“நீதியை விட சிறப்பாக இருக்கிறேன்’”: ஆசிட் வீச்சுக்கு உள்ளான உக்ரைன் செயற்பாட்டாளர் மரணம்

ஆசிட் வீச்சு படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்

ஆசிட் வீச்சு

படத்தின் காப்புரிமை FACEBOOK/UAKATERYNA

மூன்று மாதங்களுக்கு முன் அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளான ஊழலுக்கு எதிரான உக்ரைன் செயற்பாட்டாளர் கடேர்னியா மரணமடைந்தார். கெர்சான் நகரத்தில் ஜுலை 31ஆம் தேதி அவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 40 சதவீத காயத்திற்கு உள்ளான அவரின் விழிகள் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. கொலையாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் கூறி இருந்தார். ஐந்து பேர் முன்னரே காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த போது அவர், "நான் மோசமான தோற்றத்தில் இப்போது இருக்கிறேன். ஆனால், என்னால் உறுதியாக சொல்ல முடியும் உக்ரைனின் நீதியை விட நான் நன்றாகதான் இருக்கிறேன். யாரும் அதை குணப்படுத்துவதில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.

சுதந்திரத்திற்கு எதிராக வாக்களித்த மக்கள்

படத்தின் காப்புரிமை AFP

பிரஞ்ச் பசிபிக் பகுதியில் உள்ள நியூ கலெடோனியா மக்கள் சுதந்திரத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரான்ஸிலிருந்து விடுதலை பெற்று தனி நாடாக அரசமைக்கலாமா அல்லது பிரானஸின் ஆளுகையிலேயே இருக்கலாமா என்பதற்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 56.4 சதவீதம் பேர் பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாம் என்று வாக்களித்துள்ளனர். இது பிரான்ஸ் குடியரசின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

இரான் மீது பொருளாதார தடை

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை இன்று இரான் மீது விதிக்கவுள்ளது. இரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது.இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும்.ஞாயிறன்று இரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர்.தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கவிஞரின் தற்கொலை கடிதம்

படத்தின் காப்புரிமை AFP

பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பெருங்கவிஞன் சார்லஸின் தற்கொலை கடிதம் 2,67,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அவர் அந்த கடிதத்தை தன் காதலி ஜென்னிக்கு எழுதி இருந்தார் 1845 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி எழுதி இருந்தார். அந்த கடிதம் எழுதப்பட்ட போது அவருக்கு 24 வயது. கடிதம் எழுதப்பட்ட அதே நாளில் தற்கொலைக்கு முயன்றவர் பிழைத்துக் கொண்டார். தான் ஏன் தற்கொலை செய்ய இருக்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் விளக்கி இருந்த அவர், "இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது, நான் மரணித்து இருப்பேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இத்தாலி புயல்

படத்தின் காப்புரிமை AFP

புயலை தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக நதியின் கரை உடைப்பெடுத்ததில் வீடு மூழ்கியதில் இரு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேர் பலியானார்கள். அதில் ஒரு வயது குழந்தையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இத்தாலி மழையின் காரணமாக 17 பேர் பலியாகி உள்ளனர். மரணித்தவர்களில் பலர், வடக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: