தென் ஆப்பிரிக்காவில் சிங்கங்கள் துரத்தியதில் நீரில் மூழ்கி 400 எருமைகள் உயிரிழப்பு

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

நீரில் மூழ்கிய 400 எருமைகள்

படத்தின் காப்புரிமை SERONDELA LODGE

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸவானா மற்றும் நமிபியா நாடுகளுக்கு இடையில் உள்ள நதி ஒன்றில் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கின.

இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில், சிங்கங்களால் துரத்தப்பட்டபோது ஓடியதில் இவை ஆற்றில் மூழ்கியதாக போட்ஸ்வானா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆற்றின் மறுபக்கத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததினால் எருமைகள் பதறிபோய் நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என அப்பகுதியில் தங்கும் விடுதி வைத்திருக்கும் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதற்கு முன் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கியதாக கேள்விப்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை SERONDELA LODGE

சுமார் 400 எருமைகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் வாழும் மக்கள் இறந்த எருமைகளை வீட்டிற்கு சமைக்க எடுத்துச் சென்றனர்.

கலிஃபோர்னியா காட்டுத்தீ

படத்தின் காப்புரிமை CAL FIRE/TWITTER

சியரா மலைஅடிவாரத்தின் பல்வேறு நகரங்களை நோக்கி காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், வட கலிஃபோர்னியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இதுவரை உயிரிழப்பு ஏதும் இருக்கவில்லை.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிக்க முயற்சி

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஒட்டிப்பிறந்த நிமா மற்றும் டவா பெல்டன்

ஒட்டிப்பிறந்த இரு புடானிய குழந்தைகளை பிரிக்கும் முயற்சியை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.

பிறந்து 15 மாதங்கள் ஆகும் நிமா மற்றும் டவா பெல்டன் உடல் ஒட்டிப்பிறந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு கல்லீரல் மற்றும் குடலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணங்களால் இதுவரை அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தது.

குடியேறிகளுக்கு தஞ்சம் மறுக்கும் புதிய விதி: டிரம்ப் கண்டிப்பு

படத்தின் காப்புரிமை AFP/getty

குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய விதியின்படி, நாட்டின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான அதிபரின் தடையை மீறும் நபர்களுக்கு புகலிடம் மறுக்க இயலும்.

தேசிய நலனை கருத்தில் கொண்டு அதிபர் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தலாம் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

அதிபர் டொனால்ட் டிரம்பின் 2018 அமெரிக்க இடைக்கால தேர்தல் பிரச்சாரத்தில் குடியேற்றம் முக்கிய கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: