இந்தோனீசிய விமான விபத்து: வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு - கோபத்தில் உறவினர்கள்

இந்தோனீசிய விமான விபத்து ஏற்பட்டது எதனால்? - கருப்புப் பெட்டி தகவல் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தோனீசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தின் வேகத்தை சுட்டிக்காட்டும் கருவியில் கோளாறு இருந்தது விமானத்தின் கருப்புப் பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

லயன் ஏர் விமான சேவையின் ஜேடி 610 எண் விமானம் 189 பயணிகளுடன் இந்தோனீசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து கிளம்பியவுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

திங்களன்று நடந்த கூட்டத்தில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் இந்தோனீசிய அதிகாரிகளை விபத்து குறித்து கோபமாக பல கேள்விகளை கேட்டனர்.

அவர்கள் விமான விபத்துக்கான காரணங்களை அறிய விரும்பினர் மேலும் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினர்.

இந்த விமான விபத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

கை கூப்பி மன்னிப்பு

"நாங்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ளோம். நீங்கள் எங்கள் இடத்தில் இருப்பதுபோல் நினைத்து பாருங்கள்" என்றார் நஜிப் ஃபுகோனி என்ற ஒரு உறவினர்

லயன் ஏர் விமான சேவையின் தலைவர் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

படத்தின் காப்புரிமை EPA

அவர் பேசவில்லை தனது கையை கூப்பி உறவினர்களின் முன் தலைகுனிந்து நின்றார்.

விமானி இயக்கும் வேகத்தை காட்டும் கருவி நம்பமுடியாத நிலையில் இருந்ததாகவும், உயரத்தை அளக்கும் கருவியில் தகவல்கள் விமானி மற்றும் இணை விமானிக்கு வெவ்வேறாக இருந்ததாகவும் பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த ஆரம்பகட்டத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி விமானத்தின் இதற்கு முந்தைய இரண்டு பயணத்திலும் பிரச்சனைகள் இருந்ததாக தெரிவித்துள்ளது.

அவர்கள் இயந்திர கோளாறால் விபத்து நேர்ந்ததா அல்லது முறையற்ற பராமரிப்புகள் அல்லது வேகத்தை காட்டும் கருவியில் ஏற்பட்ட கோளாறால் ஏற்பட்டதா என்பது குறித்து கூறவில்லை.

"தற்போது விபத்துக்கான காரணங்கள் குறித்து நாங்கள் கண்டறிந்து வருகிறோம்" என விசாரணையாளர் நுர்கயோ உடோமோ தெரிவித்தார்.

நாட்டின் உள்ள அனைத்து 737 மேக்ஸ் ரக விமானங்களை சோதிக்க இந்தோனீசிய அரசு உத்தரவிட்டுள்ளது.

காத்திருப்பு

பயணிகளின் உறவினர்கள் தங்களின் அன்பிற்குரியவர்களின் உடல்களை பெற காத்திருக்கின்றனர் ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட உடல்களில் 14 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விமானி அறையில் இருக்கும் குரல் பதிவு கருவியை மீட்டுப்பணியார்கள் தேடி வருகின்றனர்.

மோசமான வான் பயண பாதுகாப்பு

தீவுகள் நிறைந்த நாடான இந்தோனீசியா விமான பயணங்களை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் அதன் விமான சேவை நிறுவனங்களின் பாதுகாப்பு மோசமான நிலையிலே இருந்து வந்துள்ளது.

லயன் ஏர் விமான சேவை 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்ளூர் விமான சேவை மற்றும் தெற்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்குக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

கடந்த காலங்களில் மோசமான நிர்வாகம் மற்றும் பராமரிப்பால் 2016ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய வான் வெளியில் பறப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

2013 ஆண்டு லயன் ஏர் விமானம் ஒன்று பாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலில் விழுந்து விபத்துள்ளானது. இருப்பினும் அதிலிருந்த 108 பேரும் உயிர் தப்பினர்.

2004ஆம் ஆண்டு ஜகார்த்தாவிலிருந்து வந்த விமானம் ஒன்று சோலோ சிட்டியில் தரையிறங்கும்போது விபத்துள்ளானதில் 25 பேர் பலியாகினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: