"நான் ஏன் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டேன்?" - காரணம் சொல்லும் அஞ்சு

சபரிமலை படத்தின் காப்புரிமை Getty Images

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: நான் ஏன் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டேன்? - காரணம் சொல்லும் அஞ்சு

பலத்த பாதுகாப்புக்கு இடையே திங்கள்கிழமை மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட செய்தி தினமணி நாளிதழில் பிரதானமாக வெளியிடப்பட்டுள்ளது.

"சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி திறக்கப்பட்டபோது, கோயிலுக்கு செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் வந்தனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு செய்து தந்தது. எனினும், பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, சபரிமலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதேபோல், ஐயப்ப பக்தர்களின் தீவிர எதிர்ப்பின் காரணமாக, சபரிமலை வந்த பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்லாமல் பாதியில் திரும்பிச் சென்றனர்.

பெண்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 3,731 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 22ஆம் தேதி சாத்தப்பட்டது.

இந்நிலையில், 3 வாரங்களுக்குப் பிறகு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சிறப்பு பூஜைக்காக திங்கள்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டது. கோயில் நடையை தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கூட்டாக மாலை 5 மணிக்கு திறந்தனர். இதையடுத்து சபரிமலையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக ஐயப்பனை வழிபடத் தொடங்கினர். பாஜக மூத்த தலைவர்கள், ஐயப்ப தர்ம சேனை தலைவர் ராகுல் ஈஸ்வர் உள்ளிட்டோர் சன்னிதானத்துக்கு வந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜைகள் எதுவும் திங்கள்கிழமை நடக்கவில்லை. கோயில் நடை இரவு 10 மணியளவில் சாத்தப்பட்டது. அதன்பிறகு கோயில் நடை செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், கோயிலில் ஸ்ரீ சித்திரை ஆட்ட திருநாள் கொண்டாடப்படவுள்ளது." என்கிறது அந்த செய்தி.

"சபரிமலையில் தரிசனம் செய்யும் திட்டத்துடன், ஆலப்புழையை சேர்ந்த அஞ்சு (30) என்ற பெண், தனது கணவர், 2 குழந்தைகளுடன் பம்பைக்கு திங்கள்கிழமை வந்தார். தமக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி, கேரள காவல்துறையை அவர் அணுகியிருப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர், சபரிமலை செல்ல தமக்கு விருப்பமில்லை, கணவரின் வற்புறுத்தலின்பேரிலேயே நான் வந்திருக்கிறேன் என்று அவர் பேட்டியளித்தார். இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அஞ்சு தங்கவைக்கப்பட்டார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அஞ்சுவின் உறவினர்களை காவல்துறையினர் அழைத்துள்ளனர்." என்று விவரிக்கிறது.

"சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு காவல்துறையினரால் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை இரவு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மூடப்படும் வரை அமலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்." என்கிறது அந்த செய்தி.

இந்து தமிழ்: 'வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி'

வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/Getty images

"தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவு கிறது. தவிர, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படு கிறது. இவற்றின் தாக்கத்தால், அதே பகுதியில் 6-ம் தேதி (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்காக நகர்ந்து இலங்கை, குமரிக் கடல் பகுதி களை 8-ம் தேதிக்குள் கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதன்மூலம் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுப்பெறும். அதன் காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் 6-ம் தேதி (இன்று) மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

7-ம் தேதி (நாளை) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். 7, 8 ஆகிய நாட்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினத்தந்தி: 'குஜராத் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தை சிக்கியது'

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"குஜராத் அரசின் தலைமைச் செயலகம், தலைநகர் காந்தி நகரின் 10-வது செக்டார் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மாநில சட்டசபை, முதல்-மந்திரி, தலைமைச் செயலாளர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தலைமைச் செயலகம் அமைந்துள்ள 50 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இந்த வன விலங்குகள் அவ்வப்போது நகருக்குள் புகுந்து பீதியை ஏற்படுத்துவதும் உண்டு.

இதுபோன்ற சம்பவம் ஒன்று நேற்று நடந்தது. அதிகாலை 2 மணி அளவில் சிறுத்தை ஒன்று தலைமைச் செயலகத்தின் இரும்பு கேட்டுக்கு அடியில் உள்ள இடைவெளி வழியாக நுழைந்து உள்ளே புகுந்தது.

இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைக்கண்ட கண்காணிப்பு அறை போலீசார் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதையடுத்து தலைமைச் செயலகத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

அங்கு உடனடியாக 350-க்கும் மேற்பட்ட வன இலாகாவினரும், போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். சிறுத்தையை பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தலைமைச் செயலக வளாகத்துக்குள் ஏராளமான மரங்களும், புதர்களும் இருந்ததால் அந்த சிறுத்தை எங்கே புகுந்தது என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் அந்த சிறுத்தை தலைமைச் செயலகத்தின் அருகே உள்ள கவர்னர் மாளிகையின் பண்ணை பகுதிக்குள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வன இலாகாவினர் அந்த சிறுத்தையின் மீது மயக்க ஊசியை செலுத்தினர். இதனால் சிறுத்தை மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தது. அந்த சிறுத்தையை வன இலாகாவினர் மீட்டு ஒரு கூண்டில் ஏற்றினர். பின்னர் அது வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.

சிறுத்தை புகுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைச் செயலக ஊழியர்கள் யாரும் நேற்று பிற்பகல் வரை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அலுவலகப் பணிகள் சுமார் 5 மணி நேரம் முடங்கியது." என்கிறது அந்தச் செய்தி.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: '17 பன்றி காய்ச்சல் மரணங்கள், 12 டெங்கு மரணங்கள்"

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு அதிகளவில் தமிழ்நாட்டில் பரவி வருவதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. டெங்குவால் இதுவரை 12 பேர் மரண்இத்து இருப்பதாகவும், 2900 பேருக்கு டெங்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், பன்றி காயச்சலால 17 பேர் மரணித்து இருப்பதாகவும் கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்