கயானா விமான விபத்து: ஃப்ளை ஜமைக்கா விமானத்தில் 6 பேர் காயம்

  • 9 நவம்பர் 2018
விபத்துக்குள்ளான விமானம் படத்தின் காப்புரிமை AFP

கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து கனடாவின் டொரொன்டோ நகருக்குப் புறப்பட்ட ஃப்ளை ஜமைக்கா விமானம் கிளம்பிய உடனே தரையில் மோதியதில் ஆறு பேருக்கு உயிருக்குப் பாதிப்பில்லாத காயங்கள் ஏற்பட்டன.

செத்தி ஜகன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு (கிரீன்விச் நேரப்படி 6.00 மணி) புறப்பட்ட இந்த விமானம் உடனே அவசரமாக தரையிறங்கியது.

போயிங் 757 வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 2 சிசுக்கள் உள்பட 126 பேர் இருந்தனர். இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறங்கியது.

தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டதாகவும், அனைத்துப் பயணிகளும், விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கயானா போக்குவரத்து அமைச்சர் டேவிட் பேட்டர்சன் தெரிவித்தார். அவர்களின் நிலைமையில் கவலை ஏதும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரண்டு வாரங்களில் விபத்துக்கு உள்ளாகும் இரண்டாவது போயிங் விமானம் இது. அக்டோபர் 29-ம் தேதி லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானம் ஒன்று இந்தோனீசியாவில் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து ஆராய்ந்து வருவதாக போயிங் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: