முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்த கடிதங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்த கடிதங்கள் படத்தின் காப்புரிமை Alamy

நான்கு வருடங்கள் நடந்த, அதுவரை உலகம் கண்டிராத முதலாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நூறு வருடங்களாகிறது. இந்நிலையில், முதலாம் உலக போரின் முடிவுக்கு வித்திட்ட கடிதங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

பலவீனமான நிலையை நோக்கி

ஜூலை 28, 1914ஆம் ஆண்டு துவங்கிய முதலாம் உலகப்போர் 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. 1918ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க படைகளின் வருகையால் முற்றிலும் பலவீனமான நிலையை நோக்கி சென்ற ஜெர்மனியின் தோல்வியை அதன் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டனர்.

மின்னணு சாதனங்கள் ஏதுமில்லா அந்த காலத்தில், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்தொடர்பு முறையாக கருதப்பட்ட கடித போக்குவரத்தின் மூலம் இரத்தம் நிரம்பிய போர்க்களத்தை அமைதியடைய வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முறையான பேச்சுவார்த்தைகள் 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகிலுள்ள ஒரு ஆடம்பரமான ரயிலில் நடைபெற்றது.

மத்தியாஸ் எர்ஸ்பெர்கர் தலைமையிலான ஜெர்மன் பிரதிநிதிகளுக்கு அப்போது இருந்த சூழ்நிலையில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட கடினமான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதை விட வேறு வழியில்லை.

வரலாற்றில் மிகவும் முக்கியமான அந்த தினத்திற்கு பிறகு பிரிட்டனின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ஜார்ஜ் என்பவர் தனது மனைவி அரபெல்லாவுக்கு கடிதமொன்றை எழுதினார்.

கடிதம்

அதில் "எர்ஸ்பெர்கர் மிகவும் தயக்கமுடன் காணப்பட்டதாகவும், அட்மிரல் சோகமாகவும், ராஜதந்திரி எச்சரிக்கையுடனும், கடற்படை அதிகாரி மிகுந்த கோபத்துடனும் காணப்பட்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து பிரிட்டன் தரப்பு திருப்திகரமாக உணர்ந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெர்மானிய பிரநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அதுபோன்ற ஆடம்பரமான ரயில் அங்கிருந்து சுமார் 100 அடிகள் தொலைவில் இருந்தது.

"ஜெர்மனியின் தரப்பில் அந்நாட்டு ராணுவம் மற்றும் கடற்படையை சேர்ந்த கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பப்பட்டதற்காக அவர்கள் மீது நாங்களும் பிரெஞ்சு தரப்பினரும் கடும் கோபத்தில் இருந்தோம்."

கையில் ஒரேயொரு கோப்புடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக வந்த ஜெர்மனி தரப்பினரை நாங்கள் "சற்றே கடினமாகவும், அதே சமயத்தில் மரியாதையுடனும் வரவேற்றோம்."

இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் வணக்கங்களை பரிமாறிக்கொண்ட பிறகு மேசையின் எதிரெதிர் பகுதிகளில் அமர்ந்ததாக பிரிட்டன் தரப்பில் பங்கேற்ற அட்மிரல் ஜார்ஜ் கூறுகிறார்.

"அதன் பிறகு ஜெர்மன் பிரதிநிதிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் படித்து காட்டப்பட்டன. தங்களது ராணுவத்தின் நிலை மோசமான நிலையிலுள்ளதை அப்போது உணர்ந்திருந்த அந்த பிரதிநிதிகள் நாங்கள் கூறிய பெரும்பாலான நிபந்தைகள் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிந்திருந்தபோதிலும் சற்றே பரபரப்படைந்து காணப்பட்டனர்."

படத்தின் காப்புரிமை BRITISH LIBRARY

முதலாம் உலகப்போர் முடிவுறுவதற்கு வித்திட்ட விடயங்கள் குறித்த தகவல்களை கொண்ட அட்மிரல் ஜார்ஜ் எழுதிய கடிதங்களை லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியரான பீட்டர் லிட்லே, 1979ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது 'டெஸ்டினோமி ஆஃப் வார்' என்ற புத்தகத்தில் இணைத்திருந்தார்.

"அட்மிரல் ஜார்ஜ் மற்ற அனைவரையும் விட மிகவும் அழகாக, நேர்த்தியாக பதிவு செய்திருந்தார்" என்று பிபிசியிடம் பேசிய பீட்டர் கூறினார்.

"இது ஒரேயொரு மனிதரின் அனுபவம் மட்டுமல்ல, சிறிய அளவில் நடந்த பல நிகழ்வுகளில், முக்கியமான ஒன்றின் மூலமாக செயல்பட்ட ஒருவரது அனுபவம்."

வரலாறு காணாத மிகப் பெரிய போரின்போது எழுதப்பட்ட ஐந்து முக்கிய கடிதங்களாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஜே எவன்ஸ், ராயல் மெயில் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இந்த கடிதமும் இடம்பெற்றுள்ளது.

