காந்தி சிலை அமைக்க ஆப்பிரிக்க நாடான மலாவி தடை விதித்தது ஏன்?

ஏன் காந்திக்கு எதிராக அணி திரள்கிறார்கள் மலாவி மக்கள்?

பட மூலாதாரம், Getty Images

இன வசைச் சொற்களை காந்தி பயன்படுத்தினார் என்று கூறி கிழக்கு ஆப்ரிக்கா நாடான மலாவி நாட்டு நீதிமன்றம் இந்தியாவின் தேசத் தந்தையான மோகன்தாஸ் காந்தி சிலை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்துள்ளது.

அவர் ஆப்ரிக்க நாட்டினரை காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கூறி, காந்தி சிலைக்கு தடை விதிக்கும்படி சில பேராசிரியர்கள் கோரினர்.

காந்தியின் கருத்துகள் கருப்பினத்தவரான தங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் 'காந்தி வீழ வேண்டும்' அமைப்பினர்.

இடைக்கால தடை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிக்கேல் டெம்போ சிலை கட்டுமான பணிகளுக்கு இடைகால தடை விதித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுடன் செய்துக் கொண்ட 10 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் பகுதியாக இந்த சிலையின் கட்டுமான பணிகள் நடைபெற்றன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மலாவியின் வணிகத் தலைநகரமாகப் பார்க்கப்படும் ப்ளாண்டைரில் காந்தியின் பெயரில் மண்டபமும் கட்டப்படுகிறது.

இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மலாவி சென்று சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார் என்கிறது அந்நாட்டு இதழான தி நேஷன்.

நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று தமது தீர்ப்பில் அந்நாட்டு உயர்நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

என்ன காரணம்?

காந்தி இந்தியாவின் தந்தையாக, கதாநாயகனாக கொண்டாடப்படுகிறார். ஆனால் அவரது ஆப்பிரிக்க நாட்கள் அதிக சச்சரவுக்குள்ளாகின்றன.

பட மூலாதாரம், DAILY HERALD ARCHIVE/GETTY IMAGES

காந்தி தங்கள் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி 3000 மலாவி மக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கானா பல்கலைக்கழக பேராசிரியர்கள் காந்தி சிலையை தங்கள் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கோரி இருந்தனர். காந்தி மேற்கொண்ட அகிம்சைப் போராட்டத்தில் 'இன அடையாளம்` இருந்ததாக அவர்கள் கூறினர்.

இதற்கு காந்தியின் எழுத்திலிருந்தே சான்று காட்டினர். காந்தி ஆப்ரிக்கர்களை காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தென் ஆப்ரிக்காவில் 2015 ஆம் ஆண்டு காந்தியின் சிலையை ஒருவர் சேதப்படுத்தினார்.

சிலை அகற்றம்

பட மூலாதாரம், Getty Images

கேப் டவுனில் உள்ள தென் ஆப்ரிக்கப் பல்கலைக்கழகம் 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டன் காலனியாதிக்கவாதி சீசில் ரோட்ஸ் சிலையை, மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அப்புறப்படுத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: