கால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் - விசாரணையை முடுக்கிய பிரான்ஸ்

கரங்கள் இல்லா குழந்தைகள்

பட மூலாதாரம், AFP

பிரான்சில் கை கால்கள் இல்லாமல் கொத்து கொத்தாக குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, இதன் காரணத்தை கண்டுபிடிக்க தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு முடுக்கிவிட்டுள்ளது.

பிரான்சில் மூன்று இடங்களில் இவ்வாறு டஜன் கணக்கான குழந்தைகள் பிறந்ததை தொடர்நது சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. ஆனால், அதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. சுவிஸ் எல்லையை ஒட்டி உள்ள கிராமப்புற பகுதிகளிலும், வட மேற்கு கடற்கரை பகுதிகளிலும் இவ்வாறான குழந்தைகளின் பிறப்புகள் தற்போது பதிவாகி உள்ளன. இதையடுத்து மீண்டும் இது குறித்து விசாரிக்கிறது பிரான்ஸ்.

காந்தி சிலைக்கு தடை

இன வசைச் சொற்களை காந்தி பயன்படுத்தினார் என்று கூறி கிழக்கு ஆப்ரிக்கா நாடான மலாவி நாட்டு நீதிமன்றம் இந்தியாவின் தேசத் தந்தையான மோகன்தாஸ் காந்தி சிலை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்துள்ளது. அவர் ஆப்ரிக்க நாட்டினரை காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கூறி, காந்தி சிலைக்கு தடை விதிக்கும்படி சில பேராசிரியர்கள் கோரினர்.

பட மூலாதாரம், Getty Images

அதுமட்டுமல்லாமல், அவர் மலாவி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை, அவருக்கு ஏன் சிலை என்று கேள்வி எழுப்பி 3000 மலாவி மக்கள் கையெழுத்திட்டு மனு அளித்தனர். இந்த சிலை இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 10 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்படுகிறது.

செளதி சகோதரிகள் கொலையும், மர்மமும்

பட மூலாதாரம், NYPD

அமெரிக்கா ஹட்சன் ஆற்றங்கரையில் கடந்த வாரம் டேப் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த செளதி அரேபியா சகோதரிகளின் மர்ம மரணத்தை நியூயார்க் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தற்கொலையா அல்லது, கொலையா என்று இப்போதே சொல்வது கடினம் என்கிறார்கள் போலீஸார். இவர்கள் அண்மையில்தான் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணபித்து இருந்தனர்.

கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு ?

பட மூலாதாரம், EPA

விபத்துக்குள்ளான இந்தோனீசியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து வெளியாகும் சிக்னல் வரும் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் மீட்பு பணியாளர்கள். ஜாவா கடல் பகுதியில் 30 - 40 மீட்டர் ஆழத்தில் அதனை தேடி வருவதாக கூறுகிறார் இந்தோனீசியா ராணுவத் தலைவர். ஆனால், அந்த பகுதியில் கடலடி நீரோட்டம் மிகவும் வலுவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

சொந்தக் கட்சிப் பிரமுகரை வசைபாடிய டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் பால் ரியான் மீது கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

குடியுரிமைக்கான பிறப்புரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்கிறார் டிரம்ப். அதாவது, வெளிநாட்டு தம்பதிகளுக்கு அமெரிக்காவில் இருக்கும்போது குழந்தை பிறந்தால், அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க வேண்டும் என்கிறது அந்த சட்டம்.

டிரம்பின் இந்த யோசனைக்கு அவரது சொந்தக் கட்சியிலேயே பரவலான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து, "தனக்கு ஒன்றும் தெரியாத ஒரு விஷயத்தில் ரியான் கருத்து கூறாமல் இருக்க வேண்டும்" என்று டிரம்ப் கூறி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: