நரேந்திர மோதி முதல் பொல்சனாரூ வரை: உலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி?

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

உலகெங்கும் பழமைவாதிகளின் கை ஓங்கி வருகின்றன. பழமைவாத தலைவர்கள் கைகளுக்கு அதிகாரம் செல்கிறது, முன்பை விட அதிகாரமிக்கவர்களாக அவர்களை மாற்றுகிறது. இதற்குவயதானவர்கள், பழைய தலைமுறை மட்டுமல்ல, இளைஞர்களும்தான் காரணம்.

குறிப்பாக தீவிர வலதுசாரியான பிரேசில் தலைவர் சயீர் பொல்சனாரூவின் வெற்றி அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஆனால், இந்த வெற்றி ஒரே நாளில் நிகழ்ந்தது அல்ல. அதிகாரமிக்க சமூக அமைப்புகளின் ஆதரவில்தான் அவர் வெற்றி பெற்றார்.

போலாந்து, தாய்லாந்து, இந்தியா... ஏன் உலகெங்கும்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சயீர் பொல்சனாரூ

இது போன்ற சமூக அமைப்புகள் போலாந்து முதல் தாய்லாந்து, இந்தியா வரை அதிகாரமடைந்து வருகின்றன. அவர்கள் அதிகாரமடைய காரணம் அரசியல்வாதிகள் அல்ல சாமான்ய மனிதர்கள்தான்.

இந்த அமைப்புகளின் எழுச்சிதான், பல நாடுகளில் பழமைவாத கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற காரணமாகி இருக்கிறது.

புதிய அரசியல் கட்சிகள், ஈர்ப்பு மிக்க தலைவர்களால் தான் இந்த வலதுசாரிய கவர்ச்சி அரசியல் செயல்படுத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஹங்கேரி பிரதமர் விக்டொர் ஓர்பனை பாருங்கள், அவர் தன்னை தம் நாட்டின் காவலனாக, ஐரோப்பாவில் இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிரானவனாக தம்மை முன்னிறுத்துகிறார்.

குடிமை அமைப்புகளின் பங்கு

முன்பு குடிமை சமூகங்கள், குடிமக்கள் அமைப்புகள் தாராளவாத அமைப்புகளாக பார்க்கப்பட்டன. மக்கள் உரிமையை ஆதரிக்கும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கு உழைக்கும், சிறுபான்மையினரை பாதுகாக்கும் நோக்கம் கொண்டவையாக இது இருந்தன. இந்த முற்போக்கு நோக்கங்கள்தான் இளம் செயற்பாட்டாளர்களை ஈர்த்தன.

ஆனால், இன்று அந்த குடிமை அமைப்புகளில் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பலதரப்பட்ட அரசியல் லட்சியங்கள் உள்ளன. இவர்களில் வலதுசாரிகளும் இருக்கிறார்கள்.

பழமைவாதிகள் குடிமை அமைப்புகள் மக்களை ஈர்ப்பதற்காக பழமைவாத மதிப்பீடுகளை முன்னிறுத்துகிறார்கள். மத நம்பிக்கைகள், சாதி, தேசிய அடையாளம், குடியேற்றத்திற்கு எதிராக இருப்பது ஆகிய தளத்தில் இயங்குகிறார்கள்.

நாடுகளில் ஆதிக்கம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய்லாந்து ராணுவ ஆட்சி

இந்த பழமைவாத குடிமை சமூக குழுக்கள் பல்வேறு நாடுகளில் அரசுகளை மாற்றி அமைப்பதிலேயே முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. கார்னெஜி ஐரோப்பா இது தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கிறது. அது நமக்கு இந்த பழமைவாத அமைப்புகளை புரிந்து கொள்வதற்காக ஓர் உள் ஒளியை வழங்குகிறது.

  • இந்த பழமைவாத குழுக்களின் கூட்டணியின் தொடர் பிரசாரம்தான், பிரேசிலில் டில்மாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஊழல் செய்தார் என டில்மாவுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.
  • தாய்லாந்தில் பழமைவாத சமூக குழுக்கள்தான் அங்கு ராணுவ ஆட்சிக்கு வழி வகுத்தன.
  • இந்தியாவிலும் இதுதான் நிலை. குடியேற்றத்திற்கு எதிராக சிந்திப்பது, செயல்படுவதென, ஏறத்தாழ 40 லட்ச மக்களுக்கு குடி உரிமை ரத்து செய்த இந்திய பிரதமர் மோதியை ஆதரிப்பது அதுபோன்ற யோசனை கொண்ட இந்து பழமைவாத அமைப்புகள்தான்.
  • துருக்கியில் உள்ள இஸ்லாமிய குடிமை சமூகம், நீதி மற்றும் வளர்ச்சி கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தது.
  • போலாந்தில் அதிகாரமிக்க பழமைவாத குடிமை சமூகம் இப்போது சட்டம் மற்றும் நீதி அரசுடன் இணக்கமாக பணியாற்றுகிறது. இவர்கள் நீதித்துறையில் அளப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இவை உதாரணங்கள்தான், உலகெங்கும் பல நாடுகளில் பழமைவாத குழுக்கள் அதிகாரம் பெற்று வருகின்றன.

அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபர் பொறுப்பேற்றதில் இருந்து, கருகலைப்புக்கு எதிரான குழுக்களும், வலதுசாரி அமைப்புகள் அதிகாரமடைந்து வருகின்றன. எண்ணற்ற போராட்டங்களையும் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்களை ஈர்க்கின்றன

இதுபோன்ற பழமைவாத குழுக்கள் இப்போது பல நாடுகளில் இளைஞர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளன.

இளைஞர்கள் வலதுசாரிகளுக்காக சமூக ஊடகங்களிலும் பணியாற்றுகிறார்கள்

ஃப்ரீ பிரேசில் அமைப்புதான் சயீர் பொல்சனாரூவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியது. இந்த அமைப்பை ஃபேஸ்புக்கில் மட்டும் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள், யூ - ட்யூபில் 10 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரேசில் காங்கிரஸ்

அதுமட்டுமல்ல, பிரேசில் சமூக ஊடகத்தில் பிரபலமான தீவிர வலதுசாரியான் கிம், பிரேசில் காங்கிரஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 22தான்.

தாய்லாந்தில் சைபர் கண்காணிப்பாளர்கள் என அறியப்படும் மாணவர் குழு ஒன்று ராணுவ ஆட்சிக்கு எதிரான சமூக ஊடக பதிவுகளை உளவு பார்க்கிறது.

மொராக்கோ, துனிஷியா என பல நாடுகளில் சமூக ஊடகத்தில் துடிப்புடன் இருக்கும் இளைஞர்களுக்கும், பழமைவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது.

இதுநாள் வரை முற்போக்கு குடிமை சமூக இயக்கங்கள் இருந்த இடத்தை இப்போது வலதுசாரி குடிமை சமூக அமைப்புகள் பிடித்துவிட்டன.

(ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை மற்றும் சர்வதேச அளவில் ஜனநாயகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யும் பேராசிரியர் ரிச்சர்ட் யங்ஸ் எழுதிய கட்டுரை.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: