தாலிபன், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பலனளிக்குமா?

  • 9 நவம்பர் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்கானிஸ்தானில் அமைதியை மீட்டெடுப்பதற்காக, பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளும் மாநாட்டிற்கு ரஷ்யா ஏற்பாடு செய்திருக்கிறது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக பல நாடுகளின் பிரதிநிதிகள் மாஸ்கோ சென்றடைந்தனர். ஆனால், இந்த மாநாட்டில் மூன்று தரப்பில் இருந்தும் அதிக அளவிலான பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக தெரிகிறது.

இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்துக் கொள்வதாக இந்தியா கூறியிருக்கிறது.

இந்த மாநாட்டில் ஆஃப்கானிஸ்தான் நேரடியாக கலந்து கொள்ளாது. ஆப்கானிய அரசாங்கம் மாஸ்கோவிற்கு ஒரு சுயாதீனமான பிரதிநிதிக் குழுவை அனுப்பியுள்ளது.

தாலிபன் அமைப்பின் "மிக மூத்த தலைவர்கள்" சிலர், கத்தாரில் இருந்து மாஸ்கோ செல்கின்றனர். இந்த மூன்று தரப்பினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

2001இல் தாலிபன்கள், அரசை நிராகரித்த பிறகு, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த விரும்பும் சமாதான ஆதரவாளர்கள் தாலிபனுடன் இணைந்து கலந்துக் கொள்ளும் முதல் கூட்டம் இது.

அதேபோல், இந்தியா முதன் முறையாக அதிகாரபூர்வமற்ற முறையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறது என்பதோடு, தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA

இந்தியாவின் பங்கு என்ன?

இந்தியாவின் இந்த நிலைப்பாடு தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமையன்று விளக்கமளித்தார். இந்தியா அதிகாரபூர்வமற்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாகவும், தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை" என்றும் அவர் கூறினார்.

"ஆப்கானிஸ்தானில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சியையும் இந்தியா ஆதரிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

"அந்த முயற்சிகள், ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதோடு, அந்நாட்டின் பாதுகாப்பு, உறுதிப்பாடு மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவதாக இருக்கவேண்டும். ஆப்கானிஸ்தானின் தலைமையில், அதற்கு சொந்தமான, அந்நாட்டின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட வேண்டும்; ஆஃப்கன் அரசின் பங்களிப்புடன் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது இந்தியாவின் நிலையான கொள்கை" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரிகள் கொண்ட குழு நாட்டின் சார்பில் மாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை EPA

மாநாடு நடப்பதற்கான காரணம் என்ன?

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் பங்களிப்பை அதிகரிக்க ரஷ்யா மேற்கொள்ளும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.

ரஷ்ய-இஸ்ரேலிய எழுத்தாளர் இஸ்ரைல் ஷாமீர், ரஷ்ய சார்பு ஊடக அமைப்பு ஒன்றில் எழுதிய கட்டுரையில், "இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ளவும், ஆஃப்கனில் நீண்ட காலமாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும், ரஷ்யா ஆப்கானிஸ்தானுக்கு உதவ முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், இந்த மாநாட்டினால் பெரிய அளவு நன்மை ஏற்படும் என்று ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை. ஏனெனில் தாலிபன்களுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்குவதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்படுகிறது.

செய்தித் தொலைகாட்சி டோலோ நியூஸிடம் பேசிய ஆஃப்கன் நாடாளுமன்ற உறுப்பினர் சலேஹ் முகமது சலேஹ், "ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு சக்திவாய்ந்த நாடுகளிடையில் போட்டி நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மட்டுமே இருப்பதை ரஷ்யா விரும்பவில்லை. இந்த பின்னணியில் பார்க்கும்போது, ஆஃப்கனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது" என்று தெரிவித்தார்.

எதிர்பார்ப்புகள் என்ன?

செப்டம்பர் நான்காம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாடு, நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி போடப்பட்டு, பிறகு நவம்பர் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆஃப்கனும், அமெரிக்காவும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், ரஷ்யாவுக்கு தனது அணுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தானில் உள்ள பல மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தேசிய நல்லிணக்கத்தை நிறுவுவது இந்த மாநாட்டின் நோக்கம் என்று ரஷ்யா கூறுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர், இந்த மாநாடு ரஷ்யாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் என்று கூறியிருந்தார்.

மாநாட்டின் பங்கேற்பாளர்கள் யார்?

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று இரான், சீனா, பாகிஸ்தான், தஜகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரஷ்ய அழைப்பை ஏற்று எத்தனை நாடுகள் மாஸ்கோ மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்பது தெரியவில்லை.

நவம்பர் ஆறாம் தேதியன்று தாலிபன் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பு ரஷ்யாவிடம் இருந்து கிடைத்துள்ளதாகவும், தங்களது பிரதிநிதி ஒருவர் மாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாலிபனின் அரசியல் தூதுவர் ரஷ்யாவுக்குச் செல்வார், அவர், அங்கு வரும் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பொருள் கொள்ளக்கூடாது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா முகாமிட்டிருப்பது பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும். அதோடு, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்படும்".

எனினும், தாலிபன்கள் ஆஃப்கனில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதை இதுவரை நிறுத்தவில்லை. இந்த ஆண்டு, காஜி, ஃபராஹ், குந்தூஜ் மற்றும் உரூஹகான் என பல இடங்களில் பெரிய அளவிலான தாக்குதல்களை தாலிபன் நடத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images

நிபுணர்களின் கருத்து என்ன?

ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபன் தொடர்பான விவகாரங்களில் ஆழமான புரிதலைக் கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் ரஹிமுல்லா யூசுஃப்சாயுடன் பிபிசி பேசியது. மாஸ்கோ மாநாட்டை பெரிய அளவில் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் அவர்.

மாஸ்கோ மாநாடு பற்றிய ரஹிமுல்லா யூசுஃப்சாயின் கருத்துக்கள்:

இந்தியா, இரான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்வார்கள். தாலிபன்களின் கருத்துகள் கேட்கப்படும். ஆப்கானிஸ்தானில் தாலிபன் எவ்வாறு அமைதியை ஏற்படுத்த விரும்புகிறது என்று கேட்டறியப்படும். ஆனால், மாஸ்கோ மாநாட்டின் மூலம் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிறுவுவது மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாது என்றே நான் கருதுகிறேன்.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்கா இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பாது. அதுமட்டுமல்ல, ஆஃப்கன் அரசு, தாலிபன் மற்றும் அமெரிக்கா இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, அவை அனைத்தும் இணைந்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் வரை, ஆஃப்கனில் பிரச்சனையை தீர்க்க முடியாது. அதுவரை அங்கு அமைதி என்பது கானல்நீராகவே இருக்கும்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அண்மையில் கஜ்னி நகரில் தாலிபன்கள் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தி, சில நாட்கள்வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்

அமெரிக்கா தற்போது கத்தார் நாட்டில் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆப்கானிஸ்தானின் இரண்டு முக்கிய பங்காளிகளும், தங்களுக்குள்ளே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பதே தாலிபன்களின் முக்கிய கோரிக்கை. வெளிநாட்டுப் படைகள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது. இதை அமெரிக்கா மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தாலிபன் அமைப்பு கூறுகிறது.

இதனால்தான், தாலிபன் அமைப்பு ஆஃப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஆனால், அரசின் மூலமாக தாலிபன்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதனால் பேச்சுவார்த்தைகளில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. எது எப்படியிருந்தாலும், மாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டை விட, கத்தாரில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலேயே ஒரு முடிவு ஏற்படும் என்பதற்கான சாத்தியங்களே அதிகமாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :