அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் விலகல் - "டிரம்ப் சொன்னதால்தான் ராஜிநாமா செய்தேன்"

  • 8 நவம்பர் 2018
டிரம்ப் சொன்னதால்தான் ராஜிநாமா செய்தேன்- பதவி விலகிய அமெரிக்க அட்டார்னி ஜெனரல் படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். அவரது எதிர்காலத்துக்கும் எங்களின் வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இருந்து ஜெஃப் செஷன்ஸ் தன்னை விடுவித்து கொண்ட பிறகு அவரை டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

பதவி விலகிய ஜெஃப் செஷன்ஸுக்கு பதிலாக அப்பொறுப்பில் அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணயை விமர்சித்துவந்த உயர் அரசு அதிகாரியான மேத்யூ விடேகர் தற்காலிகமாக இருப்பார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனது ராஜிநாமா கடிதத்தில் டிரம்பின் முன்னாள் ஆதரவாளரான செஷன்ஸ் , பதவி விலகல் முடிவு தனது சொந்த முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.

தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், ''அதிபர் அவர்களுக்கு, உங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நான் எனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறேன்'' என்று ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்துள்ளார்.

''நாட்டின் அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றிய காலத்தில் சட்டத்தை நாங்கள் நிலைநிறுத்தியுள்ளோம்'' என்று டிரம்புக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் ஜெஃப் செஷன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Image caption பதவி விலகிய அமெரிக்க அட்டார்னி ஜெனரல்

அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு முன்பாக வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியான ஜான் கெல்லி ஜெஃப் செஷன்ஸஸை தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளி மளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்பு நடந்தது என்ன?

அமெரிக்க அட்டார்னி ஜெனரலாக இருந்த ஜெஃப் செஷன்ஸ், 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த விசாரணையில் இருந்து, 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தானாகவே விலகினார்.

அதன் பின்னர் ஜெஃப் செஷன்ஸ் மற்றும் அதிபர் டொனல்ட் டிரம்ப் ஆகியோர் இடையே பலமுறைகள் கருத்து ரீதியான மோதல்கள் நடந்து வந்தது.

ஜெஃப் செஷன்ஸின் கட்டுப்பாட்டில் அவரது துறை இல்லை என்று ஒருமுறை டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பதிலாக வெளிப்படையான கண்டிப்பு செஷன்ஸ் தரப்பில் இருந்து வந்தது. அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான் அளித்த பதிலில் ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்தது பரபரப்பை உருவாக்கியது.

அமெரிக்க நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வந்துள்ளார்.

குறிப்பாக 2016-ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை நீதித்துறை கையாளும் விதம் குறித்து அவர் விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதிபர் டிரம்பின் ஆதரவாளராக முன்பு இருந்துவந்த செஷன்ஸ், பாரபட்சமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த விசரணையில் இருந்து விலகி, துறையில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள ராட் ரான்ஸ்டெனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.

ரஷ்யா குறித்த விசாரணை

ஜெஃப் செஷன்ஸ் பதவி விலகியது 2016ம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டு மீதான விசாரணையைப் பாதிக்கும் என்று சில ஜனநாயகக் கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர். பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்சி பெலோசி இந்த விசாரணையை முடக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: