பெரிய வளாகத்தில் என்ன இருக்கிறது?

``அது மறு-கல்வி கற்பிக்கும் ஒரு பள்ளிக்கூடம்,'' என்று ஹோட்டல்காரர் ஒருவர் எங்களிடம் கூறினார்.

``ஆமாம், அது மறு-கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடம்,'' என்று வேறொரு கடைக்காரர் ஒப்புக்கொண்டார்.

``அங்கே பல பத்தாயிரம் பேர் இப்போது இருக்கிறார்கள். தங்கள் எண்ணங்களில் அவர்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன.''

ஒரு பள்ளிக்கூடம் என்ற வரையறைக்குப் பொருந்தும் வகையில், இந்த பிரமாண்டமான இடம் இருக்கவில்லை.

ஜின்ஜியாங்கில் ``பள்ளிக்கூடத்துக்குச் செல்வது'' என்பது அதன் இயல்பான பொருளில் உள்ளது.

விசாரணை இல்லாமல் முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுவதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆனால் இந்த முகாம்களுக்கு எப்போதும் ஒரு பூசி மெழுகும் புனை பெயர் எப்போதும் உண்டு - அது பள்ளி என்பதாகும்.

சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் காரணத்தால், இந்த முகாம்களை பள்ளி என்று விவரிப்பதற்கு இரட்டிப்பான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அரசுத் தொலைக்காட்சியில் ஒளிமயமான சித்திரம் தீட்டப்படுகிறது. சுத்தமான வகுப்பறைகள், நன்றி மிக்க மாணவர்கள் தாங்களாகவே வந்து கல்வி கற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வெளியாகின்றன.

இந்தக் ``கல்விக்கு'' எந்த அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் அல்லது இந்த வகுப்புகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் அதில் குறியீடுகள் இருக்கின்றன.

நேர்காணல்கள் பெரும்பாலும் ஒப்புதல் வாக்குமூலங்களைப் போல உள்ளன.

``என்னுடைய தவறுகளை நான் ஆழமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்,'' என்று காமிரா முன்பு ஒருவர் கூறுகிறார். ``நான் இல்லம் திரும்பியதும் நல்ல குடிமகனாக இருக்க உறுதியேற்கிறேன்,'' என்று அவர் சொல்கிறார்.

சட்டபூர்வ செயல்பாடு, தொழில் திறன்கள் மற்றும் சீன மொழிப் பயிற்சி என்ற கலவையான அணுகுமுறை மூலம், தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சி என்பது தான் இந்த மையங்களின் நோக்கம் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக காட்டப்படும் விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை - பள்ளிக்கூடங்கள் அல்லது முகாம்கள் - என எப்படி கூறினாலும், உத்தேசிக்கப்பட்ட இலக்கு ஒன்றேதான் என்பதாக உள்ளது.

ஜின்ஜியாக் முஸ்லிம் சிறுபான்மையினருக்கான பிரத்யேக மையங்களாக இவை உள்ளன. அவர்கள் தங்கள் தாய்மொழியாக சீன மொழியைக் கொண்டிராதவர்களாக இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் சீருடை ஒழுங்கு கடைபிடிக்கப்படுவதைப் போல விடியோ காட்டுகிறது. மாணவிகள் ஒருவர்கூட தலையை மூடும் துணி அணிந்திருக்கவில்லை.

`ஜின்ஜியாங்கில் 1 கோடிக்கும் மேற்பட்ட உய்குர் மக்கள் உள்ளனர்.

அவர்கள் துருக்கிய மொழி பேசுகிறார்கள். மத்திய ஆசிய மக்களை ஒத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் சீனாவின் பெரும்பான்மை மக்கள் தொகையாக உள்ள ஹான் சீனர்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள்.

தெற்கில் உள்ள கஷ்கர் நகரம், பூகோள ரீதியில் சீன தலைநகர் பெய்ஜிங்கைவிட இராக் தலைநகர் பாக்தாத் நகருக்கு நெருக்கமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கலாசார ரீதியிலும் அது பாக்தாத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வரலாற்றைக் கொண்ட நிலையில், உய்குர்வாசிகளுக்கும், நவீன கால அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான உறவு நிறைவானதாக இல்லை. பெரிய இடைவெளி கொண்டதாகவே இருக்கிறது.

கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முன்பு, ஜின்ஜியாக் அவ்வப்போது சீனாவின் பிடியில் இருந்து விலகி சில காலங்கள் சுதந்திர நாடாக இருந்திருக்கிறது. அப்போதிருந்தே, அவ்வப்போது நடைபெறும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் மூலமாக, அந்தப் பிடிமானத்தை தொடர்ந்து சோதித்துக் கொண்டே இருக்கிறது.

அந்தப் பகுதியின் கனிமவளம் - குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு - ஜெர்மனைவிட ஐந்து மடங்கு அதிகம். சீனாவுக்கு இது பெருமளவு முதலீட்டைக் கொண்டு வந்திருக்கிறது. வேகமான பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. பெருமளவில் ஹான் சீனர்கள் இங்கு குடிபுகுந்துள்ளனர்.

அந்த வளர்ச்சியால் கிடைத்த பலன்கள் பாரபட்சமாக பகிர்ந்தளிக்கப்படுவதாக கருத்து ஏற்பட்டதால் உய்குர் மக்களிடம் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் சீன அதிகாரிகள், ஜின்ஜியாங் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் கடந்த பத்தாண்டு காலத்தில், பல கலவரங்கள், சமூகங்களுக்கு இடையிலான வன்முறை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மற்றும் காவல் துறையினரின் நடவடிக்கைகளால், பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபர் 2013: தியானென்மென் சதுக்கத்தில் பாதாசாரிகள் மீது நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காரில் வந்த உய்குர் முஸ்லிம்கள் மூன்றும் பேரும் கொல்லப்பட்டனர். இது முக்கிய நிகழ்வாக அமைந்தது.

உயிரிழப்புகளைப் பொருத்தவரையில் சிறியதாக இருந்தாலும், சீன அரசின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்ப்பதாக அந்தச் சம்பவம் இருந்தது.

மார்ச் 2014:

அதற்கடுத்த ஆண்டில், சீனாவில் குன்மிங் நகரில் ரயில் நிலையத்தில், கத்தியுடன் வந்த உய்குர்வாசிகள் 31 பேரை வெட்டிக் கொலை செய்தனர். இந்த இடம் ஜின்ஜியாங்கில் இருந்து 2000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், ஓர் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் மிகப் பெரிய கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடமாக ஜின்ஜியாங் பகுதி இருந்து வருகிறது.

முகத்தை அடையாளம் காணும் காமிராக்கள், செல்போன்களில் உள்ள தகவல்களை அறியும் கண்காணிப்பு சாதனங்கள், மொத்தமாக பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பது - போன்ற தொழில்நுட்ப வசதிகளை பெருமளவில் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.

இஸ்லாமிய அடையாளம் மற்றும் இஸ்லாமை பின்பற்றுவதை குறைக்கும் வகையில், கடுமையான புதிய சட்டபூர்வ நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன. நீண்ட தாடி வைத்துக் கொள்வது, தலையை மூடி துணி அணிவது, குழந்தைகளுக்கு மத போதனைகள் செய்வது, இஸ்லாமியரைப் போன்ற பெயர்கள் வைப்பது ஆகியவற்றுக்கு தடை விதிப்பதும் இதில் அடங்கும்.

பிரிவினைவாதம் என்பது சில தனிநபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற அரசின் எண்ணத்தில் அடிப்படையில் மாறுதல் ஏற்பட்டிருப்பதை அதன் கொள்கைகள் காட்டுகின்றன. உய்குர் கலாச்சாரம் மற்றும் பொதுவாக இஸ்லாமிய மதத்தில் உள்ளுறைந்த ஒரு பிரச்சினை இது என்ற சிந்தனை இருப்பதாகத் தெரிகிறது.

அதிபர் ஷி ஜின்பிங் ஆட்சியில் சமூகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது இதனுடன் ஒத்துப்போகிறது. குடும்பம் மற்றும் நம்பிக்கைக்கு விசுவாசமாக இருப்பது என்பது - கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பது என்றாகிவிட்டது.

உய்குர்களின் தனித்துவமான அடையாளம் என்பது, அவர்களை சந்தேகத்துக்குரிய இலக்காக ஆக்கிவிடுகிறது.

தீவிரவாத குழுக்களுடன் போரிடுவதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் சிரியாவுக்கு பயணமாகிவிட்டார்கள் என்ற நம்பகமான செய்திகள் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.

பாதசாரிகள் மற்றும் வாகன சோதனை மையங்களில் உய்குர் மக்கள் இன ரீதியாக பிரித்துப் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் ஹான் சீனர்கள் பெரும்பாலும் கை அசைவில் அனுப்பப்படுகிறார்கள்.

கஷ்கரில் ஒரு காவல் துறை சோதனைச் சாவடி, மார்ச் 2017

அவர்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஜின்ஜியாங் உள்ளும், வெளியிலும் பயணிப்பதற்கு இந்தத் தடைகள் அமல் செய்யப்படுகின்றன. `பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக' காவல் துறையினரிடம் அனைத்து பாஸ்போர்ட்களையும் குடியிருப்புவாசிகள் ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தும் ஆணையும் உள்ளது.

உய்குர் அரசு அதிகாரிகள் இஸ்லாத்தை பின்பற்றுவது, மசூதிகளுக்குச் செல்வது அல்லது ரமலான் நோன்பு இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஜின்ஜியாங்கில் கஸ்கர் நகரில் மூடி வைக்கப்பட்டுள்ள மசூதிக்கு மேலே சீன கொடி பறக்கிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, விசுவாசமாக இல்லை என்ற சந்தேகத்தின் பேரில் உய்குர் குடிமக்களுக்கு எதிராக, பழமையான மற்றும் நயமற்ற ஒரு தீர்வை சீனா அமல் செய்கிறது என்பதில் ஆச்சர்யம் இல்லை என்றே தோன்றுகிறது.

அரசாங்கம் மறுப்புகள் கூறினாலும், பாதுகாப்புடன் கூடிய முகாம்கள் இருப்பதற்கு, அதிகாரிகள் தெரிவிக்கும் நிறைய தகவல்களே ஆதாரமாக உள்ளன.

கட்டுமானத் திட்டங்களுக்கு டெண்டர் கோரி வெளியான அந்தப் பிராந்திய அரசின் டெண்டர் ஆவணங்களை அட்ரியன் ஜென்ஜ் என்ற ஜெர்மனைச் சேர்ந்த கல்வியாளர் ஆன்லைனில் கண்டுபிடித்துள்ளார்.

ஜின்ஜியாங் முழுக்க டஜன் கணக்கிலான புதிய கட்டுமானங்கள் பற்றிய அல்லது பழைய கட்டடங்களை மாற்றியமைப்பது பற்றி தகவல்களை அந்த ஆவணங்கள் தருகின்றன.

பல நேர்வுகளில், கண்காணிப்பு கோபுரங்கள், ரேசர் வயர், கண்காணிப்பு முறைமைகள் மற்றும் பாதுகாவலர் அறைகள் போன்ற விரிவான பாதுகாப்பு அம்சங்களை நிறுவுதல் பற்றி டெண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற ஊடக தகவல்கள் மூலம் இந்தத் தகவல்களை ஜென்ஜ் ஆய்வு செய்திருக்கிறார். குறைந்தபட்சம் பல லட்சம் உய்குர் மக்கள் மற்றும் இதர முஸ்லிம் சிறுபான்மையினர் மறு-கல்விக்காக இந்த பயிற்சி முகாம்களில் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆவணங்களில் பாதுகாப்புடன் கூடிய பயிற்சி முகாம்கள் என்று குறிப்பிடப்படவில்லை தான். ஆனால் கல்வி மையங்கள் என்று, அல்லது இன்னும் சரியான மொழி பெயர்ப்பில், ``மறு-கல்வி மையங்கள்'' என்று குறிப்பிடப் பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று, நாங்கள் பார்வையிட்ட பிரமாண்டமான ஒரு இடத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. டபன்செங் மாவட்டத்தில் ஏதோ ஓர் இடத்தில், ``கல்விப் பள்ளி மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும்'' இடத்தில் கதகதப்பை ஏற்படுத்தும் கருவிகளை நிறுவுவதற்கு 2017 ஜூலையில் ஒரு டெண்டர் கோரப்பட்டது.

இந்த மறைபொருள் வார்த்தைகளிலும், விவரிக்கப்பட்டவாறு வெளியில் தெரியும் அளவீடுகள் மற்றும் எண்ணிக்கைகளின் படியும் பார்த்தால் பெரிய அளவிலான தடுப்பு முகாமில் வேகமாக விரிவாக்கப் பணி நடைபெறுகிறது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் அறிய முடிகிறது.

2002 ஆம் ஆண்டில் ரெயிலா அபுலாய்ட்டி படிப்புக்காக ஜின்ஜியாங்கில் இருந்து பிரிட்டனுக்குச் சென்றார். பிரிட்டிஷ் ஆண் ஒருவரை சந்தித்து அவரைத் திருமணம் செய்து கொண்டு, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று வாழ்வைத் தொடங்கினார்.

கடந்த ஆண்டு அவருடைய தாய், வழக்கமான கோடைக்கால பயணமாக வந்து, மகள் மற்றும் பேரனுடன் சிறிது காலம் செலவழித்தார். லண்டனில் சில இடங்களை சுற்றிப் பார்த்தார்.

ஜியாமுக்ஸிநியூர் பிடா என்ற 66 வயதான அந்தப் பெண்மணி நல்ல கல்வி பெற்றவர், சீன அரசு நிறுவனத்தில் நீண்ட காலம் பொறியாளராகப் பணியாற்றியவர்.

படக்குறிப்பு,

ஜியாமுக்ஸிநியூர் பிடா

அவர் ஜின்ஜியாங்கிற்கு ஜூன் 2 ஆம் தேதி திரும்பினார்.

அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்பதால், அவர் பத்திரமாக வீடு சென்று சேர்ந்தாரா என்பதை அறிய ரெயிலா தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

குறுகிய நேரம் நடந்த அந்த உரையாடல் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

``போலீசார் வீடு தேடி வருவதாக அவர் கூறினார்,'' என்று ரெயிலா நினைவுபடுத்திச் சொல்கிறார்.

விசாரணையின் இலக்கு ரெயிலா தான் என்பது போலத் தோன்றியது.

அவருடைய தாயார் கூறிய தனது ஆவணங்களின் நகல்களை - பிரிட்டன் முகவரிக்கான அத்தாட்சி, பிரிட்டன் பாஸ்போர்ட் நகல், அவருடைய பிரிட்டன் தொலைபேசி எண்கள் மற்றும் அவருடைய பல்கலைக்கழக கல்வி பற்றிய தகவல் - ஆகியவற்றை அவர் அனுப்ப வேண்டியிருந்தது.

படக்குறிப்பு,

ரெயிலா அபுலாய்ட்டி

சீன செல்போன் சாட் சர்வீஸ் மூலம் அவற்றை அனுப்புமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்ட பிறகு, ரெயிலாவின் உள்ளத்தை உறையச் செய்யும் வகையில் அவரது தாய் ஒரு விஷயம் கூறினார்.

``மறுபடி என்னை அழைக்க வேண்டாம்,'' என்று, ``ஒருபோதும் என்னை கூப்பிடாதே'' என்று அவருடைய தாயார் சொல்லியிருக்கிறார்.

அவருடைய குரலை அந்த மகள் கேட்டது அது தான் கடைசி முறை.

அப்போதிருந்து தனது தாயார் அந்த முகாமில் தான் இருக்கிறார் என்று அவர் நம்புகிறார்.

``எந்தக் காரணமும் இல்லாமல் எனது தாயாரை அடைத்து வைத்திருக்கிறார்கள்'' என்று அவர் கூறுகிறார். ``எனக்குத் தெரிந்த வரையில், உய்குர் அடையாளத்தையே உலகில் இருந்து அழித்துவிட வேண்டும் என்று சீன அரசு விரும்புவதைப் போல தெரிகிறது'' என்கிறார் அவர்.

கடல்கடந்து வாழும் உய்குர் இன மக்களில் எட்டு பேரிடம் பிபிசி நீண்ட பேட்டிகளைக் கண்டது. அவர்களின் சாட்சியங்கள் எல்லாமே குறிப்பிடத்தக்க வகையில் ஒரே மாதிரியாக இருந்தன. முகாம்களுக்குள் உள்ள நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும், எந்த அடிப்படையில் மக்கள் அங்கே அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அவர்கள் தெரிவித்தனர்.

மைய நீரோட்ட மதச் செயல்பாடுகள், மிகச் சிறிய அதிருப்தி வெளிப்படுத்தல் மற்றும் வெளிநாடுகளில் வாழும் உய்குர் மக்களுடன் ஏதும் தொடர்பு இருத்தல் போன்றவை, இந்த முகாம்களில் அடைக்கப்படுவதற்குப் போதுமான காரணங்களாக இருக்கின்றன.

ஒவ்வொரு நாள் காலையிலும் 29 வயதான அப்லெட் டுர்சன் டோஹ்ட்டி சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே எழுப்பிவிடப்படுவார். உடற்பயிற்சி மைதானத்துக்கு வருவதற்கு அவருக்கும், அவருடன் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு நிமிட அவகாசம் அளிக்கப்படும்.

வரிசையாக நின்ற பிறகு, அவர்கள் ஓட வைக்கப்படுவார்கள்.

``போதிய வேகத்தில் ஓடாதவர்களை தண்டிப்பதற்கு விசேஷ அறை ஒன்று இருக்கிறது,'' என்று அப்லெட் கூறுகிறார். ``அங்கே இரண்டு ஆண்கள் இருப்பர். ஒருவர் பெல்ட்டால் அடிப்பார், மற்றொருவர் உதைத்துக் கொண்டிருப்பார்,'' என்று குறிப்பிடுகிறார்.

முகாம் நடைபெறுவதாக அவர் தெரிவித்த இடத்தின் செயற்கைக்கோள் படத்தில் இந்த உடற்பயிற்சி மைதானத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. தெற்கு ஜின்ஜியாங்கில் ஹோட்டன் நகரில் பாலைவன நகரில் அது அமைந்திருக்கிறது.

``கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புதிய சீனா இருந்திட முடியாது, என்ற பாடலை எங்களைப் பாட வைப்பார்கள்,'' என்று அல்பெட் கூறியுள்ளார்.

``மேலும் எங்களுக்கு சட்டங்களைக் கற்பித்தார்கள். சரியாக அவற்றை ஒப்பிக்காவிட்டால், உங்களுக்கு அடி விழும்.''

படக்குறிப்பு,

2018-ல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம் ஒன்றில் அல்பெட் அடைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் ஹோட்டன் முகாம் காட்டப்பட்டுள்ளது

2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் அங்கே ஒரு மாதம் இருந்துள்ளார். சில வகைகளில், அதிர்ஷ்டக்காரர்களில் அவரும் ஒருவர்.

பாதுகாப்பு முகாம்கள் தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் மறு-கல்வி ``வகுப்புகளின்'' காலம் குறுகியதாக இருந்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் யாராவது விடுவிக்கப் பட்டார்களா என்பது குறித்து மிகவும் சில செய்திகள்தான் வெளியாகியுள்ளன.

மொத்தமாக பாஸ்போர்ட்கள் திரும்பப் பெறப்படுவதால், சீனாவை விட்டு கடைசியாக வெளியேற முடிந்த உய்குர் மக்களில் அப்லெட்டும் ஒருவர்.

கலாசார, மொழி ரீதியில் தொடர்புகள் உள்ளதால், உய்குர் மக்கள் கணிசமாக வாழும் துருக்கியில் அவர் அகதியாக இருக்க அனுமதி கோரினார்.

தன்னுடைய 74 வயதான தந்தையும், உடன்பிறந்த எட்டு பேரும் முகாம்களில் இருப்பதாக அப்லெட் கூறுகிறார். ``வெளியில் யாருமே விட்டுவைக்கப் படவில்லை,'' என்கிறார் அவர்.

அப்துஸலாம் முகமது, 41 என்பவரும் இப்போது துருக்கியில் வாழ்கிறார்.

இறுதிச் சடங்கில் இஸ்லாமிய இறைவாசகம் ஒன்றை கூறியதற்காக 2014ல் அவரை ஜின்ஜியாங் முகாமில் காவல் துறையினர் அடைத்தனர்.

தன் மீது குற்றம்சாட்ட அவர்கள் இறுதியாக முடிவு எடுத்தனர். இன்னும் தாம் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கிறார்.

படக்குறிப்பு,

அப்துஸலாம் முகமது,

``எனக்கு கல்வி புகட்டப்பட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்,'' என அவர் விவரிக்கிறார்.

அவர் இருந்த மையம் ஒரு பள்ளிக்கூடத்தைப் போல தோன்றவில்லை.

செயற்கைக்கோள் படத்தில் பார்த்தால், ஹனாய்ரிகே சட்டபூர்வ கல்வி பயிற்சி மையத்தின் காவல் கோபுரங்கள் மற்றும் இரண்டு சுற்று வேலிகள் இருப்பதை உங்களால் கண்டறிய முடியும்.

பாலைவனத்தில் கடுமையான வெயிலில் கீழே விழும் நிழலைப் பார்த்து ரேசர் வயர்கள் பெருமளவு பயன்படுத்தப் பட்டிருப்பதை அறிய முடியும்.

அதே உடற்பயிற்சி, அடாவடித்தனம், மூளைச் சலவை என்ற வழக்கமான நடைமுறைகளை அவர் விவரிக்கிறார்.

படக்குறிப்பு,

அப்துஸலாம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த ஹோட்டன் முகாமைக் காட்டும் செயற்கைக்கோள் படம்

25 வயதான அலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வெளிப்படையாகப் பேசுவதற்கு மிகவும் அஞ்சுகிறவர்களில் ஒருவர்.

2015-ல் தன்னுடைய செல்போனில், முகத்தை மூடி துணி அணிந்திருந்த ஒரு பெண்ணின் படத்தை காவல் துறையினர் பார்த்ததால் ஒரு முகாமில் தம்மை அடைத்துவிட்டார்கள் என்று அவர் சொல்கிறார்.

``மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவிருந்த வயதான ஒரு பெண்மணி அங்கிருந்தார்'' என்று கூறிய அவர், ``தண்ணீர் கட்டணத்தை உரிய காலத்தில் கட்டாமல் போன ஒரு முதியவரும் அங்கே இருந்தார்'' என்றும் தெரிவிக்கிறார்.

படக்குறிப்பு,

அலி (அவருடைய உண்மையான பெயர் அல்ல) தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை

கட்டாய உடற்பயிற்சி நடந்த ஒரு சமயத்தில், ஓர் அதிகாரியின் கார் முகாமுக்குள் வந்தது. அப்போது நுழைவு வாயில் சிறிது நேரம் திறந்து வைக்கப் பட்டிருந்தது.

"அந்த நேரத்தில் வெளியில் இருந்து ஒரு சிறுவன் உள்ளே ஓடிவந்து எங்களுடன் ஓடிக்கொண்டிருந்த அவனது தாயாரிடம் சென்றான்.

அந்தப் பெண்மணி குழந்தையை நோக்கிச் சென்று அவனைக் கட்டியணைத்து அழத் தொடங்கிவிட்டார். ''

``பிறகு போலீஸ் ஒருவர் அந்தப் பெண்மணியின் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு, சிறிய குழந்தையை முகாமுக்கு வெளியே இழுத்துத் தள்ளினார்.''

அரசு டி.வி.யில் சுத்தமான சுற்றுப்புறங்களுடன் காட்டப்பட்டுள்ள இடங்களில், மிகவும் மாறுபட்ட சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

``நாங்கள் தங்கும் டார்மெட்டரிகள் இரவில் பூட்டப்பட்டிருந்தன'' என்று அப்லெட் கூறுகிறார். ஆனால் உள்ளே கழிவறைகள் கிடையாது. எங்களுக்கு அவர்கள் பாத்திரங்கள் மட்டும் கொடுத்திருந்தனர்.

இதையெல்லாம் சுதந்திரமான முறையில் சரிபார்ப்பதற்கு எந்த வழியும் இல்லை.

முறைகேடுகள் நடப்பதைப் பற்றிய புகார்கள் பற்றி சீன அரசிடம் நாங்கள் கேட்டோம். ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை.

உய்குர்களுக்கு ஜின்ஜியாங்கிற்கு வெளியே நடக்கும் செய்திகள் எதுவும் வருவதில்லை.

அச்சத்தால் அங்கு அமைதி நிலவுகிறது.

குடும்பத்தினர் கலந்துரையாடும் குரூப்களில் இருந்து நீக்கப்படுவது, அல்லது மறுபடி ஒருபோதும் அழைக்க வேண்டாம் என்று சொல்லப்படுவதெல்லாம் இப்போது சாதாரணமாகிவிட்டன.

உய்குர் கலாசாரத்தின் இரண்டு முக்கியமான மையமான அம்சங்களாக இருக்கும் - நம்பிக்கை மற்றும் குடும்பம் - ஆகியவை திட்டமிட்டு சிதைக்கப் படுகின்றன.

தனியாக வசிக்கும் குடும்பத்தினர் இவ்வாறு பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்படுவதால், பல குழந்தைகள் அரசு ஆதரவற்றோர் இல்லங்களில் விடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பில்கிஜ் ஹிபிபுல்லா என்ற பெண்மணி தனது ஐந்து குழந்தைகளுடன் 2016ல் துருக்கிக்கு வந்தார்.

படக்குறிப்பு,

பில்கிஜ் ஹிபிபுல்லா

இப்போது மூன்றரை வயதாகியிருக்கும் அவருடைய கடைசி மகள், செக்கினே ஹசன், ஜின்ஜியாங்கில் அவருடைய கணவருடன் இருக்கிறார்.

அவளுக்கு இன்னும் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அது கிடைத்துவிட்டால், குடும்பத்தினர் இஸ்தான்புல் நகரில் மீண்டும் ஒன்று சேருவதாக அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அவளுக்கு பாஸ்போர்ட் கிடைக்கவே இல்லை.

படக்குறிப்பு,

பில்கிஜ்-ன் மகள் செக்கினே, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பார்க்கவில்லை

தனது கணவரை கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி முகாமில் அடைத்திருப்பார்கள் என்று பில்கிஜ் நம்புகிறார்.

அதன் பிறகு அவர் குடும்பத்தில் மற்றவர்களுடன் தொடர்பை இழந்துவிட்டார். தனது மகள் இப்போது எங்கிருக்கிறாள் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியாது.

``எனது மற்ற குழந்தைகள் தூங்கச் சென்ற பிறகு, நடு ராத்திரியில், நான் நிறைய அழுகிறேன்,'' என்று அவர் சொல்கிறார்.

``உன்னுடைய மகள் எங்கிருக்கிறாள், உயிரோடு இருக்கிறாளா அல்லது செத்துவிட்டாளா என்றுகூட தெரியாமல் இருப்பதைவிட பெரிய துயரம் எதுவும் கிடையாது.''

``என்னுடைய பேச்சை அவள் இப்போது கேட்க முடியும் என்றால், மன்னித்துவிடு என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டேன்.''

பொதுவெளியில் கிடைக்கும், பொதுவான செயற்கைக்கோள் டேட்டாவை பயன்படுத்தி, ஜின்ஜியாங்கின் இருண்ட உண்மைகள் மீது வெளிச்சம் பாய்ச்ச முடியும்.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் ஐரோப்பிய ஆணையம் போன்ற நிறுவனங்களின் சார்பில், கட்டமைப்பு வசதிகளை வான்வெளியில் இருந்து கண்காணிப்பதில் அனுபவம் கொண்ட பன்னாட்டு ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஜி.எம்.டபிள்யூ.

ஜின்ஜியாங் முழுக்க அமைந்துள்ள 101 இடங்களின் பட்டியல்களை இந்த அமைப்பின் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மறு-கல்வி முகாம் திட்டம் குறித்து பல்வேறு ஊடக செய்திகள் மற்றும் கல்வி ஆராய்ச்சி அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் பெறப்பட்டன.

ஒன்றன் பின் ஒன்றாக, புதிய இடங்களின் வளர்ச்சியையும், ஏற்கெனவே இருந்தவற்றின் விரிவாக்கத்தையும் அவர்கள் அளவீடு செய்தார்.

மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தேவைப்படும் - காவல் கோபுரங்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்ற பொதுவான அம்சங்களை அவர்கள் அடையாளம் கண்டு ஒப்பீடு செய்தனர்.

ஒவ்வொரு இடமும் உண்மையில் ஒரு பாதுகாப்பு மையமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர்கள் வகைப்படுத்தினர். அவற்றில் 44 இடங்களை உயர் மற்றும் மிக உயர் வகை என அவர்கள் வகைப்படுத்தினர்.

பிறகு அந்த 44 இடங்களையும் செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்தனர்.

அப்துசலேம் முகமது அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாமில் நடைபெற்ற கட்டடப் பணிகளை படங்கள் காட்டுகின்றன.

அந்த இடங்கள் எதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன என ஜி.எம்.டபிள்யூ-வால் சொல்ல முடியவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிறைய புதிய பாதுகாப்பு மையங்களை, துரித வேகத்தில் சீனா உருவாக்கி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இது உண்மையான நிலவரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் இருக்கலாம்.

அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் அண்மைக் காலமாக பெரிய மையங்களை உருவாக்குகிறார்கள்.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் புதிய கட்டுமானத் திட்டங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருந்தபோதிலும், மையங்களில் ஒட்டுமொத்த கட்டுமான பரப்பளவைப் பார்த்தால், கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டின் அளவு அதிகமானதாகவே இருக்கிறது.

இந்த 44 இடங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், ஜின்ஜியாங்கில் பாதுகாப்பு மையங்களின் பரப்பளவு 2003ல் இருந்து 440 ஹெக்டர்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று ஜி.எம்.டபிள்யூ. கணக்கிட்டுச் சொல்கிறது.

இது வெளிப்புற பாதுகாப்பு சுவர்களுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் அளவீடுதானே தவிர, கட்டடங்களின் பரப்பளவு அல்ல.

ஆனால் 440 ஹெக்டர்கள் என்பது மிகவும் அதிகம்.

உதாரணத்துக்குப் பார்ப்பதாக இருந்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 14 ஹெக்டர் பரப்புள்ள - இரட்டைக் கோபுரங்கள் கொண்ட சீர்திருத்த மையம் மற்றும் ஆண்களுக்கான மத்திய சிறை வளாகத்தில் மொத்தமாக ஏறத்தாழ 7,000 சிறைவாசிகள் இருக்கின்றனர்.

ஜி.எம்.டபிள்யூ கண்டறிந்தவற்றில் ஒன்றை - டபங்செங் மையத்தில் கட்டடங்களின் அளவு அதிகரித்திருப்பதை - நாங்கள் எடுத்துக் கொண்டோம். சிறைச்சாலைகள் வடிவமைப்பதில் நீண்டகால அனுபவம் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கய்மெர் பெய்லி கட்டுமான நிறுவன நிபுணர் குழுவிடம் அதைக் காட்டினோம்.

செயற்கைக்கோள் படங்களில் கிடைத்த அளவீடுகளைப் பயன்படுத்தி கணக்கிட்டதில், குறைந்தபட்சம் 11,000 பேரை அங்கே அடைத்து வைக்கும் அளவுக்கு இடவசதி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறைந்தபட்சமாக கணக்கிட்டாலும், உலகில் மிகப் பெரிய சிறைகளுக்கு இணையாகவே இது இருக்கிறது.

அமெரிக்காவில் மிகப் பெரியதான, நியூயார்க் ரிக்கெர் தீவு வளாகத்தில் 10,000 சிறைவாசிகளை வைப்பதற்கான இடவசதி உள்ளது.

ஐரோப்பாவில் பெரியதாகக் கூறப்படும், இஸ்தான்புல் நகருக்கு வெளியே உள்ள சிலிவ்ரி சிறைச்சாலை, 11,000 பேரை அடைத்து வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.

இந்த ஒப்பீடுகளைக் கூறிய கய்மெர் பெய்லி கட்டுமான (GBA) நிபுணர்கள், அந்த வளாகத்தில் நிறைய கட்டடங்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

டபங்செங் மையத்தில் அவர்களுடைய குறைந்தபட்ச கணக்கீடு என்பது, அடைக்கப்பட்டுள்ள நபர்கள் தனித்தனி அறைகளில் அடைக்கப்படுவதாக வைத்து கணக்கிடப்பட்டது.

அறைக்குப் பதிலாக பெரிய டார்மெட்ரிகளாக பயன்படுத்தப்பட்டால், டபங்செங் மையத்தில் அடைக்கப்படக் கூடியவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அது சுமார் 130,000 வரை செல்லும் என்று ஜிபிஏ கூறியது.

முடிந்தவரை குறைந்த இடத்துக்குள், அதிகபட்ச நபர்களை அடைத்து வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இடத்தைப் போலத் தெரிகிறது இது.

இந்தப் படங்களை சமூக பொறுப்புணர்வுக்கான கட்டுமான நிபுணர்கள்/வடிவமைப்பாளர்கள்/ திட்டமிடுபவர்கள் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைவரும், கட்டுமான நிபுணருமான ரபேல் ஸ்பெர்ரியிடம் காட்டினோம்.

``உண்மையிலேயே இது பெரிய இருண்ட சிறைப் பகுதி'' என்று அவர் கூறினார்.

``முடிந்தவரை குறைந்த இடத்துக்குள், அதிகபட்ச நபர்களை அடைத்து வைப்பதற்காக குறைந்தபட்ச செலவில் வடிவமைக்கப்பட்ட இடத்தைப் போலத் தெரிகிறது.''

``11,000 என்பது மிகக் குறைந்த மதிப்பீடு போலத் தெரிகிறது. கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து, உள்ளே எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்றோ கட்டடத்தின் எந்தப் பகுதிகள் ஆட்களை அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது என்றோ நம்மால் சொல்ல முடியாது. ஆனால், டார்மெட்ரியாக இருந்தால் 1,30,000 பேரை அடைக்கலாம் என்ற உங்கள் கணக்கீடு சாத்தியம்தான்.''

அந்த இடத்துக்குச் செல்வதற்கு அனுமதி இல்லை என்பதால், இந்த பகுப்பாய்வை சுதந்திரமான முறையில் சரி பார்ப்பதற்கு வழி எதுவும் இல்லை.

டபன்செங் மையத்தில் உள்ள வளாகம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஜின்ஜியாங் அதிகாரிகளிடம் நாங்கள் கேட்டோம். ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை

ஜின்ஜியாங்கில் உள்ள பாதுகாப்பு முகாம்கள் அனைத்துமே ஒரே மாதிரியாக இல்லை.

சில பாதுகாப்பு மையங்கள் புதிதாகக் கட்டப்படவில்லை. ஆனால் பள்ளிக்கூடங்கள் அல்லது தொழிற்சாலைகள் போன்றவற்றுக்காக முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இவை சிறியதாகவும், நகர மையங்களுக்கு நெருக்கமாகவும் அமைந்துள்ளன.

வடக்கில் உள்ள யினிங் கவுண்ட்டியில் இதுபோன்ற சில முகாம்களைப் பார்வையிடுவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம்.

``ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான'' தேவைகளுக்காக, ஐந்து ``தொழில் திறன் கல்வி பயிற்சி மையங்கள்'' உருவாக்கும் ஒரு திட்டத்துக்கான அந்தப் பிராந்திய அரசின் கொள்முதல் ஆவணங்களை நாங்கள் பார்த்தோம்.

நகரின் மையப் பகுதியில், யினிங் நம்பர் 3 நடுநிலைப் பள்ளியாகப் பயன்படுத்தப்பட்ட பெரிய கட்டடங்களின் தொகுப்பு உள்ள ஓர் இடத்தில் நாங்கள் நின்றோம்.

அந்த இடத்தில் உயரமான, உறுதியான நீல இரும்பு வேலி போடப்பட்டிருந்தது. முன்புற நுழைவாயிலில் அதிக பாதுகாப்பு இருந்தது.

விளையாட்டு மைதானம் அருகே புதிதாக ஒரு கண்காணிப்பு கோபுரம் இருந்தது. கால்பந்து மைதானமாகப் பயன்படுத்தப்படும் இடத்தில் இன்னொரு கண்காணிப்பு கோபுரம் இருந்தது.

அந்த இடம் இப்போது முழுக்க மறைக்கப்பட்ட ஆறு பெரிய ஸ்டீல் கூரையுடன் கூடிய கட்டடங்களால் மூடப்பட்டுள்ளது.

படக்குறிப்பு,

யினிங் நம்பர் 3 நடுநிலைப் பள்ளி இப்போது பாதுகாப்பாக அடைத்து வைக்கப்படும் மையமாகிவிட்டதாக நம்பப்படுகிறது

பார்ப்பதற்கு வந்த உறவினர்கள் வெளியில் பாதுகாப்பு சோதனை இடத்தில் வரிசையாக நிற்கிறார்கள்.

மறுபடியும், நகரில் நாங்கள் எங்கே சென்றாலும், இரண்டு அல்லது மூன்று கார்கள் எங்களைப் பின்தொடர்ந்து வந்தன.

ஒரு முகாமில் நாங்கள் வெளியே வந்து வேலியால் சூழப்பட்ட இடத்தைப் படம் பிடிக்க முயற்சித்த போது, நாங்கள் தடுக்கப்பட்டோம்.

அதிகாரிகள், எங்கள் காமிரா லென்ஸ்கள் மீது கைகளை வைத்துக் கொண்டு, இந்தப் பகுதியில் இன்று முக்கியமான ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது என்று எங்களிடம் கூறி, அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

முன்னாள் பள்ளிக்கூடமான அந்த வளாகத்துக்கு வெளியே ஒரு தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம் வேலிக்கு அருகே அமைதியாக நின்றிருப்பதைப் பார்த்தோம்.

அவர்களை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் எங்களிடம் பேச வேண்டாம் என தடுத்தார். ஆனால் இன்னொருவர் அந்த நபரை தடுத்ததைப் போலத் தெரிகிறது.

``அவர்கள் பேசட்டும்,'' என்றார் அந்தப் பெண்மணி.

யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று அவர்களிடம் நான் கேட்டேன்.

காணொளிக் குறிப்பு,

10 லட்சம் முஸ்லிம்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் சீனா?

சிறிய அமைதிக்குப் பிறகு, ``என் தந்தையைப் பார்க்க வந்திருக்கிறோம்'' என்று சிறுவன் பதில் அளித்தான்.

மறுபடியும் எங்கள் லென்ஸ்களை கைகள் மறைத்தன.

ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த, கஷ்கர் நகரில், உய்குர் கலாச்சாரத்தின் இதயத் துடிப்பாக இருந்த அந்த நகரில் உள்ள குறுகலான தெருக்களில் அசாதாரணமான அமைதி நிலவுகிறது. பல கதவுகள் மூடி தாழிடப்பட்டுள்ளன.

தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கே சென்றிருக்கிறார்கள் என்று கேட்டால், அதற்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஒரு நோட்டீஸை ஓர் இடத்தில் நாங்கள் பார்த்தோம்.

நகரின் பிரதான மசூதி ஒரு அருங்காட்சியகத்தைப் போல இருக்கிறது.

அடுத்த தொழுகை நேரத்தைத் தெரிந்து கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் யாராலும் எங்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

``சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காகவே நான் இங்கே இருக்கிறேன்,'' என்று ஓர் அதிகாரி எங்களிடம் சொன்னார். ``தொழுகை நேரங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.

சதுக்கத்தில், தாடியில்லாத முதியவர்கள் சிலர் அமர்ந்திருந்தனர்.

மற்ற அனைவரும் எங்கே என்று அவரிடம் நாங்கள் கேட்டோம்.

அவர்களில் ஒருவர் வாயால் சைகை செய்தார். உதடுகளை மூடிக் கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசுவது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சைகை செய்தார்.

``இனிமேல் யாரும் வர மாட்டார்கள்'' என்று இன்னொருவர் முணுமுணுத்தார்.

ஹெல்மட் அணிந்திருந்த போலீஸ்காரர் ஒருவர், சிறிது தொலைவில், மசூதியின் படிக்கட்டுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

பக்கெட்டில் தண்ணீர் விழும் ஓசையும், தரையைத் துடைக்கும் துணியின் ஓசையும் சதுக்கத்தில் தெளிவாகக் கேட்கும் அளவுக்கு அங்கே அமைதி நிலவியது.