"போரில் ஈடுபட்ட அனைத்து நாடுகளும் தபால் சேவையை கொண்டிருந்தன" என்று பேராசிரியர் எவன்ஸ் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை US ARCHIVE

"உலகம் முழுவதும் பிரிட்டனின் பேரரசு பரவியிருந்த பகுதிகளில் கடிதங்களின் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறிதளவு ராணுவ பயிற்சி கொடுக்கப்பட்ட பெரிய பதவிகளும் வழங்கப்பட்டன."

"படையினரிடையே மனவுறுதியை தக்கவைப்பதற்கும், உயரதிகாரிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கும் அவசியமான ஒன்றாக துருப்புகளிடமிருந்து கடிதங்களை பெறுவதும், கொடுப்பதும் கருதப்பட்டது."

முதலாம் உலகப்போரில் அமெரிக்கா இணைந்தவுடன் பிரான்ஸ், பிரிட்டன் படைகள் வலுப்பெற்றதால் அடுத்தடுத்த தாக்குதல்களை தாங்க முடியாத ஜெர்மானிய படைகள் பின்வாங்க ஆரம்பித்தன.

மேலும், ஜெர்மனிக்கு ஆதரவு வழங்கிய பல்கேரியா உள்ளிட்ட மற்ற நாடுகள் போரிலிருந்து பின்வாங்க ஆரம்பித்ததால் ஜெர்மனி தனிமைப்படுத்தப்பட்டது.

1918ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி ஜெர்மனியின் வெளிவிவகாரச் செயலர் பால் வான் ஹின்ட்ஸின் இராணுவ தலைமையக பிரதிநிதிகளுக்கு அனுப்பிய ஒரு தந்தியில், "பல்கேரியாவில் இருந்து வந்த சமீபத்திய தகவல்களின்படி, அங்கிருந்து நமது படையினரை திரும்ப பெற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

"அரசியல்ரீதியாக பார்க்கும்போது, நமது படைகளை அங்கு வைத்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை" என்று அவர் கூறிய சில நாட்களில் சமாதானத்திற்கு ஜெர்மனி அழைப்பு விடுத்தது.

அதைத்தொடர்ந்து ஜெர்மன் இளவரசர் மாக்ஸ் வோன் பேடன் அமெரிக்க அதிபர் உட்ரோவ் வில்சனுக்கு அவரது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக கூறி கடிதம் எழுதினார்.

"மேலதிக இழப்புகளை தவிர்க்கும் வகையில் ஜெர்மனியின் அரசாங்கம் உடனடியாக தரை, கடல் மற்றும் ஆகாய தாக்குதல்களை நிறுத்துமாறு கோரிக்கை வைத்தது" என்று ஜார்ஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உட்ரோவ் வில்சன்

"ஜெர்மனியின் படைகள் தங்களது கூட்டாளிகளின் ஆதரவுடன் மேலும் சில காலம் தாக்குப்பிடிக்க முடியுமென்று நினைத்தன. ஆனால், தாங்கள் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தவுடன் அமைதி பாதைக்கு திரும்பினர்" என்று பேராசிரியர் எவன்ஸ் கூறுகிறார்.

ஜெர்மனியில் அச்சமயத்தில் அமைந்த புதிய அரசாங்கம் தங்களது கோரிக்கையை ஏற்று அமெரிக்கா ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் நிபந்தனைகளை விதிக்குமென்று எதிர்பார்த்தனர்.

அச்சமயத்தில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் அரசர் கார்ல் ஜெர்மனியின் அரசுக்கு எழுதிய கடிதத்தில், "எங்களது நாட்டின் மக்கள் இந்த போரில் தொடர்ந்து செயல்படுவதற்கு முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்பதை தெரிவிப்பது எனது கடமை" என்று குறிப்பிட்டிருந்தார்.

"நாம் எதிர்பார்த்ததை போன்ற பலன்கள் ஏதும் கிடைக்கும் சூழ்நிலை நிலவாததால் மக்களது முடிவை எதிர்க்கும் அதிகாரம் என்னிடம் இல்லை."

"எனது மனசாட்சி கூறுவதை மீறி தேவையில்லாமல் இரத்தத்தை சிந்தும் இந்த போரில் செயல்படுவதை நான் குற்றமாக கருதுகிறேன்" என்று அவர் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதமே பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு பிரதிநிதிகள் அமெரிக்க அதிபரை தொடர்பு கொண்டு ஜெர்மனிக்கு மேலும் கடுமையான நிபந்தைகளை விதிப்பதற்கு காரணமாகியது என்று பேராசிரியர் எவன்ஸ் கூறுகிறார்.

பலவீனமான படையை கொண்டிருந்த ஜெர்மானியர்கள் அமெரிக்காவின் நிபந்தைகளை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஐந்தாவது கடிதம், முதலாம் உலகப்போர் நிறுத்த அறிவிப்பு உலகம் முழுவதும் சென்றடைவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டதை விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :