பாகிஸ்தான் தெய்வ நிந்தனை வழக்கு: தஞ்சம் கோரும் ஆசியாவின் கணவர்

பாகிஸ்தான் படத்தின் காப்புரிமை EPA

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையான கிறித்துவ பெண்ணின் கணவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார்.

ஆசியா பிபி என்ற அந்த பெண்ணின் கணவர் ஆஷிக் மாசி, பாகிஸ்தானில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

புதன்கிழமையன்று ஆசியா பிபி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆதரங்கள் வலுவானதாக இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

அவரின் விடுதலை எதிராக பல வன்முறை போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் அரசு, ஆசியா நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.

சனிக்கிழமையன்று, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி ஆசியாவின் வழக்கறிஞர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார்.

2010ஆம் ஆண்டு பக்கத்து வீட்டினருடன் நடந்த சண்டையில், முகமது நபிகளை அவமதித்து பேசியதாக ஆசியா பிபி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவருக்கு தஞ்சம் வழங்க பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

அச்சத்தில் ஆசியாவின் கணவர்

அவரின் குடும்ப பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாக ஆசியாவின் கணவர் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

"எங்களுக்கு உதவுமாறு பிரிட்டன் பிரதமரை வேண்டுகிறேன். முடிந்தவரையில் எங்களுக்கு விடுதலையை தாருங்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா மற்றும் அமெரிக்க தலைவர்களிடமும் அவர் உதவி கோரியுள்ளார்.

ஆசியா பிபியின் விடுதலைக்கு எதிரான போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும்போக்கு கட்சியான டெஹ்ரீக் ஐ லபாய்குடன் பாகிஸ்தான் அதிகாரிகள் போட்ட ஒப்பந்தம் குறித்து தங்களுக்கு அச்சமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தம்படி ஆசியா பிபி நாட்டைவிட்டு செல்ல முடியாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

அவரை விடுதலை செய்வதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டக்காரர்கள் சட்டரீதியாக மேல் முறையீடு செய்வதையும் அரசாங்கம் தடுக்காது.

"அந்த ஒப்பந்தம் என்னுள்ளே நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் மீது அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் தவறு" என்று ஆசியாவின் கணவர் தெரிவித்துள்ளார்.

"தற்போதைய சூழல் எங்களுக்கு மிகவும் ஆபத்தானது. எங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை நாங்கள் இங்கும் அங்கும் ஒளிந்துக் கொண்டு வாழ்கிறோம்" என்றார் அவர்.

"என் மனைவி ஏற்கனவே நிறைய பாதிக்கப்பட்டுவிட்டார். அவர் 10 வருட காலத்தை சிறையில் கழித்துவிட்டார். என் மகள்கள் அவர் விடுதலையாகி வருவதை பார்க்க விரும்புகின்றனர். இந்த மறு சீராய்வு மனு அவரின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை விவகார கமிட்டியில் இருக்கும் டாம் டுஜெந்தாட், தனது தலைமை அலுவலகத்திடம் இந்த சூழல் குறித்து விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன் என தெரிவித்ததாக கார்டியனில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆசியா பிபிக்கு பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஃபஹத் செளத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.

"சூழ்நிலையை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். ஆசியா பிபிக்கு எந்த ஆபத்தும் நேராது என நான் உறுதி அளிக்கிறேன்" என தெரிவித்தார் அவர்.

வன்முறைக்கு வித்திடாமல் சூழ்நிலையை சரி செய்ய இந்த ஒப்பந்தம் உதவியதாக அவர் தெரிவித்தார்.

ஆசியா பிபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆசியா 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அண்டை வீட்டாருடன் விவாதத்தில் ஈடுப்பட்டார்.

அந்த வாக்குவாதமும் சாதாரணமான ஒரு விஷயத்திற்காகதான் தொடங்கியது. அவர்கள் லாகூர் அருகே பழம் பறித்துக் கொண்டிருந்த போது, ஒரு பக்கெட் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சனை தொடங்கியது.

தாங்கள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஆசியா அருந்திவிட்டார். இதனால், எங்கள் நம்பிக்கையின்படி அந்த தண்ணீரின் புனிதம் கெட்டுவிட்டது. இனி அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாது என்று கூறி சச்சரவிட்டனர்.

ஆசியா மதம் மாற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டதாகவும், அதற்கு மறுப்பாக முகமது நபியை ஆசியா இறை நிந்தனை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சச்சரவிட்டதை ஒப்புக் கொண்ட ஆசியா தொடக்கத்திலிருந்தே இறை நிந்தனை குற்றத்தை மறுத்து வந்தார்.

அவரது வழக்கறிஞர் அரசு தரப்பில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறி வந்தார்.

தெய்வ நிந்தனை சட்டங்கள் வலுவாக உள்ள பாகிஸ்தானில் இவரது வழக்கு பலத்த சர்ச்சையையும் பிரிவினையையும் ஏற்படுத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்