சீன சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

கஷ்கரை விட்டு புறப்பட்டு நெடுஞ்சாலைக்கு வந்தோம். உய்குர் கிராமங்கள் மற்றும் பண்ணைகள் என குறிப்பிடப்பட்ட மற்றும் முகாம்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களைக் காண தென்மேற்கில் புறப்பட்டோம்.

வழக்கம் போல எங்களை சிலர் பின் தொடர்ந்தார்கள். ஆனால் சீக்கிரத்திலேயே எதிர்பாராத ஒரு தடையில் சிக்கினோம்.

எங்களுக்கு எதிரே, நெடுஞ்சாலை அப்போது தான் மூடப்பட்டிருப்பதாகத் தெரிந்தது.

சாலையின் மேற்பரப்பு வெயிலில் உருகிவிட்டது என்று, அங்கு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

``மேற்கொண்டு பயணம் செல்வது பாதுகாப்பானதல்ல,'' என்று அவர்கள் கூறினர்.

மற்ற கார்களை வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு திருப்பி அனுப்பியதை நாங்கள் கவனித்தோம். ``சிறிது நேரம்'' காத்திருங்கள் என்று ரேடியோ மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டதை நாங்கள் கேட்டோம்.

காத்திருப்பு என்பது நான்கு அல்லது ஐந்து மணி நேரமாகஇருக்கும் என்று எங்களுக்குச் சொன்னார்கள். திரும்பிச் செல்லுமாறு எங்களுக்கு யோசனை தெரிவித்தனர்.

மாற்று வழிகளை முயற்சித்தோம். ஆனால் வேறொரு காரணம் கூறி அங்கும் சாலை மூடப்பட்டிருந்தது.

ஒரு சாலை ``ராணுவப் பயிற்சிக்காக'' மூடப்பட்டிருந்தது.

நான்கு வெவ்வேறு சாலைகளில், நான்கு முறைகள் நாங்கள் திரும்பி வந்தோம். கடைசியில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

அடுத்த சில கிலோமீட்டர்கள் தொலைவில் மற்றொரு பிரமாண்டமான முகாம் இருக்கிறது. சுமார் 10,000 பேரை அடைத்து வைக்கக் கூடிய முகாம் அது என்று சொல்லப்படுகிறது.

ஜின்ஜியாங் அரசு நிர்வாகத்தில் உய்குர் மக்கள் பொறுப்பில் இருக்கிறார்கள்.

எங்களைப் பின்தொடர்ந்த மற்றும் தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் உய்குர்கள்.

ஏதும் மாறுபட்ட விஷயம் இருப்பதாக உணர்ந்தால் அவர்களால் சொல்ல முடியாது.

படக்குறிப்பு,

ஜின்ஜியாங்கில் ஒரு சுவரொட்டி: ``ஸ்திரத்தன்மை என்பது நன்மை தரக் கூடியது, ஸ்திரமற்ற நிலை என்பது பேரழிவு''

ஆனால் மக்களைப் பற்றிய தகவல் சேகரிப்பு நடைமுறை மற்றும் கட்டுப்பாட்டை சிலர் நிறவெறியோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால், அது முழுக்க சரியானதல்ல.

இந்த அமைப்பில் பல உய்குர்களுக்கும் பங்கு இருக்கிறது.

உண்மையில் சீனாவின் கடந்த கால சர்வாதிகாரத்தில், இதற்கு இணையான விஷயத்தைக் காண முடியும்.

கலாச்சார புரட்சிக்காலத்தில் சொல்லப்பட்டதைப் போல, காப்பாற்றப்படுவதற்காக தனிமைப்படுத்தப்படவேண்டும் என்றும் ஒரு ஒட்டுமொத்த சமூகத்துக்கு சொல்கிறார்கள்.

உய்குர் இனத்தவரும், அந்தப் பகுதியில் இரண்டாவது அதிக சக்தி வாய்ந்த அரசியல்வாதியாக கருதப்படுகிறவருமானஷோஹ்ரட் ஜாகிர் இந்தப் போரில் ஏறத்தாழ வெற்றி பெற்றுவிட்டதாக சொல்கிறார்.

படக்குறிப்பு,

ஷோஹ்ரட் ஜாகிர் ஜின்ஜியாங் மாகாண தலைவராக இருக்கிறார். உய்குர் இனத்தவர்

``கடந்த 21 மாதங்களில், பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. பொது பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது உள்ளிட்ட கிரிமினல் சம்பவங்களும் கணிசமாகக் குறைந்துவிட்டன,'' என்று அரசு ஊடகத்துக்கு அவர் சொன்னதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

``ஜின்ஜியாங் அழகானது மட்டுமல்ல, பாதுகாப்பானது, ஸ்திரத்தன்மை கொண்டது.''

ஆனால் அடைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படும்போது என்னவாகும்?

முகாம்களில் முன்பு அடைக்கப் பட்டிருந்தவர்களுடன் நாங்கள் பேசியபோது அனைவரும் கோபத்தால் கொதிப்பில் இருந்தனர்.

இவ்வளவு பெரிய ரகசியமான, இடர் மிகுந்த டபங்செங் பாதுகாப்பு மையத்தில் இருந்தவர்கள் எவரிடமும் எதையும் உலகம் இன்னும் பேச முடியாமலே உள்ளது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை விசாரணை அல்லது குற்றச்சாட்டு இல்லாமல் அடைத்து வைத்திருப்பதை, சொல்லப் போனால் எந்தவிதமான சட்ட நடைமுறைகளையும் பெற முடியாமல் அடைத்து வைத்திருப்பதற்கு இந்த செய்தி புதிய ஆதாரங்களை தந்திருக்கிறது.

அது வெற்றிகரமாக இருப்பதாக சீனா ஏற்கெனவே பிரகடனம் செய்திருக்கிறது.

ஆனால், இதுபோன்ற திட்டம் எங்கே இட்டுச்செல்லும் என்பது பற்றிய ஆபத்தான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :