அதிபர் டிரம்புடன் வாக்குவாதம்: சிஎன்என் செய்தியாளருக்கு தற்காலிக தடை

  • 8 நவம்பர் 2018
டிரம்ப் படத்தின் காப்புரிமை Isaac Brekken/Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்போடு நடைபெற்ற கடும் வாக்குவாதத்திற்கு பின்னர் சில மணிநேரங்களில் வெள்ளை மாளிகையின் சிஎன்என் செய்தி ஊடக தலைமை செய்தியாளர் ஜிம் அகோஸ்டாவின் சான்று ஆவணங்களை வெள்ளை மாளிகை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜிம் அகோஸ்டா கேள்வி எழுப்பியபோது, அவருடைய கைகளில் இருந்த ஒலிவாங்கியை வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவர் பறிக்க முயன்றார்.

ஓர் இளம் பெண் மீது அவர் கை போட்டதால் இந்த செய்தியாளரின் நுழைவு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற கீழவையில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையை இழந்தாலும், மேலவையில் அதிக தொகுதிகளில் வென்றிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல் பற்றி அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது,

செய்தியாளர் சந்திப்பில் நடைந்தது என்ன?

மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்கா நோக்கி வரும் தஞ்சம் கோருவோரை விவரிக்க "படையெடுப்பு" என்ற சொல்லை டிரம்ப் பயன்படுத்தியது பற்றி அகோஸ்டா கேள்வி எழுப்பினார்.

பரவலாக இனவெறியாக பார்க்கப்படும் குடியேற்ற விளம்பரம் பற்றியும் அவர் கேள்வி கேட்டார்.

படத்தின் காப்புரிமை Win McNamee/Getty Images
Image caption பத்திரிகை அலுவலக செயலாளர் சாரா சாண்டர்ஸ்

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில்போது ரஷ்யாவின் தலையீடு தொடர்பான புலனாய்வு பற்றி அகோஸ்டா கேள்விகேட்டபோது, "இது போதும். ஒலிவாங்கியை கீழே வையுங்கள்" என்று டிரம்ப் அவரிடம் கூறினார்.

பெண் ஊழியர் ஒருவர் பத்திரிகையாளரிடம் இருந்து ஒலிவாங்கியை பிடுங்க முயன்றார். அகோஸ்டா அவ்வாறு செய்வதை எதிர்த்தார்.

"உங்களை வேலை செய்ய நியமித்ததற்கு சிஎன்என் வெட்கப்பட வேண்டும். நீங்கள் முரட்டுத்தனமானவர், பயங்கரமானவர்" என்று கூறிய அதிபர் டிரம்ப், தன்னுடைய செய்தி செயலரிடம் அகோஸ்டா மோசமாக நடந்து கொண்டதாக கூறினார்.

அகோஸ்டாவின் செயலை நியாயப்படுத்தி பேசிய இன்னொரு செய்தியாளரிடம், "நான் உங்களுடைய பெரிய ரசிகனும் அல்ல" என்று டிரம்ப் கூறியபோது அங்கு சிப்பலை எழுந்தது.

வெள்ளை மாளிகை சொல்வதென்ன?

தனது பணியை செய்ய முயலுகின்ற இளம் பெண்ணொருவரின் மீது செய்தியாளார் கைகள் வைத்திருந்ததை வெள்ளை மாளிகை ஒருபோதும் பொறுத்து கொள்ளாது என்று சாண்டர்ஸ் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Raymond Boyd/Getty Images

இந்த செயல் அருவருப்பானது மட்டுமல்ல, இந்த நிர்வாகத்தில் பணிபுரியும் இளம் பெண்கள் உள்பட அனைவரையும் அவமதிப்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் விளைவாக அடுத்த அறிவிப்பு வரும்வரை, இந்த செய்தியாளருக்கு வழங்கப்படுள்ள நுழைவு அனுமதியை (hard pass) ரத்து செய்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை மாளிகை வளாகத்தில் நுழைவதில் இருந்து பாதுகாப்பு துறையால் தடுக்கப்பட்டதாக அகோஸ்தா டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

அகோஸ்டா மற்றும் சிஎன்என் சொல்வதென்ன?

தான் கேள்விகள் கேட்பதை அதிபர் டிரம்ப் விரும்பாததால், தங்ளுக்கிடையில் விவாதம் ஏற்பட்டது என்று அகோஸ்டா சிஎன்என்-ல் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிம் அகோஸ்டா செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.

"பெண் மீது கைகளை வைக்கவில்லை" என்று கூறிய அகோஸ்டா, "அதிபரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்பதற்கு ஒலிவாங்கியை கையில் வைத்திருக்க முயன்றேன்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் இந்த தடை நடவடிக்கை ஜிம் அகோஸ்டாவின் சாவால்மிக்க கேள்விகளுக்கு பதிலடியாக வழங்கப்பட்டுள்ளது என்று டுவிட்டரில் சிஎன்என் பதிவிட்டுள்ளது.

சாரா சாண்டர்ஸ் தவறுதலான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருப்பதாகவும், நடைபெறாத சம்பவத்தை குறிப்பிட்டிருப்பதாகவும் சிஎன்என் விளக்கமளித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் இந்த முடிவு முறையற்றது, ஏற்று கொள்ள முடியாதது என்று அதிபர் மாளிகை செய்தியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டமைப்பு கூறியுள்ளது.

பலவீனமான, தவறான இந்த தடை நடவடிக்கையை வெள்ளை மாளிகை உடனடியாக திரும்பபெற வேண்டுமென அது வலியுறுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: