81,000 ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகள் திருடி விற்பனை
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்
ஃபேஸ்புக் தனிச் செய்திகள் திருடி விற்பனை
பட மூலாதாரம், Getty Images
குறைந்தது 81 ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து பயனாளிகளின் தனிப்பட்ட செய்திகளை, ஹேக்கர்கள் திருடி வெளியிட்டதாக தெரிகிறது.
மொத்தம் 120 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செய்தவர்கள் பிபிசி ரஷ்ய சேவையிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
தீங்கிழைக்கும் ப்ரௌசர் இணைப்புகளால் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நீதித்துறை அமைச்சரான சர்ச்சை நீதிபதி
பட மூலாதாரம், AFP
பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற தீவிர வலதுசாரி வேட்பாளரான சயீர் பொல்சனாரூ, ஊழலுக்கு எதிரானவராக அறியப்படும் நீதிபதி செர்ஜியோ மொரொவை நீதித்துறை அமைச்சராக நியமித்துள்ளார்.
தன்னை நீதித்துறை அமைச்சராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டது தனக்கு கிடைத்த "கௌரவம்" என்று மொரொ தெரிவித்தார்.
ஆனால் இந்த நியமனத்தின் மூலம், மோசடிக் குற்றச்சாட்டுக்கு எதிரான அவரது உயர்மட்ட விசாரணை, அரசியல் நோக்கத்தோடு செய்யப்பட்டது என்று குற்றச்சாட்டு வலுவாக எழுப்பப்படலாம்.
ஆபரேஷன் கார்வாஷ் என்று அறியப்படும் அவரது விசாரணை நியாயமற்ற முறையில் இடதுசாரி அரசியல் வாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டு உண்டு.
இந்த விசாரணையில் உருண்ட ஒரு முக்கியமான தலை இடதுசாரித் தலைவரான முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா.
நடந்து முடிந்த தேர்தலில் லூலா முன்னணி போட்டியாளராக இருந்தார். அந்த நேரத்தில்தான் ஊழல் வழக்கில் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரிவினைவாத, வலதுசாரிக் கருத்துகளை உடையவரான போல்சனரூ கடந்த வாரம் நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்.
கடந்த காலத்தின் சர்வாதிகார ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசிய அவர், பெண்கள், கருப்பினத்தவர், ஒருபால் உறவினர் ஆகியோர் மீது கூறிய கருத்துகள் சர்ச்சையையும், கவலையையும் ஏற்படுத்தின.
இந்த சர்ச்சையைப் பற்றி மேலும் அறிய: பிரேசில் ஜனாதிபதி வேட்பாளரின் அதிர்ச்சியூட்டும் 'வன்புணர்வு' கருத்து
வெள்ளை இனத்தவருக்கு எதிரான பாகுபாடு
பட மூலாதாரம், GETTY CREATIVE
வெள்ளை இனத்தைச் சேர்ந்த சொகுசு விடுதி ஊழியர்கள் 7 பேருக்கு எதிராக பாகுபாடு காண்பிக்கப்பட்டதாக கனடா நாட்டின் மனித உரிமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அத்தீர்ப்பாயம், அவர்களுக்கு 1,73,000 கனடியன் டாலர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
அந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் வெள்ளை இன ஊழியர்களை நீக்கிவிட்டு சீன நாட்டை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளார். சீனர்கள் குறைவான ஊதியம் பெறுவார்கள் என்பதால் அப்படிச் செய்ததாக அதன் உரிமையாளர் கின் வா சான் கூறினார்.
2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த விடுதியின் ஏழு வெள்ளையின ஊழியர்கள் அகற்றப்பட்டு, சீன ஊழியர்கள் அமர்த்தப்பட்டனர்.
இனத்தை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, பிரிட்டிஷ் கொலம்பியாவின் மனித உரிமை விதிகளுக்கு எதிரானது என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவன பங்குகள் வீழ்ச்சி
பட மூலாதாரம், Getty Images
பங்குச் சந்தையின் அதிகாரபூர்வ விற்பனை நேரத்துக்குப் பிறகு நடந்த பங்கு விற்பனையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விற்பனை வியாழக்கிழமை சரிந்து மீண்டும் எழுந்தது.
ஒரு கட்டத்தில் அதன் பங்கு விற்பனை 7 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் அளவுக்கு குறைந்திருந்தது.
வருமானத்திலும், லாபத்திலும் அந்நிறுவனம் சாதனை படைத்திருந்தபோதும், இந்த திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில் ஒப்பீட்டளவில் விற்பனை அளவு மாறாமல் இருந்த போதிலும், ஆப்பிள் போன்களின் விலை உயர்த்தப்பட்டதால் அதன் வருமானம் அதிகரித்தது.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 20 சதவீதம் உயர்ந்து 62.9 பில்லியன் டாலர் என என்ற அளவை எட்டியது. அதைப் போல லாபம் 31 சதவீதம் அதிகரித்து 14.1 பில்லியன் டாலர் அளவை எட்டியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :